திமுகவுடன் பாஜக கவுன்சிலர் கூட்டு! அதிமுக ஒன்றியச் சேர்மன் பதவி பறிப்பு! தகிக்கும் கரூர் அரசியல்!
நம்பிக்கையில்லா தீர்மானம் மூலம் அதிமுக ஒன்றியக் குழுத் தலைவர் பதவி பறிப்பு.
கரூர்: கரூர் மாவட்டம் தோகைமலையில் அதிமுக ஒன்றியச் சேர்மன் லதா ரங்கசாமியின் பதவி நம்பிக்கையில்லா தீர்மானம் மூலம் பறிக்கப்பட்டுள்ளது.
இதில் கவனிக்க வேண்டிய விவகாரம் என்னவென்றால் திமுக கவுன்சிலர்களுடன் பாஜக கவுன்சிலர் ஒருவரும் கூட்டு சேர்ந்து அதிமுக ஒன்றியச் சேர்மன் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்தது தான்.
அமைச்சர் செந்தில்பாலாஜியின் கவனத்துக்கு செல்லாமல் இந்த விவகாரம் நடந்திருக்க வாய்ப்பில்லை எனக் கருதப்படுகிறது.

கரூர் மாவட்டம்
அமைச்சர் செந்தில்பாலாஜியின் சொந்த மாவட்டமான கரூரில் அரசியல் கலாட்டாகளுக்கு பஞ்சமே இருக்காது. அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கும் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கும் இடையே ஏழாம் பொருத்தம் என்பதால் எப்போதுமே அங்கு திமுக -அதிமுக இடையேயான அரசியல் அனல் பறக்கும். போதாகுறைக்கு அண்ணாமலை, ஜோதிமணி போன்றோரும் கரூரை சேர்ந்தவர்கள் என்பதால் காங்கிரஸ், பாஜக இடையேயும் அங்கு அரசியல் களம் சூடாகவே இருக்கும்.

திமுக கவுன்சிலர்கள்
இதனிடையே கரூர் மாவட்டம் குளித்தலை சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட தோகைமலையில் அதிமுக ஒன்றியக் குழுத் தலைவர் லதா ரங்கசாமி என்பவரது பதவி நம்பிக்கையில்லா தீர்மானம் மூலம் இன்று அதிரடியாக பறிக்கப்பட்டுள்ளது. வருவாய் கோட்டாட்சியர் முன்னிலையில் நடைபெற்ற வாக்கெடுப்பில் திமுக கவுன்சிலர்கள் 11 பேருடன் பாஜக கவுன்சிலர் ஒருவரும் கூட்டு சேர்ந்து அதிமுக ஒன்றியச் சேர்மனுக்கு எதிராக வாக்களித்ததால் பரிதாபமாக பதவியை பறிகொடுத்துள்ளார் லதா ரங்கசாமி.

தோகைமலை
இந்த வாக்கெடுப்பு நடைபெற்ற போது தோகைமலை ஒன்றிய அலுவலகத்துக்கு சென்ற குளித்தலை சட்டமன்ற உறுப்பினர் மாணிக்கம், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ராமர் உள்ளிட்டோர் கட்சியினருடன் சென்றதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. அமைச்சர் செந்தில்பாலாஜியின் கவனத்துக்கு செல்லாமல் இந்த விவகாரம் நடந்திருக்க வாய்ப்பில்லை எனக் கருதப்படுகிறது.

அதிமுகவுக்கு பதிலடி?
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி திமுக ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவர் தங்கதனம் நேற்று அதிமுகவில் இணைந்த நிலையில், கரூர் மாவட்டத்தில் அதிமுக ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவரின் பதவி நம்பிக்கையில்லா தீர்மானம் மூலம் பறிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. இதனிடையே இந்த விவகாரத்தை கண்டித்து எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி அறிக்கை விடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications