பிரசவத்துக்கு இலவசமா வாரேம்மா! உன் பிள்ளைக்கொரு பேரு வச்சும் தாரேம்மா! விஜய் மக்கள் இயக்கம் அசத்தல்!
கன்னியாகுமரி: கன்னியாகுமரியில் ஆண்டு முழுவதும் கர்ப்பிணிகளுக்கு கட்டணமில்லா ஆட்டோ சேவையை தொடங்கி கவனம் ஈர்த்திருக்கிறார்கள் விஜய் மக்கள் இயக்கத்தினர்.
ஊரக உள்ளாட்சி இடைத் தேர்தல் மற்றும் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் கணிசமான இடங்களில் போட்டியிட்டு வெற்றி பெற்ற விஜய் மக்கள் இயக்கத்தினர் அடுத்தடுத்த தேர்தல்களை எதிர்கொள்வதற்கான பணிகளில் கவனம் செலுத்தி வருகின்றனர்.

நடிகர் விஜயின் அரசியல் வருகை குறித்த அறிவிப்பு இன்னும் அதிகாரப்பூர்வமாக வெளிவராத சூழலிலும், அவரது ரசிகர் மன்றத்தினர் தொலைநோக்கு பார்வையில் மக்கள் நலப் பணிகளை முன்னெடுக்க ஆரம்பித்துவிட்டனர்.
நாடாளுமன்றத் தேர்தலுக்கு இன்னும் ஓராண்டு கூட முழுமையாக இல்லாத நிலையில் விஜய் மக்கள் இயக்கத்தின் செயல்பாடுகள் ஒவ்வொன்றையும் தமிழக அரசியல் கட்சிகள் கூர்ந்து கவனித்து வருகின்றன.
இந்நிலையில் கன்னியாகுமரி மாவட்ட விஜய் மக்கள் இயக்கத்தினர் கர்ப்பிணிகளுக்கு ஆண்டு முழுவதும் கட்டணமில்லா இலவச ஆட்டோ சேவையை தொடங்கி கவனம் ஈர்த்துள்ளனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் ஒரு பேரூராட்சிக்கு 3 ஆட்டோக்கள் வீதம் அவர்கள் இந்த சேவையை வழங்கவுள்ளனர்.
இதன் மூலம் மக்கள் மத்தியில் விஜய் குறித்த தாக்கம் ஏற்படும் என அவர்கள் நம்புகின்றனர். பொதுவாக இது போன்ற சேவைகளை விஜய் பிறந்தநாள், படம் ரிலீஸ் போன்ற ஒரு நாள் மட்டும் செய்வது தான் வழக்கம். ஆனால் ஆண்டு முழுவதும் கர்ப்பிணி பெண்களுக்கு ஆட்டோ இலவசம் என்ற அறிவிப்பு புதுமையான முயற்சியாக உள்ளது.
அதுவும் பெட்ரோல் விற்கிற விலையில் இந்த சேவையை தொடங்கியிருப்பதன் மூலம் கன்னியாகுமரி மாவட்ட விஜய் மக்கள் இயக்கத்தினருக்கு பாராட்டுகள் குவிகின்றன. இதனிடையே வெறுமனே அறிவிப்போடும், விளம்பரத்தோடும் நின்றுவிடாமல் இந்தச் சேவையை சொன்னபடி தொடர்ந்து வழங்கினால் பலருக்கும் பயனுள்ளதாக இருக்கும்.












Click it and Unblock the Notifications