6 வயது சிறுமியிடம் அத்துமீறிய 60..ஜமாத்தில் கட்டி வைத்து கட்டப்பஞ்சாயத்து! 3 லட்சம் கொடுக்க தீர்ப்பு
கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டம் திருவிதாங்கோடு அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த நபரை மார்த்தாண்டம் மகளிர் காவல் துறையினர் போக்சோ சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்நிலையில் சிறுமியை சிறார்வதை செய்த பீர் முகம்மதுவை அப்பகுதியில் உள்ள முஸ்லிம் ஜமாஅத் அலுவலகத்தில் தூணில் கட்டி வைத்து அவரை தாக்கி உள்ளனர் என அவரது மனைவி கொடுத்த புகாரின் பேரில் தக்கலை காவல் துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
கன்னியாகுமரி மாவட்டம் தக்கலையை அடுத்த திருவிதாங்கோடு பகுதியில் வசித்து வந்தவர் பீர் முகம்மது. இவர் தனது வீட்டுக்கு அருகே விளையாடிக்கொண்டிருந்த 8 வயது சிறுமியை சிறார்வதை செய்தது சம்பந்தமாக மார்த்தாண்டம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் போக்ஸோ பிரிவில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

மீன் வியாபாரம் செய்து வரும் பீர் முகம்மது, தனது வீட்டில் கறிவேப்பிலை உள்ளதாகவும், அதை எடுத்துக்கொடுப்பதாகவும் கூறி சிறுமியை வீட்டுக்கு அழைத்து சிறார்வதை செய்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்த வழக்கில் பீர் முகம்மது கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இதற்கிடையே சிறுமியை சிறார்வதை செய்த பீர் முகம்மதுவை அப்பகுதியில் உள்ள முஸ்லிம் ஜமாஅத் அலுவலகத்தில் தூணில் கட்டி வைத்ததாக அவரைச் சுற்றி சிலர் அமர்ந்து பஞ்சாயத்து செய்ததாக புகைப்படத்துடன் சமூக வலைத்தளங்களில் பரவி வந்தது.
இது தொடர்பாக விசாரணை மேற்கொண்ட போது சம்பந்தப்பட்ட பீர்முகமதுவை திருவதாங்கோடு முஸ்லிம் ஜமாத் நிர்வாகிகள் இணைந்து கிராமத்தில் நடக்கும் பஞ்சாயத்து போல தீர்ப்பு வழங்கி இருக்கின்றனர். சுமார் ஒன்றரை மணிக்கு அவரை கட்டி வைத்து அவரை காவல் நிலையத்தில் ஒப்படைக்காமல் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். மேலும் முகமது வீட்டை ஆறு லட்சம் ரூபாய்க்கு இரவோடு இரவாக விற்று அதில் மூன்று லட்சத்தை பாதிக்கப்பட்ட குழந்தைக்கு கொடுக்க வேண்டும் என சொல்லியதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில் தனது வீட்டை விற்கச் சொல்லி மிரட்டுவதாகவும், தனது கணவரை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென பீர் முகம்மதுவின் மனைவி பாத்திமா தக்கலை காவல் நிலையத்தில் ஒரு புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் அடிப்படையில் அச்சுறுத்தி தண்டனை வழங்குதல் உள்ளிட்ட நான்கு பிரிவுகளில் ஜமாஅத்தைச் சேர்ந்த நபர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் இது சம்பந்தமாக காவல் துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications