லீவ் வேண்டும்.. கெஞ்சிய பெண் காவலர்.. ஓங்கி அறைந்த பெண் எஸ்ஐ.. கன்னியாகுமரியில் பரபர சம்பவம்
தனது மகளை மருத்துவமனையில் அனுமதிப்பதற்காக தனக்கு ஒருநாள் விடுப்பு வழங்குமாறு உதவி ஆய்வாளர் வள்ளி செல்வியிடம் சொர்ணவேணி கேட்டுள்ளார்.
கன்னியாகுமரி: தனது மகளுக்கு உடல்நிலை சரியில்லாததால் விடுப்பு கேட்ட பெண் காவலரை பெண் சப் இன்ஸ்பெக்டர் கன்னத்தில் அறைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதன் தொடர்ச்சியாக, அந்த சப் இன்ஸ்பெக்டர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி உயரதிகாரிகளிடம் காவல் புகார் அளித்துள்ளார்.
அத்தியாவசிய தேவைகளுக்கு உடனடியாக போலீஸாருக்கு விடுப்பு வழங்க வேண்டும் என தமிழக காவல்துறை டிஜிபி சைலேந்திர பாபு உத்தரவிட்டுள்ள நிலையில், இந்த சம்பவம் நிகழ்ந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

அவசரதுக்கு கூட விடுப்பு இல்லை
அரசாங்க பணிகளிலேயே மிகவும் கடுமையான வேலை பளு உள்ள துறையாக கருதப்படுவது காவல்துறை மட்டுமே. ஒரு அவசர தேவைக்கு கூட விடுப்பு கிடைக்காமல் பணிபுரியும் நிலையில்தான் போலீஸார் உள்ளனர். உதாரணமாக, கடந்த ஆண்டு சிவகங்கை மாவட்டத்தில் பணிபுரியும் உதவி ஆய்வாளர் ஒருவர், தனது மகளின் நிச்சயதார்த்ததுக்காக உயரதிகாரியிடம் விடுப்பு கேட்டிருக்கிறார். ஆனால் விடுப்பு கிடைக்காததால் அவரது மகளின் நிச்சயதார்த்தமே தடைபட்டு போனது.

டிஜிபி சைலேந்திர பாபு உத்தரவு
இதுதொடர்பாக அந்த காவல் உதவி ஆய்வாளர், தனக்கு நேரிட்ட கொடுமை குறித்து அழுது புலம்பி ஆடியோ வெளியிட்டார். இந்த ஆடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி, டிஜிபி சைலேந்திர பாபு கவனத்துக்கும் சென்றது. இதையடுத்து, உடனடியாக அனைத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பிய டிஜிபி சைலேந்திர பாபு, அவசர தேவைக்கு போலீஸாருக்கு விடுப்பு வழங்க மறுக்கக் கூடாது என உத்தரவிட்டிருந்தார். ஆனால், டிஜிபி உத்தரவிட்ட போதிலும், போலீஸாருக்கு விடுப்பு வழங்காத அவலங்கள் தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றன.

லீவு கேட்ட பெண் காவலர்
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் ஆயுதப்படை பிரிவில் காவலராக பணிபுரிந்து வருபவர் சொர்ணவேணி. இவரது மகளுக்கு சில தினங்களாக உடல்நிலை சரியில்லை எனக் கூறப்படுகிறது. இதனிடையே, உடல்நிலை மோசமடைந்ததால் தனது மகளை மருத்துவமனையில் அனுமதிப்பதற்காக தனக்கு ஒருநாள் விடுப்பு வழங்குமாறு உதவி ஆய்வாளர் வள்ளி செல்வியிடம் சொர்ணவேணி கேட்டுள்ளார்.

கன்னத்தில் அறைந்த பெண் எஸ்.ஐ.
ஆனால், விடுப்பு அளிக்க உதவி ஆய்வாளர் வள்ளி செல்வி மறுத்ததால் இருவருக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த வள்ளி செல்வி, காவலர் சொர்ணவேணியை கன்னத்தில் அறைந்ததாக தெரிகிறது. இதனால் காயமடைந்த சொர்ணவேணி, அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சென்றார். ஆனால் அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்க மருத்துவர்கள் மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது. இதன் தொடர்ச்சியாக, தன்னை கன்னத்தில் அறைந்த உதவி ஆய்வாளர் வள்ளி செல்வி மீது நடவடிக்கை எடுக்கக் கோரி உயரதிகாரிகளிடம் காவலர் சொர்ணவேணி புகார் அளித்துள்ளார்.












Click it and Unblock the Notifications