கன்னியாகுமரியில் ஓலை கொட்டகையில் துள்ளிய கருப்பு ஆடு.. அருமனைக்கு வந்த மர்ம விலங்கு.. தடம் தெரியுதே
கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டத்தில் மர்ம விலங்கு தாக்குதல்கள் மீண்டும் அதிகரித்து வருவது பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பான புகார்கள் காவல் நிலையத்தில் குவிந்து வருவது அதற்கு மேல் அதிர்வலையையும், பரபரப்பையும் ஏற்படுத்தி வருகிறது.. என்ன நடக்கிறது குமரி மாவட்டத்தில்?
சமீபத்தில் திருவட்டார் அருகே புத்தன்கடை புதுக்கோடு பகுதியை சேர்ந்தவர் நெல்சன் (68).. இவர் ஒரு கூலி தொழிலாளி. அவர் தன்னுடைய வீட்டின் பின்புறம் ஓலைக்கொட்டகை அமைத்து மூன்று ஆடுகளை வளர்த்து வந்தார்.

கன்னியாகுமரி கருப்பு ஆடு
தினமும் இரவு ஆடுகளுக்கு உணவு கொடுத்து, ஓலைக்கொட்டகையில் கட்டிவிட்டு தூங்கச் செல்வது வழக்கம்... சம்பவத்தன்று காலை எழுந்து பார்த்த போது, கட்டியிருந்த மூன்று ஆடுகளும் இறந்து கிடந்தன.
அருகில் சென்று பார்த்தபோது, ஆடுகளின் வயிற்றுப் பகுதியில் பெரிய கடி காயங்கள் இருந்தன. நெல்சனின் வீட்டருகே சிறிய மலைக்குன்று இருப்பதால், அங்கிருந்து இறங்கி வந்த மர்ம விலங்கு ஆடுகளை தாக்கி கொன்றிருக்கலாம் என கூறப்படுகிறது.
ஓலைக் கொட்டகையில் ஆடுகள்
ஊடனே தகவல் அறிந்த அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ஆய்வு செய்தனர். ஓலைக்கொட்டகை அருகே இருந்த மணலில் மர்ம விலங்கின் கால்தடங்கள் பதிவாகியிருந்தன. அவை செந்நாய் அல்லது மரநாய் கால்தடமாக இருக்கலாம் என வனத்துறையினர் தெரிவித்தனர்.
இதற்கிடையே இதே மாவட்டத்தின் அருமனை அருகே மேல்புறம் மருதங்கோடு முல்லை பழஞ்சுவிளை பகுதியில் ராஜன் என்பவரது வீட்டருகே கட்டியிருந்த இரண்டு கருப்பு ஆடுகளும் சில நாட்களுக்கு முன்பு மர்ம விலங்கால் கடித்து கொல்லப்பட்டன. இதுதொடர்பாக களியல் வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும், மேல்புறம் பகுதியை அடுத்த செம்மங்காலை பகுதியில் தொடர்ந்து பல வீடுகளில் வளர்க்கப்பட்ட ஆடுகள் மர்ம விலங்கு தாக்குதலில் உயிரிழந்துள்ளன.
மர்ம விலங்கு - கால் தடம்
நேற்று முன்தினம்கூட, சுரேஷ் என்பவரது ஆடும், நேற்றைய தினம் அலக்சாண்டர் என்பவரது ஆடும் தாக்கப்பட்டன. ஆட்டின் வித்தியாசமான சத்தம் கேட்டு வீட்டார் வெளியே வருவதற்குள் விலங்கு தப்பிச் சென்றுவிட்டதாம்.. இப்படி தொடர்ச்சியான தாக்குதலால் பொதுமக்கள் இரவு நேரங்களில் வெளியே வர அச்சப்படுகிறார்கள்..
நேற்றைய தினமும் ஆடுகள் இறந்த தகவலை கேட்டு, மார்த்தாண்டம் போலீசார் மற்றும் களியல் வனத்துறையினர் சோதனை நடத்தினார்கள்.. கால்நடை மருத்துவர் ஆய்வில், பெரிய அளவிலான காட்டு பூனை, வள்ளிப்புலி, இந்த தாக்குதல்களுக்கு காரணமாக இருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெரிய பெரிய காட்டு பூனையை வள்ளிப்புலி என்கிறார்கள்.. இது சிறுத்தை வகையைச் சேர்ந்தது.. உடல் முழுக்க பிரவுன் அல்லது மஞ்சள் நிறத்தில் கருப்பு புள்ளிகள் இருக்கும்.. இரவில் மட்டுமே வேட்டையாடும் பழக்கம் கொண்டது.. ஆடு, நாய் தவிர, சில சமயம் மாடுகளையும் தாக்கி விடுமாம்..
பிரவுன் அல்லது மஞ்சள் நிறம்
இப்படியான விலங்கை பிடிக்க நடவடிக்கை கன்னியாகுமரியில் எடுக்கப்பட்டு வருகிறது. இதனால் கிராம மக்கள் பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என வலியுறுத்துகின்றனர். ஆடுகள், மாடுகள் போன்ற கால்நடைகளை இரவு நேரங்களில் உறுதியான கொட்டகைகளில் பாதுகாப்பாக வைக்க வேண்டும் என வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.
சந்தேகமான சத்தம் அல்லது விலங்கு நடமாட்டம் தெரிந்தால் உடனடியாக போலீசாருக்கும் வனத்துறைக்கும் தகவல் அளிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளனர். மர்ம விலங்கு பிடிபடும் வரை இரவு நேரங்களில் குழந்தைகள் மற்றும் முதியவர்கள் வெளியே வர வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
எனினும், வனத்துறையினர் தீவிர கண்காணிப்பு மேற்கொண்டு பொதுமக்களின் அச்சத்தை போக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.












Click it and Unblock the Notifications