கன்னியாகுமரியில் பிரதமர் மோடியின் தியான நிகழ்ச்சி! பொன் ராதாகிருஷ்ணனுக்கு அனுமதி மறுப்பு!
கன்னியாகுமரி: கன்னியாகுமரியில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொள்ளும் நிகழ்ச்சிக்கு முன்னாள் மத்திய அமைச்சரும் பாஜகவின் மூத்த தலைவருமான பொன் ராதாகிருஷ்ணனுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
காவல் துறை உயரதிகாரிகளிடம் பொன் ராதாகிருஷ்ணன் பேச்சுவார்த்தை நடத்திய நிலையில் பிரதமரின் பாதுகாப்பு படையினர் அனுமதி அளிக்கவில்லை என கூறிவிட்டனர். இதையடுத்து அரசு சுற்றுலா மாளிகையில் காத்திருந்த பொன்னார் அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.

இதுகுறித்து அங்கிருந்த செய்தியாளர்கள் கேட்ட போது, பிரதமர் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கவனிக்க மட்டுமே வந்ததாக பொன் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
பிரதமரின் தனிப்பட்ட பயணம் இது என்பதால் குமரி- பூம்புகார் கடல் போக்குவரத்துக் கழகம் செல்லும் சாலையில் பொன் ராதாகிருஷ்ணனுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. கன்னியாகுமரிக்கு வருகை தரும் பிரதமர் மோடியை வரவேற்க கட்சி நிர்வாகிகள் யாரும் வர வேண்டாம். பிரதமரின் தியான நிகழ்ச்சியை அரசியல் நிகழ்வாக பார்க்கக் கூடாது என டெல்லி பாஜக தலைமை சார்பில் முக்கிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
லோக்சபா தேர்தல் பிரச்சாரம் முடிந்ததும் பிரதமர் நரேந்திர மோடி கன்னியாகுமரியில் இரு நாட்கள் தியானம் செய்யவுள்ளார். இன்று தமிழ்நாடு வரும் மோடி, குமரியில் உள்ள விவேகானந்தர் மண்டபத்தில் தியானம் செய்யவுள்ளார்.
கடந்த 2019ஆம் ஆண்டு லோக்சபா தேர்தலுக்கு பிறகு கேதார்நாத் குகையில் மோடி தியானம் செய்தார். இது போல் இந்த முறை குமரியில் தியானம் செய்கிறார். இதற்காக டெல்லியில் இருந்து திருவனந்தபுரத்திற்கு சென்ற மோடி அங்கிருந்து கன்னியாகுமரிக்கு இன்று மாலை விவேகானந்தர் நினைவிடத்தை சென்றடைகிறார்.
மாலைக்கு பிறகு தியானத்தை தொடங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது. பிரதமரின் தியான நிகழ்ச்சிக்காக மத்திய இணையமைச்சர் எல்.முருகன், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ஆகியோருக்கு விடுதியில் அறைகள் புக் செய்யப்பட்டிருந்த நிலையில் தற்போது அவை ரத்து செய்யப்பட்டுள்ளது.
பிரதமரின் தனிப்பட்ட நிகழ்வை அரசியல் கட்சி விழாவாக மாற்றக் கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளதால் தமிழக பாஜகவினர் யாரும் கன்னியாகுமரிக்கு செல்ல வேண்டாம் என டெல்லி பாஜக தலைமை தெரிவித்துள்ளதாம்.
முன்னதாக தேர்தல் நேரத்தில் பிரதமரின் தியான நிகழ்ச்சிக்கு அனுமதி அளிக்கக் கூடாது என தேர்தல் நடத்தும் அலுவலரிடம் திமுக மனு தாக்கல் செய்துள்ளது. திமுக சார்பில் அளிக்கப்பட்டுள்ள அந்த மனுவில், "நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ள போது விவேகானந்தர் மண்டபத்தில் பிரதமர் மோடி தியானத்தில் ஈடுபடுவது தேர்தல் நடத்தை விதிமீறல். இதன் மூலம் பிரதமர் மோடி மறைமுகமாகத் தேர்தல் பரப்புரையில் ஈடுபட வாய்ப்பு உள்ளது. எனவே கன்னியாகுமரியில் பிரதமர் மோடியின் தியான நிகழ்ச்சியை ரத்து செய்ய வேண்டும்" எனக் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
அது போல் இறுதிகட்ட தேர்தல் நடைபெற இருக்கிற 57 மக்களவைத் தொகுதிகளில் அரசியல் ஆதாயம் தேடுவதற்காக விவேகானந்தர் பாறையில் தியானம் செய்ய பிரதமர் மோடி திட்டமிட்டுள்ளார். இதைவிட ஒரு அரசியல் மோசடி வேறு எதுவும் இருக்க முடியாது. கன்னியாகுமரியில் உள்ள விவேகானந்தர் பாறையில் பிரதமர் மோடி தியானம் மேற்கொள்வதற்கு தேர்தல் ஆணையம் தடைவிதிக்க வேண்டும் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை வலியுறுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது. பிரதமரின் வருகையொட்டி 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. போலீஸாரும் கடலோர காவல் படையினரும் பிரதமர் அலுவலக பாதுகாப்பு படையினரும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications