பூதக்கண்ணாடி மட்டும் தான் பாக்கி..இன்ச் இன்ச்சாக விஜயின் பஸ்ஸை பதம் பார்த்த சிபிஐ! களத்தில் உள்துறை!
கரூர்: கரூர் துயர சம்பவத்தில் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் பிரச்சாரம் மேற்கொண்ட பிரச்சார வாகனம் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில், இன்று அந்த பிரச்சார பேருந்தை சிபிஐ அதிகாரிகள் ஆய்வு செய்தனர். இந்நிலையில், சிபிஐ அதிகாரிகள் மட்டுமல்லாது மத்திய உள்துறை அமைச்சக விவகாரத் துறை அதிகாரி முன்னிலையில், மத்திய தடயவியல் அறிவியல் துறை ஆய்வக குழுவினரும் ஆய்வு செய்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
கரூரில் கடந்த செப்டம்பர் மாதம் 27-ம் தேதி தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் பிரச்சார கூட்டத்தில் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியான சம்பவம் தொடர்பாக, உச்சநீதிமன்ற உத்தரவுப்படி உச்சநீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி அஜய் ரஸ்தோகி மேற்பார்வை சிபிஐ விசாரித்து வருகின்றனர்.
சிபிஐ ஏஎஸ்பி முகேஷ் குமார் தலைமையிலான சிபிஐ அதிகாரிகள் கரூரிலேயே முகாமிட்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கடந்த அக்டோபர் 16-ம் தேதி முதல் கரூரில் உள்ள தான்தோன்றிமலையில் உள்ள சுற்றுலா மாளிகையில் தங்கி விசாரணை நடத்தி வருகின்றனர்.

கரூர் துயர சம்பவம்
இந்நிலையில், கடந்த மூன்று மாதங்களுக்கு மேலாக வேலுச்சாமிபுரம் பகுதி பொதுமக்கள், தனியார் ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள், உடற்கூறு ஆய்வு செய்த மருத்துவர்கள், உயிரிழந்தவரின் குடும்பத்தினர் என பல்வேறு நபர்களிடம் தொடர்ந்து சி.பி.ஐ விசாரணை நடத்தி வருகிறது. மேலும், கரூர் மாவட்ட ஆட்சியர் மீ. தங்கவேல், திருச்சி மத்திய மண்டல ஐஜி ஜோஷி நிர்மல்குமார், எஸ்பி கே. ஜோஷ்தங்கையா உள்ளிட்ட காவல்துறை உயரதிகாரிகளிடமும் சிபிஐ விசாரணை நடத்தியது.
சிபிஐ விசாரணை
தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையக்குழுவும் சம்பவ இடத்தை நேரில் பார்வையிட்டு, தனியார் மருத்துவமனைகளில் பாதிக்கப்பட்டவர்களிடம் விசாரணை நடத்தி சென்றது. இந்நிலையில், வரும் 12ஆம் தேதி தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் டெல்லி சிபிஐ அலுவலகத்தில் நேரில் ஆஜராக சம்மன் வழங்கியது.இதற்கிடையே கரூர் சிபிஜ அலுவலகத்திற்கு தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் கடந்த செப்டம்பர் மாதம் 27ஆம் தேதி பிரச்சார கூட்டத்திற்கு பயன்படுத்தப்பட்ட வாகனம் சிபிஜ அலுவலகத்தில் பறிமுதல் செய்யப்பட்டு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
தடயவியல் ஆய்வு
இந்த பிரச்சார வாகனத்தை ஓட்டி வந்த ஓட்டுநர் இன்று நேரில் ஆஜரானார். ஏற்கனவே டெல்லியில அந்த பிரச்சார வாகனத்தோட டிரைவரை சிபிஐ அதிகாரிகள் விசாரித்த நிலையில், அவரை கரூர் அழைத்து வந்து அந்த குறிப்பிட்ட பேருந்திலேயே வைத்து விசாரணை நடத்தினர். எவ்வளவு நேரம் பிரச்சாரம் நடந்த இடத்தில் பேருந்து நிறுத்தப்பட்டது? யார் அது தொடர்பான அறிவுறுத்தல்களை வழங்கியது? எப்போது கூட்டம் முடிந்தது? எப்போது கூட்டம் முடிந்து விஜய் புறப்பட்டார்? என பல கேள்விகளை சிபிஐ அந்த ஓட்டுனரிடம் கேட்டதாக சொல்லப்படுகிறது.
மத்திய தடயவியல் அறிவியல் துறை
மேலும் பேருந்தில் ஏதும் ஆவணங்கள், சிசிடிவி காட்சிகள் எதுவும் இருக்கிறதா சல்லடை போட்டு சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தியதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. ஏற்கனவே டெல்லியில் கேட்கப்பட்ட கேள்விகளையும் இப்போது பேருந்திலும் வைத்து சில கேள்விகளையும் அந்த ஓட்டுனரிடம் சிபிஐ அதிகாரிகள் கேட்டதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில், சிபிஐ அதிகாரிகள் மட்டுமல்லாது மத்திய உள்துறை அமைச்சக விவாகாரத் துறை அதிகாரி முன்னிலையில், மத்திய தடயவியல் அறிவியல் துறை ஆய்வக குழுவினரும் ஆய்வு செய்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
மத்திய உள்துறை அமைச்சகம்
சம்பவம் நடந்த இடத்திலும், மத்திய உள்துறை அமைச்சக விவகாரத்துறை அதிகாரி தலைமையில் மத்திய தடயவியல் அறிவியல் துறை ஆய்வகக் குழுவினர் தொடர்ந்து ஆய்வு மேற்கொண்டனர். பேருந்தின் உள்பகுதி, மேல் பகுதி, விஜய் அறை, ஒட்டுனர் பகுதியில் ஆய்வு மேற்கொண்ட அவர்கள், பேருந்தை முன், பின்னராக இயக்கக்கூறி ஆய்வு செய்தனர். மெலும் வேலுச்சாமிபுரத்தில் இரண்டாவது நாளாக சாலை அளவீடு உள்ளிட்ட தொழில்நுட்ப ஆய்வுகள் நடைபெற்று வருகின்றன.












Click it and Unblock the Notifications