17 மணி நேர பரபர.. செந்தில் பாலாஜியின் சென்னை, கரூர் வீடுகளில் அமலாக்கத்துறை ரெய்டு நிறைவு
சென்னை: அமைச்சர் செந்தில் பாலாஜியின் சென்னை மற்றும் கரூர் வீட்டில் நடைபெற்று வந்த அமலாக்கத்துறை சோதனை நிறைவடைந்து இருக்கிறது.
கடந்த மே மாதம் தமிழ்நாடு மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு தொடர்புடைய இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடைபெற்றது. இந்த நிலையில் செவ்வாய்கிழமை காலை முதல் அவருடைய வீடு உட்பட அவருக்கு தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை சோதனை தொடங்கியது.

செந்தில் பாலாஜியின் வீட்டுக்கு மத்திய துணை ராணுவ படையினர் பாதுகாப்புடன் சென்ற அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை மேற்கொண்டனர். கரூரில் உள்ள செந்தில் பாலாஜியின் வீடு, சென்னை அடையாறு பசுமை வழிச் சாலையில் இருக்கும் செந்தில் பாலாஜி வீடு, அவரது சகோதரரின் வீடு மற்றும் அலுவலகங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர்.
தமிழ்நாடு தலைமை செயலகத்தில் உள்ள மின்சாரத்துறை அமைச்சருக்கான செந்தில் பாலாஜியின் அறையிலும் மதியத்தில் இருந்து அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள். தமிழ்நாடு அரசின் தலைமையகமான தலைமை செயலகத்திலேயே நடைபெற்ற இந்த சோதனை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
அதிமுக ஆட்சி காலத்தில் செந்தில் பாலாஜி போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்த போது அவருக்கு எதிராக பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகள் எழுந்தன. போக்குவரத்துத் துறையில் ஓட்டுநர், நடத்துனர் பணிகளை வாங்கித் தருவதாக கூறி சட்டவிரோதமாக பண பரிமாற்றம் செய்ததாக அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் இது தொடர்பாக செந்தில் பாலாஜி மீது 3 வழக்குகளை பதிவு செய்தனர். இந்த வழக்குகள் பல ஆண்டுகளாக எம்பி, எம்.எல்.ஏக்களுக்கான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணையில் இருந்து வருகின்றன. செந்தில் பாலாஜி உள்ளிட்டோர் இந்த வழக்கு தொடர்பாக விசாரணைக்கு ஆஜராகுமாறு மத்திய அரசின் கீழ் செயல்படும் அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியது.
செந்தில் பாலாஜி தரப்பில் இதற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில், அமலாக்கத்துறையின் சம்மனை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்தது. அமலாக்கத்துறை இந்த உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் கடந்த மே மாதம் அமலாக்கத்துறை விசாரணைக்கு அனுமதி அளித்தது.
இந்த நிலையில் கரூரில் 6 இடங்களில் நடைபெற்ற சோதனை 15 மணி நேரம் கழித்து நிறைவடைந்து உள்ளது. கரூரில் உள்ள செந்தில் பாலாஜி வீட்டிலும் சோதனை முடிவடைந்து உள்ளது. சென்னை அடையாறு கிரீன்வேஸ் சாலையில் உள்ள செந்தில் பாலாஜி வீட்டிலும் 17 மணி நேரம் நடைபெற்ற சோதனை நிறைவடைந்துள்ளது.












Click it and Unblock the Notifications