சாப்பாட்டுக்கு நீதி கேட்ட மாணவி.. கட்டம் கட்டிய காலேஜ்! விபரீத முடிவால் கதிகலங்கிய கன்னியாகுமரி!
கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல் பெத்லகேம் தனியார் நர்சிங் கல்லூரியில் மாடியில் இருந்து குதித்து மாணவி தற்கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மாணவியின் மரணத்துக்கு நீதி கேட்டு மாணவ மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில், பத்து மாணவர்களை போலீசார் பிடித்து சென்றதால் மாணவர்கள் ஆவேசமடைந்து போராட்டத்தை தீவிரப்படுத்தியுள்ளனர்.
கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல் பகுதியில் செயல்பட்டு வரும் பெத்லகேம் தனியார் நர்சிங் கல்லூரியில் கேரளாவை சேர்ந்த ஏராளமான மாணவ மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். இவர்களின் பெரும்பாலானோரும் கல்லூரி விடுதியில் தங்கி இருந்து கல்வி பயின்று வருகின்றன.

இந்த சூழலில் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் கல்லூரி விடுதியில் மாணவ மாணவிகளுக்கு தரமற்ற முறையில் உணவு வழங்கப்பட்டு அவற்றை சாப்பிட்ட ஏராளமான மாணவிகள் வாந்தி மயக்கம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
இதனை கல்லூரி நிர்வாகம் மூடி மறைக்க முயன்ற நிலையில் கல்லூரியின் செயல்பாட்டை வெளிச்சத்துக்கு கொண்டு வரும் வகையில் கேரள மாநிலம் திருவனந்தபுரம் மாவட்டம் நெய்யாற்றின்கரை கத்திப்பாறை பகுதியை சேர்ந்த கேரள அரசு போக்குவரத்துக்கு கழகத்தில் பேருந்து நடத்துநராக பணிபுரிந்து வருபவரின் மகளான ஆன்ஸிஜி குக்கு மாணவ மாணவிகளை ஒன்றுதிரட்டி கல்லூரி வளாகத்தினுள் போராட்டம் நடத்தி ஊடகங்களுக்கு பேட்டி அளித்தார்.
இதனை தொடர்ந்து தாசில்தார் தலைமையிலான குழுவினர் சம்பவ இடம் சென்று விசாரணை மேற்கொண்டு மாணவ மாணவிகளுக்கு தரமான உணவை வழங்க ஏற்பாடு செய்ய வேண்டுமென கல்லூரி நிர்வாகத்திற்கு உத்தரவிட்டனர். இதனையடுத்து கல்லூரி நிர்வாகம் மற்றும் முதல்வராக பணிபுரிந்து வரும் புதுக்கடை பகுதியை சேர்ந்த ஷீஜா ஆன்ஸிஜி குக்குவை வேண்டுமென்றே பழிவாங்கும் நோக்கில் கடந்த ஓராண்டாக சக மாணவர்கள் மத்தியில் வைத்து கேவலபடுத்துவது துன்புறுத்துவது திட்டுவது போன்ற செயல்களில் ஈடுபட்டு வந்துள்ளார்.
இது மாணவி ஆன்ஸிஜிக்கு மிகுந்த மன உளைச்சலை ஏற்படுத்தியுள்ளது இது சம்பந்தமாக மாணவி தனது பெற்றோரிடமும் பலமுறை கூறி அழுதுள்ளார். இந்த நிலையில் கடந்த 14 ம் தேதி கல்லூரியில் நடைபெற்ற சுதந்திரதினவிழா கொண்டாட்டத்தின்போது ஆன்ஸிஜியை கல்லூரி முதல்வர் திட்டமிட்டு இல்லாத செல்போனை இருப்பதாக கூறி சக மாணவர்கள் மத்தியில் வைத்து தகாத வார்த்தைகளால் பேசியதாகச் சொல்லப்படுகிறது.
இதனால் விரக்தியடைந்த மாணவி கல்லூரியின் மூன்றாவது மாடியிலிருந்து கீழே குதித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதில் அவருக்கு உடலின் பல பாகங்களில் முறிவு ஏற்பட்டு உயிருக்கு ஆபத்தான நிலையில் கிடந்தவரை மீட்ட கல்லூரி நிர்வாகத்தினர் அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்று தவறிவிழுந்ததாக கூறி முதலுதவி சிகிச்சை அளித்து மாணவியின் பெற்றோருக்கு மாணவி தோரணம் கட்டும்போது தவறி விழுந்ததாக தகவலை தெரிவித்துள்ளனர்.
தகவலறிந்து பதறியடித்து வந்த பெற்றோர் மாணவியின் நிலைகண்டு கதறி அழுதபடி மார்த்தாண்டத்தில் உள்ள தனியார் எலும்பு முறிவு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர் அங்கிருந்து மேல் சிகிட்சைக்காக கேரளாவில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர் அங்கு அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளிக்க ஏற்காத நிலையில் திருவனந்தபுரம் மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்று அங்கு சிகிட்சை பெற்று வந்த மாணவி ஆன்ஸிஜி சிகிச்சை பலனின்றி நேற்று அதிகாலை பரிதாபமாக உயிரிழந்தார்.
இது சம்பந்தமாக ஆன்ஸிஜியின் தாயார் சோனியா கொடுத்த புகாரின்பேரில் கருங்கல் போலீசார் வழக்குப்பதிவு செய்து கல்லூரி முதல்வர் ஷீஜாவை கைது செய்ய முயன்றபோது அவர் தலைமறைவாகி விட்டார் அவரை கைது செய்ய தனிப்படை அமைத்து தேடி வரும் நிலையில். இந்த வழக்கு சம்மந்தமாக பத்மநாபபுரம் கோட்டாட்சியர் விசாரணை நடத்தி வருகின்றனர்
கேரள மருத்துவ கல்லூரியில் இருந்து மாணவியின் உடலை வாங்க மறுத்து பெற்றோர் போராட்டம் நடத்தி வருகின்றனர். உயிரிழந்த மாணவிக்கு உரிய நீதி கேட்டும், தலைமறைவாகி உள்ள முதல்வரை கைது செய்ய கேட்டும் கல்வி என்ற பெயரில் கல்லூரியில் நடைபெறும் முறைகேடுகளை தடுக்க கேட்டும் சக மாணவ மாணவிகள் மற்றும் பெற்றோர்கள் கல்லூரி வளாகத்தின் முன் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஏற்கனவே மாணவ மாணவிகள் போராட்டம் நடத்த உள்ளதாக தகவல் வெளியானதை தொடர்ந்து முன்கூட்டியே ஏராளமான போலீசார் கல்லூரி முன்பு பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டு போராட்டத்தில் ஈடுபட்ட மாணவ மாணவிகள் மற்றும் பெற்றோர்களை வலுகட்டாயமாக குண்டு கட்டையாக கைது செய்து தாக்குதல் நடத்தி அருகில் உள்ள தனியார் மண்டபத்தில் தங்க வைத்துள்ளனர். இந்த சம்பவம் இருமாநிலங்களுக்கு இடையே பெரும் பரபரப்பு கலந்த பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.


Click it and Unblock the Notifications
