குமரியில் வாகன சோதனையில் 1 லட்சம் மதிப்பிலான 2 கிலோ வெள்ளி பொருட்கள் பறிமுதல்
Recommended Video

கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே கரியமானிக்கபுரம் பகுதியில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் நடத்திய வாகன சோதனையில் உரிய ஆவணங்கள் இன்றி இரு சக்கர வாகனத்தில் எடுத்து செல்லப்பட்ட 1 லட்சம் மதிப்பிலான 2 கிலோ வெள்ளி பொருட்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
தமிழகத்தில் மக்களவை தேர்தல் வரும் ஏப்ரல் 18 ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ளது, இதற்கான அறிவிப்பை தேர்தல் ஆணையம் வெளியிட்ட கடந்த 10-ஆம் தேதி முதல் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்தது, தேர்தல் விதிமீறல்களை கண்காணிக்க கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள 6 சட்டமன்ற தொகுதிகளிலும் 1 தொகுதிக்கு 3 பறக்கும் படைகள் வீதம் மொத்தம் 18 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டு உள்ளது.

அதன்படி மாவட்டம் முழுவதும் பறக்கும் படை அதிகாரிகள் குழு தீவிர வாகன சோதனை மற்றும் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் படி நாகர்கோவில் அருகே கரியமாணிக்கபுரம் பகுதியில் தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டு இருந்த போது அந்த வழியாக வந்த இரு சக்கர வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தனர்.
அப்போது இருசக்கர வாகனத்தில் எந்த வித ஆவணங்களும் இன்றி 1 லட்சம் ரூபாய் மதிப்புடைய 2 கிலோ வெள்ளி பொருட்கள் எடுத்து சென்றது தெரிய வந்தது, இதனை தொடர்ந்து வெள்ளி பொருட்களை பறிமுதல் செய்த அதிகாரிகள் அவற்றை நாகர்கோவிலில் உள்ள வட்டாட்சியர் அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.

வெள்ளிப்பொருட்களை எடுத்து வந்த ஆந்திரா மாநிலம் நல்லூர் பகுதியை சேர்ந்த ராமமூர்த்தி என்பவரிடம் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
குமரிமாவட்டத்தில் கடந்த 10 ஆம் தேதி முதல் இதுவரை அதிகாரிகள் நடத்திய சோதனையில் 5 ஆட்டோ 8 சொகுசு கார்கள் மற்றும் 85 லட்சத்து 89 ஆயிரத்து 585 ரூபாய் மற்றும் 39 கிராம் தங்கம், 29 உயர் ரக மதுபாட்டில்கள், 3 கிலோ 300 கிராம் வெள்ளி பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன.












Click it and Unblock the Notifications