கரூரில் ஐடி அதிகாரிகளை தாக்கிய திமுகவினர் 19 பேருக்கும் நிபந்தனை ஜாமீன்.. கரூர் நீதிமன்றம் உத்தரவு
கரூர்: கரூரில் அமைச்சர் செந்தில் பாலாஜி தொடர்புடைய இடங்களில் சோதனை நடத்த சென்ற வருமான வரித்துறை அதிகாரிகளை தடுத்து தாக்கிய வழக்கில் கைதான திமுக கவுன்சிலர்கள் உள்பட 19 பேருக்கும் நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கி உள்ளது.
முதல்வர் ஸ்டாலின் அமைச்சரவையில் தமிழக மின்சாரத்துறை மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வை துறை அமைச்சராக செந்தில் பாலாஜி உள்ளார். இந்நிலையில் தான் இவர் தொடர்புடைய இடங்களில் கடந்த மாதம் 26ம் தேதி முதல் வருமான வரித்துறை அதிகாரிகள் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர்.

சென்னை, கோவை, கரூர் மாவட்டங்களில் இந்த சோதனைகள் துவங்கி நடந்தது. இன்றும் சில இடங்களில் சோதனை நடந்தது. தமிழ்நாட்டில் மொத்தம் 40க்கும் அதிகமான இடங்களில் ஒரே நேரத்தில் சோதனை துவங்கியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இந்நிலையில் தான் கடந்த 26ம் தேதி கரூரில் சோதனை நடத்த சென்ற வருமான வரித்துறை அதிகாரிகளுக்கு திமுகவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் அவர்களை தடுத்து நிறுத்தி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். காரையும் உடைத்தனர். மேலும் அவர்கள் நடத்திய தாக்குதலில் 4 அதிகாரிகள் காயமடைந்தனர். இந்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
இதைடுத்து காயமடைந்து அதிகாரிகள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று டிஸ்சார்ஜ் ஆகினர். இதுதொடர்பாக வருமான வரித்துறையின் அளித்த புகாரில் கரூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தினர். இந்த விசாரணையை தொடர்ந்து 19 பேரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.
திமுக கரூர் மாநகராட்சி வடக்கு இளைஞரணி துணை அமைப்பாளரும், மாநகராட்சி மேயரின் உறவினருமான பூபேஷ், ஷாஜகான், சிவபிரகாசம், சின்னசாமி, ஆறுமுகம், தமிழ்ச்செல்வன், ரஜினி சிவா, கரூர் மாநகராட்சி 20வது வார்டு கவுன்சிலர் லாரன்ஸ், அவரது சகோதரர் ரீகன், 16வது வார்டு கவுன்சிலர் பூபதி உள்பட மொத்தம் 19 பேர் அதிரடியாக கைது செய்யப்பட்டனர்.
இவர்கள் அனைவரும் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டு இருந்தனர். இதற்கிடையே தான் கைதான 19 பேரும் தங்களுக்கு ஜாமீன் வேண்டும் என கரூர் மாவட்ட மகிளா நீதிமன்றத்தில் மனு செய்தனர். இந்த மனுவை இன்று விசாரித்த நீதிமன்றம் 19 பேருக்கும் நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது.












Click it and Unblock the Notifications