தவெக மாநகர செயலாளரின் ஜாமீன் மனுவும் தள்ளுபடி.. கரூர் நீதிமன்றம் அதிரடி
சென்னை: கரூர் துயரச் சம்பவ வழக்கில் கைது செய்யப்பட்ட மாசி பவுன்ராஜ் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்த நிலையில், அவரது ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இன்னும் விசாரணை எதுவும் முழுமையடையாமல் உள்ள நிலையில், மாசி பவுன்ராஜுக்கு ஜாமீன் வழங்க முடியாது எனக் கூறி அவரது ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
கரூர் மாவட்டம் வேலுச்சாமிபுரத்தில் செப்டம்பர் 27 ஆம் தேதி நடந்த தவெக பிரச்சாரக் கூட்டத்தில் நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். 110-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இது தொடர்பாக கரூர் நகர போலீசா,ர் கரூர் மேற்கு மாவட்ட செயலாளர் மதியழகன், தவெக பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த், தவெக மாநில இணை பொது செயலாளர் நிர்மல் குமார் ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்தனர்.

மதியழகன், புஸ்ஸி ஆனந்த், நிர்மல்குமார் ஆகியோர் மீது கொலைக்குச் சமமான குற்றப்பிரிவு 105, குற்றமற்ற கொலை செய்ய முயற்சி செய்தல் பிரிவு 110, மனித உயிருக்கு ஆபத்து ஏற்படும் எனத் தெரிந்தும் அலட்சிய போக்குடன் நடந்துகொள்ளும் குற்றப்பிரிவு 125பி, பொது அதிகாரிகளின் உத்தரவுகளுக்கு கீழ்படியாமல் இருத்தல் குற்றப்பிரிவு 223, பொது சொத்துக்கு சேத விளைவித்தல் குற்றப்பிரிவு டிஎன்பிபிடிஐ ஆகிய 4 பிரிவுகளின் கீழ் கரூர் நகர காவல் நிலையத்தினர் வழக்குப் பதிவு செய்தனர்.
இந்த வழக்கில் தலைமறைவாக இருந்த கரூர் மேற்கு மாவட்டச் செயலாளர் மதியழகனை திண்டுக்கல் மாவட்டம் குஜிலியம்பாறையில் கட்சியின் மாநகரச் செயலாளர் மாசி பௌன்ராஜ் வீட்டில் தங்கியிருந்தபோது, அவரையும், அவருக்கு உதவிய மாசி பவுன்ராஜையும் கடந்த மாதம் 29 ஆம் தேதி கைது செய்து சிறையில் அடைத்தனர்.
கரூர் நகர காவல் நிலையத்தில் இருவரிடம் விடிய விடிய விசாரணை நடத்திய நிலையில், இருவரையும் கரூர் குற்றவியல் நீதிமன்றம் 1-ல் செப்டம்பர் 30 ஆம் தேதி நேரில் ஆஜர்படுத்தினர். அரசு தரப்பு, தவெக தரப்பு வழக்கறிஞர்கள் இருவரிடையே காரசாரமான விவாதங்கள் நடைபெற்ற நிலையில் மதியழகன், மாசி பவுன்ராஜ் ஆகிய இருவரையும் 15 நாள் காவலில் வைக்க மாஜிஸ்திரேட் பரத்குமார் உத்தரவிட்டார்.
இந்நிலையில் கடந்த அக்டோபர் 6 ஆம் தேதி மாசி பவுன்ராஜ் சார்பில் ஜாமீன் மனு கரூர் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி இளவழகன், இன்னும் விசாரணை எதுவும் முழுமையடையாமல் உள்ள நிலையில், மாசி பவுன்ராஜுக்கு ஜாமீன் வழங்க முடியாது எனக் கூறி அவரது ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
முன்னதாக, புஸ்ஸி ஆனந்தும், சி.டி.ஆர் நிர்மல் குமாரும் முன் ஜாமீன் கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தனர். ஆனால் உயர்நீதிமன்றம் இருவரின் மனுவையும் தள்ளுபடி செய்து முன் ஜாமீன் வழங்க மறுத்து விட்டது. இந்நிலையில், உயர்நீதிமன்றம் கைவிரித்து விட்டதால் புஸ்ஸி ஆனந்தும், நிர்மல் குமாரும் முன் ஜாமீன் கோரி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்துள்ளனர்.












Click it and Unblock the Notifications