FREE FIRE கேமால் சிதைந்த குடும்பம்.. நண்பர்கள் மோசடி! தாயின் சேலையில் தூக்கிட்டு மாணவர் தற்கொலை
கரூர்: ஃப்ரீ ஃபையர் ஆன்லைன் கேம் 2 ஐடிக்களை நண்பர்கள் திருடியதால் மனமுடைந்த கல்லூரி மாணவர் தாயின் சேலையை தூக்குக் கயிறாக மாற்றி தற்கொலை செய்திருக்கிறார்.
Recommended Video
கரூர் சிவசக்தி நகரை சேர்ந்தவர் சத்தியபாமா. கணவரை பிரிந்து தனது 23 வயது மகன் சஞ்சயுடன் வசித்து வந்துள்ளார்.
சஞ்சய் 12 ஆம் வகுப்பு முடித்து விட்டு, முதலில் ஒரு தனியார் கல்லூரியில் கேட்டரிங் படித்துள்ளார். அந்த கல்லூரியில் படிப்பை தொடர முடியாமல் வெளியேறி மற்றொரு தனியார் கல்லூரியில் படித்து வந்துள்ளார்.

FREE FIRE மோகம்
கல்லூரிக்கு கல்வி கட்டணம் செலுத்த முடியாத சூழல் ஏற்பட்டதால் கடந்த ஒரு ஆண்டு காலமாக கல்லூரிக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டு வீட்டிலேயே முடங்கி கிடந்துள்ளார் சஞ்சய். சாப்பாடு பரிமாறுவது, குல்பி தயாரிப்பு நிறுவன பணிக்கு செல்வது என சிறிய சிறிய தினக் கூலி வேலைக்கு சஞ்சய் சென்று வந்து இருக்கிறார். 12 ஆம் வகுப்பு படிக்கும்போதே ஸ்மார்ட் போனில் Free Fire விளையாடுவதில் ஆர்வம் கொண்டவர் சஞ்சய்.

கேம் விளையாடி பணம்
பள்ளி, கல்லூரிக்கு சென்று வந்த பிறகு ஆன்லைன் விளையாட்டை தொடர்ந்து விளையாடி வந்து இருக்கிறார். கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதை அடுத்து இளைஞர் தொடர்ந்து ஆன்லைன் விளையாட்டில் ஈடுபட்டு வந்து இருக்கிறார். இரவு பகலாக விளையாடி நிறைய பணம் சேர்த்து வைத்திருந்ததாக கூறப்படுகிறது.

ஏமாற்றிய நண்பன்
அப்போது சஞ்சயிடம் பேசிவிட்டு தருவதாக சொல்லி செல்போனை வாங்கிய அவரது நண்பன் ஆன்லைன் கேம்மின் பாஸ்வேர்டை திருடி தன்னுடைய பெயருக்கு மாற்றிக் கொண்டு செல்போன் தொலைந்து விட்டதாக கூறி ஏமாற்றியுள்ளனர். இதனை தனது சக நண்பர்களிடம் கூறி புலம்பியுள்ளார் சஞ்சய். 6 மாதத்திற்கு முன் நடந்த இந்த சம்பவத்தால் அவர் மன உளைச்சலில் இருந்ததாக கூறப்படுகிறது.

தற்கொலை
இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு புதிதாக ஐடி தொடங்கி FREE FIRE விளையாடி இருக்கிறார் சஞ்சய். ஒரு லட்சம் மதிப்புள்ள இந்த ஐடியையும் முன்புபோல் வேறு நண்பன் திருடிவிட்டதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் தனது தாயின் புடவையை கொண்டு தூக்கு மாட்டி சஞ்சய் தற்கொலை செய்துள்ளார். தகவலறிந்து அங்கு சென்ற போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைகாக அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.












Click it and Unblock the Notifications