ஓணம் பண்டிகை: அசத்தும் அத்தப்பூ கோலங்கள்.. தோவாளை மலர்ச்சந்தையில் பூக்கள் விலை அதிரடி உயர்வு
கன்னியாகுமரி: ஓணம் பண்டிகை நாளை தொடங்குவதால் கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை மலர்ச்சந்தையில் பூக்கள் விலை உயர்ந்துள்ளது.
29ஆம் தேதி ஓணம் பண்டிகை கொண்டாட உள்ள நிலையில், கேரள வியாபாரிகள் ஆர்டர் மேலும் அதிகரித்த வண்ணம் இருக்கிறது. இதனால் தோவாளை பூ வியாபாரிகளும் மலர் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
ஓணம் பண்டிகை: ஆவணி மாதத்தில் வரும் திருவோணம் நட்சத்திரம்தான் கேரள மக்களால் ஓணம் பண்டிகையாக கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு ஓணம் பண்டிகை நாளை தொடங்குகிறது. கேரளா மட்டுமின்றி கேரள மக்கள் வசிக்கும் இடமெங்கும் ஓணம் பண்டிகை விமரிசையாக கொண்டாடப்படுகிறது. இந்த நாள் வாமன அவதாரமாகவும் கொண்டாடப்படுகிறது. அஸ்தம், சித்திரை, சுவாதி, விசாகம், அனுஷம், கேட்டை, மூலம், பூராடம், உத்திராடம், திருவோணம் ஆகிய 10 நட்சத்திரங்கள் வரும் 10 நாட்களும் இப்பண்டிகை விமரிசையாக கொண்டாடப்படுகிறது.

மகாபலி மன்னன்: ஆண்டுதோறும் ஓணம் திருநாளில் மகாபலி பூவுலகுக்கு வருவதாக ஐதீகம். அவரை வரவேற்கும் விதமாக 10 நாள் பண்டிகையாக ஓணத்தை கொண்டாடுகின்றனர். தங்களை காண வரும் மன்னன் மகாபலியை வண்ண மலர்களால் அத்தப்பூ கோலமிட்டு தோரணங்கள் கட்டி அழகுபடுத்துகிறார்கள். கேரளாவை ஒட்டி உள்ள குமரி, நீலகிரி, கோவை, திருப்பூர் மாவட்டங்களிலும் ஓணம் பண்டிகை களைகட்டும். மலையாள மொழி பேசும் மக்கள் தங்கள் வீடுகளில் மக்கள் அத்தப்பூ கோலமிட்டும், தெருக்களில் ஊஞ்சல் கட்டியும் மகிழ்ச்சியுடன் ஆடிப்பாடுவார்கள்.
அத்தப்பூ கோலம்: ஓணத்திற்கான மலர்கள் அனைத்தும் குமரி மாவட்டம் தோவாளை பூ மார்க்கெட்டில் இருந்து தான் கேரளாவுக்கு கொண்டு செல்லப்படுகிறது. இதனால் தோவாளை மார்க்கெட்டில் தினசரி பூக்கள் விற்பனை களைகட்டியுள்ளது. அதிகாலையே மார்க்கெட்டில் குவியும் உள்ளூர் மற்றும் கேரளா வியாபாரிகள் போட்டி போட்டு பூக்கள் வாங்குகின்றனர். அந்த வகையில் தினசரி 50 டன் பூக்கள் கேரளாவுக்கு விற்பனையாகின்றன. மற்ற நேரங்களில் தினமும் 10 டன் தான் செல்லும் என்பது குறிப்பிடத்தக்கது.

பூக்கள் விலை உயர்வு: இந்தநிலையில் வரும் 29ஆம் தேதி ஓணம் பண்டிகை கொண்டாட உள்ள நிலையில், கேரள வியாபாரிகள் ஆர்டர் மேலும் அதிகரித்த வண்ணம் இருக்கிறது. இதனால் தோவாளை பூ வியாபாரிகள், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். எனவே இந்த முறை திருவோணத்திற்கு 200 டன் முதல் 250 டன் வரை பூக்கள் கேரளாவிற்கு விற்பனையாகும் என வியாபாரிகள் எதிர்பார்க்கின்றனர். பூக்கள் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது. ஒரு கிலோ ரூ.100க்கு விற்ற சம்பங்கி ரூ.600க்கு விற்பனையாகிறது. ரூ.350க்கு விற்ற பிச்சிப்பூ ரூ.750க்கு, ரூ.250க்கு விற்ற மல்லிகை ரூ.700க்கும் விற்பனையாகிறது.












Click it and Unblock the Notifications