கன்னியாகுமரி டூ திண்டுக்கல்.. வந்தே பாரத் ரயிலில் கன்னியாஸ்திரியின் லேப்டாப்பை திருடிய பெரும் புள்ளி
கன்னியாகுமரி: கன்னியாகுமரி சின்னமுட்டம் பகுதியை சேர்ந்த சுமார் 40 வயதான கன்னியாஸ்திரி ஒருவர் கடந்த ஜூன் 1-ந்தேதி திண்டுக்கல் செல்வதற்காக நாகர்கோவில் சந்திப்பு ரயில் நிலையத்தில் வந்தே பாரத் ரயிலில் ஏறியிருக்கிறார். அவர் தனது கையில் விலை உயர்ந்த ஆப்பிள் ஐபேடு வைத்திருந்தார். அதனை யாரோ திருடிவிட்டார்கள். கண்காணிப்பு கேமராவின் உதவியால் ஐபேடை திருடிய நாகர்கோவிலைச் சேர்ந்த காண்டிராக்டர் சிக்கினார்.
சென்னை-நாகர்கோவில் இடையே தினமும் வந்தே பாரத் ரயில் சென்று வருகிறது. காலை 5 மணிக்கு சென்னை எழும்பூரில் புறப்பட்டு மதியம் 01.50 மணிக்கு நாகர்கோவிலை சென்றடைகிறது. 724 கி.மீ தொலைவை இந்த ரயில் வெறும் 9 மணி நேரத்தில் கடக்கிறது.

அதேபோன்று, நாகர்கோவில் ரயில் நிலைத்தில் மதியம் 2.20 மணிக்கு புறப்படும் ரயில் (எண்: 20628), இரவு 11 மணிக்கு சென்னை எழும்பூரை வந்தடைகிறது. இந்த கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருச்சி, பெரம்பலூர், கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு, சென்னை என 12 மாவட்டங்கள் வழியாக பயணிக்கிறது. இந்த வந்தே பாரத் ரயிலை திருச்சி, திண்டுக்கல், மதுரை, திருநெல்வேலி, கன்னியாகுமரி உள்ளிட்ட தென்மாவட்ட மக்கள் அதிகமாக பயன்படுத்துகிறார்கள்.
கன்னியாகுமரி சின்னமுட்டம் பகுதியை சேர்ந்த சுமார் 40 வயதான கன்னியாஸ்திரி ஒருவர் கடந்த ஜூன் 1-ந்தேதி திண்டுக்கல் செல்வதற்காக நாகர்கோவில் சந்திப்பு ரயில் நிலையத்தில் வந்தே பாரத் ரயிலில் ஏறினார். அப்போது அவர் அமர்ந்திருந்த பெட்டியில் தூய்மை பணி நடந்ததால் பேக்கை ரயிலில் வைத்துவிட்டு கீழே இறங்கி நடைமேடையில் காத்திருந்துள்ளார்.
பின்னர் தூய்மை பணி முடிந்ததும் மீண்டும் ரயிலில் ஏறி பார்த்தபோது அவரது பேக்கை காணவில்லை. யாரோ மர்ம ஆசாமி திருடிச்சென்றது தெரியவந்தது. திருட்டுப்போன பேக்கில் விலை உயர்ந்த மடிக்கணினி (லேப் டாப்) மற்றும் ஐபேடு இருந்தது. இதுறித்து ரயில்வே போலீசிடம் அவர் புகார் அளித்தாா். இன்ஸ்பெக்டர் அருள் ஜெயபால் தலைமையில் போலீசார் கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வுசெய்தபோது, வந்தே பாரத் ரயிலில் இருந்து ஒருவர் கன்னியாஸ்திரியின் பேக்கை திருடிச் செல்லும் காட்சி பதிவாகி இருந்தது.
விசாரணையில் அவர் நாகர்கோவில் அருகே மே மணிக்கட்டிபொட்டல் பகுதியை சேர்ந்த கிருஷ்ணமணி (வயது 47) என்பது தெரியவந்தது. அவரை போலீசார் கைது செய்து திருடப்பட்ட பொருட்களையும் மீட்டனர். கைதான கிருஷ்ணமணி கட்டிட காண்டிராக்டர் என்பது தெரியவந்தது. பின்னர் அவரை போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.












Click it and Unblock the Notifications