சபரி வர்மன் உடல் தகனம்.. இழப்பீடு பெற்ற பிறகு போராட்டத்தை கைவிட்ட மக்கள் – சமாதானம்
கன்னியாகுமரி:நாகர்கோவில் மாவட்ட சிறையில் மாற்றுத்திறனாளி சபரி வர்மன் திடீரென இறந்தார். அடித்து கொலை செய்யப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. அவரது உடலை குடும்பத்தினர் வாங்க மறுத்த நிலையில் பேச்சுவார்த்தைக்கு பிறகு இன்று ஒப்படைக்கப்பட்டது. ஆனால் கிராம மக்கள் சபரி வர்மன் குடும்பத்துக்கு உடனடியாக இழப்பீடுகளை வழங்க வேண்டும் என உடலை தகனம் செய்ய எதிர்ப்பு தெரிவித்து அமரர் ஊர்தியை நிறுத்தி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதன்பிறகு இழப்பீடு வழங்கப்பட்டதை தொடர்ந்து போராட்டத்தை கைவிட்டு உடலை தகனம் செய்தனர்.

கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரம் அருகே ஈத்தங்காட்டை சேர்ந்த மாற்றுத்திறனாளி சபரி வர்மன் ( வயது 34). இவர் தடை செய்யப்பட்ட குட்கா விற்பனை செய்ததாக கூறி செந்தாமரைகுளம் போலீசார் கடந்த 9 ம் தேதி கைது செய்தனர். அதன்பிறகு சபரி வர்மன் நாகர்கோவிலில் உள்ள மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டார்.
அவரை சிறை வார்டன்கள், சக கைதிகள் அடித்து கொன்றதாக குடும்பத்தினர் குற்றம்சாட்டினர். இதற்கிடையே தான் அவரது உடல் நாகர்கோவில் மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. அப்போது சபரிவர்மன் உடலில் 19 இடங்களில் காயங்கள் இருப்பது உறுதி செய்யப்பட்டது.
இதனால் சபரி வர்மன் மரணத்திற்கு உரிய நீதி கிடைக்க வேண்டும். வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்ற வேண்டும். அவரை அடித்து கொன்றவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குடும்பத்தினர் போராட்டம் செய்தனர். கடந்த 4 நாட்களாக அவரது உடலை குடும்பத்தினர் வாங்க மறுத்தனர்.
இந்நிலையில் தான், இன்று சபரி வர்மன் உடலை அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது. பிரேதப் பரிசோதனை செய்யப்பட்ட வீடியோவின் சிடி தனியாக குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது. நான்கு மருத்துவ குழுக்களால் காயங்களும், பிரேதப் பரிசோதனை அறிக்கையும் ஒப்பிட்டு பார்க்கப்பட்டது. அப்போது இரண்டும் ஒன்றாக இருந்தது. மேலும் சபரி வர்மனின் இறப்புக்கு காரணமானவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளிக்கப்பட்டது. இதற்கு குடும்பத்தினர் ஒப்புக்கொண்டு சபரி வர்மன் உடலை பெற்று கொண்டனர்.
இதையடுத்து சபரி வர்மனின் உடல் அமரர் ஊர்தியில் ஏற்றப்பட்டு சொந்த ஊருக்கு எடுத்து செல்லப்பட்டது.சொந்த ஊரை அமரர் ஊர்தி நெருங்கியது அப்போது சபரி வர்மனின் சொந்த ஊர் மக்கள் அமரர் ஊர்தியை தடுத்து நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். சபரி வர்மன் குடும்பத்தினருக்கு வழங்க வேண்டிய இழப்பீடு மற்றும் நிவாரண உதவிகளை உடனடியாக வழங்க வேண்டும். அதுவுரை உடலை அடக்கம் செய்ய விடமாட்டோம் என்று கூறினர். இதனால் அதிகாரிகள் அவர்களை சமாதானம் செய்யும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
நேற்றைய தினம் சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேஷ் குமார் மற்றும் மீன்வளத்துறை அமைச்சர் ஸ்ரீநாத் ஆகியோர் சபரி வர்மனின் மனைவியை சந்தித்து பேசினர். அப்போது அவரது மனைவிக்கு தற்காலிகமாக அரசு வேலை வழங்குவதாகவும், ரூ.10 லட்சம் இழப்பீடாகவும், குழந்தைகளின் கல்விக்கு உதவி தொகை வழங்குவதாகவும் கூறினர். ஆனால் அதனை அவர் ஏற்க மறுத்துவிட்டார். தனது கணவரின் மறைவிற்கு காரணமானவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். பிரேத பரிசோதனை தொடர்பான வீடியோ மற்றும் உடல் காயங்கள் தொடர்பான விவரங்களை அளிக்க வேண்டும் என்று கூறினார்.
ஆனால் தற்போது குடும்பத்தினர் உடலை வாங்கிய நிலையில் அமைச்சர்கள் அளித்த இழப்பீட்டை வழங்கவில்லை. இதனால் சபரி வர்மனின் உறவினர்கள், கிராம மக்கள் அமரர் ஊர்தியை தடுத்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் அங்கு மீண்டும் பரபரப்பான சூழல் ஏற்பட்டுள்ளது.
அதன்பிறகு அதிகாரிகள், போலீஸ் அதிகாரிகள் வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். வருவாய் கோட்டாச்சியர் சம்பவ இடத்துக்கு வந்து இழப்பீடு வழங்கினார். ரூ.10 லட்சம் இழப்பீடு, 2 சென்ட் வீட்டு மனை பட்டா, சபரி வர்மன் மகன் பெயரில் ரூ.1 லட்சம் டெபாசிட்டுக்கான ஆணை, சபரி வர்மன் மனைவிக்கு தற்காலிக அரசு பணி ஆணை உள்ளிட்டவற்றை வழங்கினார். இதையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது. சபரி வர்மன் உடல் எடுத்து செல்லப்பட்டு இறுதி சடங்குகளுடன் தகனம் செய்யப்பட்டது.


Click it and Unblock the Notifications
