கரூரில் 8-வது நாளாக ஐடி ரெய்டு..வழக்கறிஞர் வீட்டில் 2 பெட்டிகளில் ஆவணங்கள்..அள்ளி சென்ற அதிகாரிகள்
கரூர்: கரூரில் அமைச்சர் செந்தில் பாலாஜியுடன் தொடர்புடையவர்களுக்கு சொந்தமான இடங்களில் 8-வது நாளாக வருமான வரித்துறை சோதனை நடைபெற்று வருகிறது. நேற்றை விட கூடுதல் இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் இன்று சோதனை நடத்தி வருகிறார்கள்
கரூரில் அமைச்சர் செந்தில் பாலாஜியின் தம்பி அசோக்குமார், அவரது ஆதரவாளர்கள், உறவினர்கள், நண்பர்கள், ஒப்பந்ததாரர் ஆகியோரின் வீடுகள், அலுவலகங்கள், கல் குவாரிகள் உட்பட பல்வேறு இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் கடந்த மே 26ஆம் தேதி முதல் சோதனை நடத்தி வருகின்றனர்.

சோதனை நடைபெற்ற முதல் நாளில் வருமான வரித்துறை அதிகாரிகளுக்கு பல இடங்களில் திமுகவினர் எதிர்ப்பு தெரிவித்தனர். வருமான வரித்துறை அதிகாரிகள் வந்த கார் சேதப்படுத்தப்பட்டது. இதையடுத்து, மத்திய பாதுகாப்பு படை பாதுகாப்புடன் தொடர்ந்து கரூரில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகிறார்கள். சோதனையின் போது ஒருசில இடங்களுக்கு வருமான வரித்துறையினர் சீல் வைத்துள்ளனர்.
நேற்று கரூர் ராமகிருஷ்ணபுரத்தில் உள்ள ஒரு வீடு, மாயனூரில் உள்ள பண்ணை தோட்டம், கரூர் ராயனூரில் உள்ள ஒரு வீடு, கரூரில் ஒரு அலுவலகத்திலும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை கொண்டனர். இந்த நிலையில் 8-வது நாளாக இன்றும் சோதனை நடைபெற்று வருகிறது. நேற்று கரூரில் 22 இடங்களில் வருமானவரி அதிகாரிகள் சோதனை நடத்தி வந்த நிலையில், இன்று கூடுதலான இடங்களில் வருமான வரி அதிகாரிகள் சோதனை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.
இதனிடையே, கரூர் லாரி மேட்டில் உள்ள வழக்கறிஞர் செங்கோட்டையன் வீட்டில் நேற்று மதியம் முதல் சோதனை நடந்தது. இன்றும் சோதனை தொடரும் நிலையில், இரண்டு பெட்டிகளில் ஆவணங்களை அதிகாரிகள் எடுத்து சென்றனர். இரண்டு அட்டை பெட்டிகளை தூக்க முடியாமல் துக்கிக் கொண்டு அவர்களது காரில் எடுத்து கொண்டு சென்றனர்.
அதேபோல், கரூரில் அமைச்சர் செந்தில் பாலாஜியின் நண்பர் மணியின் கொங்கு மெஸ் உணவு விடுதிக்கு ஐடி அதிகாரிகள் சீல் வைத்து இருந்த நிலையில், வருமான வரித்துறையினரால் வைக்கப்பட்ட சீல் அகற்றப்பட்டு இன்று சோதனை மேற்கொள்ளப்பட்டது. பிறகு மீண்டும் அதிகாரிகள் சீல் வைத்து சென்றனர். வருமான வரித்துறை சோதனை நடைபெறும் இடங்களில் துப்பாக்கி ஏந்திய துணை ராணுவம் மற்றும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.


Click it and Unblock the Notifications
