பெற்றோரை பராமரிக்காத மகன்களுக்கு இதுதான் கதி.. பெற்றோர் மகிழ்ச்சி.. பத்மநாபபுரம் சப்-கலெக்டர் அதிரடி
நாகர்கோவில்: கன்னியாகுமரி மாவட்டம் தேங்காப்பட்டணம் அருகே பெற்றோரை பராமரிக்காததால் மகனுக்கு எழுதி கொடுத்த சொத்து ஆவணத்தை அதிரடியாக பத்மநாபபுரம் சப்-கலெக்டர் ரத்து செய்துள்ளார்.
பெற்றோரை பராமரிக்காவிட்டால் அவர்களின் சொத்துக்களை அனுபவிக்க பிள்ளைகளுக்கு எந்த உரிமையும் இல்லை. பெற்றோர் தங்கள் சுய சம்பாத்தியத்தில் வாங்கிய சொத்தை தன் பிள்ளைகளின் பெயரில் தானமாக எழுதி வைத்த பின்னரும், மீண்டும் சொத்துக்களை வாங்கி கொள்ள முடியும். மாவட்ட ஆட்சியர் அல்லது கோட்டாட்சியரிடம் முறையிட்டு, முதியோர் பராமரிப்பு சட்டப்படி நிவாரணம் பெற முடியும்.

அந்த வகையில் தான் தேங்காப்பட்டணம் அருகே பெற்றோரை பராமரிக்காததால் மகனுக்கு எழுதி கொடுத்த சொத்து ஆவணத்தை அதிரடியாக பத்மநாபபுரம் சப்-கலெக்டர் ரத்து செய்துள்ளார். என்ன நடந்தது என்பதை பார்ப்போம்.
கன்னியாகுமரி மாவட்டம் தேங்காப்பட்டணம் அருகே உள்ள நெடுந்தட்டு பகுதியை சேர்ந்தவர் விஸ்வநாதன்.இவருக்கு 73 வயது ஆகிறது. இவருடைய மனைவி சரோஜா. இவருக்கு 65 வயது ஆகிறது. இவர்களுக்கு 2 மகன்களும், 2 மகள்களும் இருக்கிறார்கள். இதில் மூத்த மகனை தவிர மற்ற மூன்று பேருக்கும் திருமணம் ஆகி பிள்ளைகளுடன் வசிக்கிறார்கள். விஸ்வநாதனுக்கு 9 சென்ட் நிலத்தில் ஒரு வீடு இருக்கிறது.
மகள்களின் திருமணத்திற்கு பிறகு விஸ்வநாதன் சொத்தை 2 மகன்களுக்கும் எழுதி கொடுத்துள்ளார். இதில் இளைய மகன் சகோதரிகளை திருமணம் செய்து கொடுக்க பணஉதவி செய்தால் அவருக்கு 5¾ சென்ட் இடத்தையும், முத்தமகனுக்கு 3¼ சென்ட்டும், தங்களது காலத்திற்கு பிறகு முழு உரிமையும் எடுத்துக்கொள்ளலாம் என நிபந்தனையுடன் செட்டில்மென்ட் ஆவணமாக கடந்த 23-6-2022-ல் எழுதி கொடுத்திருக்கிறார். அதைத்தொடர்ந்து மூத்த மகனுடன் விஸ்வநாதனும் அவரது மனைவியும் வசித்து வந்துள்ளார்கள்.
இந்த நிலையில் மூத்தமகன் கன்னியாகுமரி மாவட்டம் கருங்கலில் உள்ள ஒரு தனியார் வங்கியில் தந்தை எழுதி கொடுத்த சொத்து ஆவணத்தை வைத்து ரூ.10 லட்சம் கடன் பெற்று ஏற்கனவே இருந்த பழைய வீட்டை இடித்துவிட்டு புதிய வீடு கட்டியிருக்கிறார். புதிய வீட்டிற்கு குடியேறிய பின்னர் மூத்தமகன் தினமும் மது குடித்து விட்டு பெற்றோரை பராமரிக்காமல் சித்ரவதை செய்ததுடன், ஒரு கட்டத்தில் வீட்டில் இருந்து அடித்து துரத்தியுள்ளார். இதனால் விஸ்வநாதனும் அவரது மனைவி சரோஜாவும் விரக்தி அடைந்து அருகில் உள்ள இளையமகன் வீட்டில் வசித்து வருகிறார்கள்.
இந்த நிலையில் மூத்த மகனுக்கு தான் எழுதி கொடுத்த சொத்து ஆவணத்தை ரத்து செய்ய கேட்டு பத்மநாபபுரம் சப்-கலெக்டர் அலுவலகத்தில் உள்ள பெற்றோர் மற்றும் மூத்த குடிமக்கள் தீர்பாயத்தில் விஸ்வநாதன் மனு அளித்தார். அந்த மனுவை பரிசீலனை செய்த தீர்பாயத்தின் நடுவரும் பத்மநாபபுரம் சப்-கலெக்டருமான கவுசிக், இருதரப்பினரையும் விசாரணைக்கு ஆஜராக உத்தரவு பிறப்பித்தார். அதன்படி இருதரப்பு வாக்குமூலங்கள், மனுதாரர் தாக்கல் செய்த ஆவணங்கள் ஆகியவை பரிசீலனை செய்தார்.
அதில் பெற்றோர் முதியோர் பராமரிப்பு மற்றும் நல்வாழ்வு சட்டம் 2007-ன் படி தந்தை எழுதி கொடுத்த சொத்து பத்திரத்தின் நிபந்தனைகளை மகன் மீறி செயல்பட்டது உறுதியானது. அதைத்தொடர்ந்து கடந்த 23-6-2022-ல் விஸ்வநாதன் அவரது மூத்த மகனுக்கு நிபந்தனையுடன் எழுதி கொடுத்த செட்டில்மென்ட் பத்திரத்தை ரத்து செய்ய வேண்டும் என முன்சிபல் சார்பதிவாளருக்கு சப்-கலெக்டர் கவுசிக் உத்தரவிட்டார்.
அதேநேரம் இந்த உத்தரவை எதிர்த்து மூத்தமகன் மனு செய்ய விரும்பினால் 60 நாட்களுக்குள் கன்னியாகுமரி மாவட்ட கலெக்டரிடம் மேல்முறையீடு செய்யலாம் என்றும் சப் கலெக்டர் கவுசிக் உத்தரவில் கூறிப்பிட்டுள்ளார். இந்த ஆணையின் நகலை அந்த முதிய தம்பதியிடம் சப்-கலெக்டர் வழங்கினார். அவர்கள் மகிழ்ச்சியுடன் அங்கிருந்து புறப்பட்டு சென்றனர்.












Click it and Unblock the Notifications