ஹிட் அண்ட் ரன் கேஸ்.. விஜய் பிரச்சார பேருந்தின் டிரைவர் மீது கரூர் போலீஸ் வழக்கு பதிவு
கரூர்: விஜய்யின் பிரச்சார வாகன ஓட்டுநர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மனித உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் வகையில் வாகனத்தை ஓட்டியதாக கரூர் வேலாயுதம்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். விஜய்யின் பிரசார வாகனத்தை பறிமுதல் செய்யலாமே என நீதிமன்றம் கூறியிருந்த நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கரூர் வேலுசாமிபுரத்தில் நடந்த விஜய்யின் தவெக பரப்புரை கூட்டத்தில் 41 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் துயரத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக நீதிமன்றம் தவெக மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன் வைத்தது. மேலும் விஜய்யின் பரப்புரை வாகனம் வந்துகொண்டிருந்தபோது இருசக்கர வாகனம் மீது மோதியது தொடர்பாகவும் நீதிமன்றம் கருத்து கூறியிருந்தது.

விஜய் பிரச்சார வாகனம் டிரைவர்
விஜய்யின் பரப்புரை வாகனத்தை ஏன் பறிமுதல் செய்யவில்லை?, ஏன் வழக்கு பதிவு செய்யவில்லை என்று நீதிமன்றம் கூறியிருந்தது. இந்த நிலையில் தான் விபத்து கரூர் தவிட்டுபாளையம் பகுதியில் நடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து கரூர் வேலாயுதம்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
விஜய்யின் பிரச்சார வாகன ஓட்டுனர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மனித உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் வகையில் வாகனத்தை ஓட்டியதாக கரூர் வேலாயுதம்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இதேபோல் அந்த இருசக்கர வாகனத்தில் வந்த இளைஞர் சந்துரு என்பவர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
பின் தொடரும் இளைஞர்கள்
தவெக தொண்டர்கள் இன்னும் ரசிகர்களாக தான் இருக்கிறார்கள் என்றும் விஜய்யை காணவேண்டும் என்பதற்காக அவர்கள் உயிர் மட்டும் இன்றி மற்றவர்கள் உயிருக்கும் ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் விஜய்யின் பிரச்சார வாகனத்தை பின் தொடர்வதாக சமூக ஆர்வலர்கள் பலர் குற்றச்சாட்டு வைத்து வருகிறார்கள்.
முன்பு முதன் முதலாக திருச்சி வந்தபோதும் விஜய்யின் பிரச்சார வாகனத்தை ரசிகர்கள் நாலாபுறமும் சூழ்ந்தனர். அவரது வாகனத்தை நகர விடாமல் பின் தொடர்ந்து வந்தனர். இந்த நிலையில் தான் சென்னை உயர்நீதிமன்றம் விஜய்யின் பிரச்சார வாகனத்தை ஏன் பறிமுதல் செய்யக்கூடாது என கேள்வி எழுப்பி இருந்தது.
நீதிபதி கூறியது என்ன
சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி என்.செந்தில்குமார் கடந்த 3ஆம் தேதி பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:- கரூரில் பிரச்சாரக் கூட்டத்தில் நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த நேரத்தில், சம்பவ இடத்தில் இருந்த கட்சித் தலைவரும், பிற நிர்வாகிகளும் தங்களுக்கும், நடந்த சம்பவத்துக்கும் எந்த சம்பந்தமும் இல்லாததுபோல நடந்துகொண்டுள்ளனர்.
கூட்ட நெரிசலில் சிக்கியவர்களுக்கோ, அவர்களது ஆதரவாளர்களுக்கோ எந்த உதவியும் செய்யவில்லை. உயிரிழந்தவர்கள் குடும்பத்தினருக்கு இரங்கலோ, ஆறுதலோ சொல்லவில்லை. பொறுப்பற்ற முறையில் அப்படியே விட்டுவிட்டு அங்கிருந்து சென்றது கடும் கண்டனத்துக்குரியது. அவர்களது இந்த பொறுப்பற்ற செயல்பாடு, மனித உயிர்களை குறைவாக மதிப்பிடும் ஆபத்தான அரசியல் பண்பாட்டை வெளிப்படுத்துகின்றது.
விஜய் பரப்புரை வாகனம்
இச்சம்பவம் குறித்து விசாரிக்க வடக்கு மண்டல ஐ.ஜி. அஸ்ரா கார்க் தலைமையில் சிறப்பு புலனாய்வு குழுவை அமைக்கிறேன். சம்பவத்தில் தொடர்புடைய விஜய்யின் பிரச்சார வாகனத்தை பறிமுதல் செய்து விசாரணை நடத்த வேண்டும். இவ்வாறு உத்தரவில் கூறியிருந்தார். இந்த நிலையில் விஜய் பரப்புரை வாகன டிரைவர் மீது வழக்கு பதிவு செய்துள்ள நிலையில் அவரது வாகனமும் எப்போது வேண்டுமானாலும் பறிமுதல் செய்யப்படலாம் என தெரிகிறது. விஜய்யின் பரப்புரை வாகனம் சென்னை பனையூரில் நிறுத்தப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications