பிறப்பு சான்றிதழில் பிரச்சனையா.. வாய்ப்பை மிஸ் பண்ணிடாதீங்க.. கலெக்டர் அறிவிப்பு
கன்னியாகுமரி: குழந்தை பிறந்து 1 ஆண்டுக்குள் பெயர் பதிவு செய்து பிறப்பு சான்றிதழ் பெற வேண்டியது கட்டாயம் ஆகும். அப்படி பெயர் பதிவு செய்யப்பட்ட பிறப்புச் சான்றிதழ் மட்டுமே முழுமையான பிறப்புச் சான்றிதழ் ஆகும். குழந்தை பிறந்து 12 மாதங்களுக்கு பின் 15 ஆண்டுகளுக்குள் பெயர் பதிவு செய்யாமல் பிறப்பு சான்றிதழ் வாங்கியவர்கள். பெயருடன் பதிவு செய்ய வரும் டிசம்பர் 31ம் தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாக கன்னியாகுமரி கலெக்டர் தெரிவித்துள்ளார்.
கன்னியாகுமரி மாவட்ட கலெக்டர் அழகுமீனா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- குழந்தை பிறந்து 1 ஆண்டுக்குள் பெயர் பதிவு செய்து பிறப்பு சான்றிதழ் பெற பிறப்பு அரசு சட்டத்தில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. குழந்தையின் பெயர் பதிவு செய்யப்பட்ட பிறப்புச் சான்றிதழ் மட்டுமே முழுமையான பிறப்புச் சான்றிதழ் ஆகும். குழந்தை பிறந்து 12 மாதங்களுக்கு பின் 15 ஆண்டுகளுக்குள் ரூ.200 கால தாமதக் கட்டணம் செலுத்தி குழந்தையின் பெயரினை பதிவு செய்திடலாம்.

15 ஆண்டுகளுக்கு மேல் குழந்தையின் பெயரினை பதிவு செய்திட முடியாது. குழந்தை பிறந்து 15 ஆண்டுகள் நிறைவடைந்த பின்னும் பெயர் பதிவு செய்யப்படாத நிகழ்வுகளுக்காக, தமிழ்நாடு பிறப்பு இறப்பு விதிகள் 2000-ல் தேவையான திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு உள்ளது.
பெயர் இல்லாத பிறப்பு சான்றிதழ்: அதன்படி மேலும் 5 ஆண்டுகள் 1.1.2020 முதல் 31.12.2024 வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இனிவரும் காலங்களில் இதுபோன்ற கால அவகாச நீட்டிப்புகள் வழங்கப்பட இயலாது என இந்திய தலைமைப்பதிவாளரால் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக ஊராட்சி மற்றும் பேரூராட்சி பகுதிகளில் நிகழ்ந்த பிறப்புகளுக்கு நாகர்கோவில் கிருஷ்ணன்கோவிலில் உள்ள மாவட்ட சுகாதார அலுவலர் அலுவலகத்திலும் மற்றும் மாநகராட்சி, நகராட்சி பகுதிகளில் நிகழ்ந்த பிறப்புகளுக்கு சம்பந்தப்பட்ட மாநகராட்சி மற்றும் நகராட்சி அலுவலகங்களில் விண்ணப்பித்து பெயருடன் கூடிய பிறப்புச் சான்றிதழை பெற்றுக்கொள்ளலாம்" இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.
பிறப்பு சான்றிதழ் பெயர் மாற்றம்: இதனிடையே பிறப்பு சான்றிதழில் ஏதேனும் தவறு உள்ளது என்றால், அல்லது பெயரை மாற்ற வேண்டும் என்று நினைத்தால், அது குழந்தை பிறந்த சில மாதங்களிலேயே செய்து கொள்ள வேண்டும். பிறப்பு சான்றிதழில் பிழை இருந்தால், அந்த பிழையை குழந்தை பிறந்த ஒரு வருடத்திற்குள் திருத்திவிடுவது நல்லது.. இதற்கு பிறப்பு பதிவாளரை அல்லது, சுகாதார ஆய்வாளர் அல்லது கிராம நிர்வாக அலுவலர் இவர்களில் யாரையாவது அணுகலாம். அதற்கு குழந்தையின் பெற்றோரின் அடையாள சான்று, மருத்துவமனையில் பிறந்த குழந்தை என்றால் டிஸ்சார்ஜ் சம்மரி போன்றவற்றை இணைத்து தந்தால் போதும். அவைகளை சரிபார்த்து, உங்கள் மனுவையும் ஏற்று, பிழையையும் திருத்தலாம்.
பிறப்பு சான்றிதழ் பெயர் திருத்தம்: ஆனால் ஒரு வேளை பெயரை திருத்தாமல் விட்டுவிட்டீர்கள் என்றால், பல வருடங்கள் ஆகிவிட்டது. இப்போது முழு பெயரையும் மாற்ற வேண்டும் என்றால் அதற்கும் வழிகள் இருக்கிறது. இதில் உங்கள் பெயரை அரசாங்க கெஜட்டில் முழுமையாக மாற்றிக்கொள்ள முடியும். www.stationeryprinting.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். அதற்கு பழைய பெயருக்கு உண்டான பிறப்பு சான்றிதழ் நகல்/கல்வி சான்றிதழ் நகல்/சாதி சான்றிதழ் நகல் இணைக்க வேண்டும். வீட்டு விலாசத்திற்கு ஆதாரமாக உணவு பங்கீட்டு அட்டை, வாக்காளர் அடையாள அட்டை,ஆதார் அட்டை நகல், கடவுச்சீட்டு நகல் ஆகியவற்றின் சுய சான்றொப்பமிட்ட நகல் இணைக்க வேண்டும். கெஜெட்டில் பெயர் மாற்றம் செய்ய வேண்டும் என்றால் அதற்கு 750 கட்டணம் ஆன்லைனில் செலுத்த வேண்டும்.












Click it and Unblock the Notifications