படிப்பு மட்டும்தான்.. எந்த நிலையையும் எட்டலாம்! இஸ்ரோவின் புதிய தலைவர் வி நாராயணன் அட்வைஸ்
குமரி: எந்த குடும்ப சூழலில் இருந்து வருகிறோம் என்பது முக்கியமல்ல. எங்கு படிக்கின்றோம் என்பது முக்கியமல்ல.. எப்படி படிக்கிறோம் என்பது தான். படிப்பும் உழைப்பு மட்டும் போதும் நாம் எந்த நிலையையும் எட்டலாம் என்று இஸ்ரோவின் புதிய தலைவராக பதவியேற்க உள்ள வி நாராயணன் குமரியில் பேட்டியளித்தார். முன்னதாக குமரியில் உள்ள சாமித்தோப்பு அய்யா வைகுண்டர் தலைமைபதியில் குடும்பத்துடன் சாமி தரிசனம் செய்தார்.
விண்வெளி ஆராய்ச்சியில், இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ) ஈடுபட்டு வருகிறது. இஸ்ரோவின் தற்போதைய தலைவராக சோம்நாத் உள்ளார். இவரது பதவிக்காலம் முடிவடைய உள்ளது. இதையடுத்து புதிய தலைவராக குமரி மாவட்டத்தை சேர்ந்த வி நாராயணன் பதவியேற்க உள்ளார். இஸ்ரோ தலைவராக நாளை மறுநாள் வி நாராயணன் பதவியேற்க உள்ளார்.

இந்த நிலையில் வி நாராயணன் தனது சொந்த ஊருக்கு வருகை தந்தார். இதையடுத்து தனது குடும்பத்துடன் கோவிகளுக்கு சென்று வழிபட்டார். குமரியில் உள்ள சாமித்தோப்பு அய்யா வைகுண்டர் தலைமை பதியில் குடும்பத்துடன் சென்று சாமி தரிசனம் செய்தார். தொடர்ந்து வி நாராயணன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
சொந்த உழைப்பு மற்றும் குடும்பத்தினரின் உதவியால் தான் இன்று இந்த பதவிக்கு வந்துள்ளேன். என் பிள்ளை எப்படியாவது படித்து ஒரு நல்ல நிலைமைக்கு வர வேண்டும் என்ற ஒரு எண்ணத்தோடு தான் என்னை படிக்க வைத்தனர். இதேபோன்று என் மனைவி மற்றும் மக்களும் ஏகப்பட்ட தியாகங்களை செய்துள்ளனர். அவர்கள் கொடுத்த ஒத்துழைப்பு தான் இப்போது இந்த நிலைமைக்கு வந்து இருக்கிறேன்.
வேலை.. வேலை என்று ஆபிசில் இருந்த போது முழு சப்போர்ட் கொடுத்தாங்க.. அப்புறம் ராதாகிருஷ்ணன், கிரண் குமார், சிவன், சோம்நாத் ஆகியோருக்கு நன்றி சொல்கிறேன். பிரதமர் மோடி மற்றும் இறைவனுக்கும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். எல்லாருமே ரொம்ப கஷ்டப்பட்டு வேலை செய்வார்கள். இங்க நாங்கள் கூட்டு முயற்சியோடு வேலை செய்துள்ளோம். எல்லா சொந்தக்காரர்கள் மற்றும் நம் மக்களிடம் வாழ்த்துக்கள் தெரிவித்த எல்லாோருக்கும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.
எல்லா மாணவர்கள் மற்றும் இளைஞர்களுக்கு ஒன்று சொல்வதென்றால், எந்த குடும்ப சூழலில் இருந்து வருகிறோம் என்பது முக்கியமல்ல. எங்கு படிக்கின்றோம் என்பது முக்கியமல்ல.. எப்படி படிக்கிறோம் என்பது தான். கடினமாக உழைத்தால் எந்த நிலையை வேண்டுமானாலும் அடையலாம். படிக்கும் போது படிப்பு மட்டுமில்லை.. ஓவரால் நடப்பு நிகழ்வுகளையும் தெரிந்துகொண்டே இருக்க வேண்டும். சமூக சேவை செய்ய வேண்டும் என்ற எண்ணம் இருந்துகொண்டே இருக்க வேண்டும்.
நம் நாட்டை வளர்ச்சியடைந்த நாடாக மாற்ற வேண்டும் என்ற முயற்சியோடு படிக்க வேண்டும். நாட்டுக்கும், மக்களுக்கும் சேவை செய்ய வேண்டும் என்ற மனப்பான்மையோடு மாணவர்கள் படிக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கிறேன். இந்திய விண்வெளி ஆராய்ச்சியை தொடங்கும்போது இந்தியா மற்ற நாடுகளின் உதவியை நாடியது. ஆனால் தற்போது 432 வெளிநாட்டு செயற்கைக்கோள்கள் இஸ்ரோ ராக்கெட்டுகள் மூலம் விண்ணில் செலுத்தப்பட்டுள்ளது. தனிநபரை விட தேசம் முக்கியம் என்றே பணியாற்றி வருகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.
யார் இந்த வி நாராயணன்:
கன்னியாகுமரி மாவட்டம், மேலக்காட்டுவிளையை சேர்ந்தவர் வி.நாராயணன். கீழக்காட்டூரில் உள்ள அரசு பள்ளியில் தமிழ் வழியில்தான் இவர் படித்தார். இவரது தந்தை வன்னியபெருமாள், தாய் தங்கம்மாள். தந்தை ஒரு சிறு வியாபாரி. இவருடன் பிறந்தவர்கள் 3 சகோதரர்கள் மற்றும் இரு சகோதரிகள். 6 குழந்தைகளின் படிப்பு, உணவுத் தேவைகளை, தேங்காய் வியாபாரியான வன்னியபெருமாளின் சிறு வருமானத்தை வைத்தே பூர்த்தி செய்ய வேண்டியிருந்தது. நாராயணன் 8-ம் வகுப்பு வரை மண்ணெண்ணெய் விளக்கு வெளிச்சத்தில்தான் படித்துள்ளார்.












Click it and Unblock the Notifications