விஜய் இன்னும் பாதிக்கப்பட்ட மக்களை சந்திக்கலையே.. தவெகவுக்கு ஆறுதலாக எடப்பாடி சொன்ன வார்த்தை!
கரூர்: தவெக தலைவர் விஜய் இன்னும் பாதிக்கப்பட்ட மக்களை சந்திக்காதது தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கருத்து தெரிவித்துள்ளார். யார் யார் என்னென்ன மனநிலையில் இருப்பார்கள் என்பது நமக்குத் தெரியாது என்று கூறிய எடப்பாடி பழனிசாமி, அரசியலை கடந்து எல்லோரும் சிந்திக்க வேண்டிய தருணம் இது என்றும் அறிவுறுத்தி இருக்கிறார்.
கரூரில் விஜய் பிரச்சாரக் கூட்ட நெரிசலில் சிக்கி 39 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. கரூரில் விஜய் பேசத் தொடங்கிய போதே பலரும் மயக்கம் அடைந்த நிலையில், அவர் பிரச்சாரத்தை முடித்து திருச்சியில் இருந்து தனி விமானம் மூலமாக சென்னை திரும்பினார். பத்திரிகையாளர்களை கூட சந்திக்காத விஜய், சம்பவம் நடந்து 4 மணி நேரத்திற்கு பின் தனது எக்ஸ் பக்கத்தில் இரங்கலை பதிவிட்டார்.

அதில், இதயம் நொறுங்கிப் போய் இருக்கிறேன். தாங்க முடியாத, வார்த்தைகளால் சொல்ல முடியாத வேதனையிலும் துயரத்திலும் உழன்று கொண்டிருக்கிறேன். கரூரில் உயிரிழந்த எனதருமை சகோதர சகோதரிகளின் குடும்பங்களுக்கு என் ஆழ்ந்த அனுதாபங்களையும், இரங்கலையும் தெரிவித்துக்கொள்கிறேன். மருத்துவமனையில் சிகிச்சை பெறுவோர், விரைவில் குணமடைய பிரார்த்திக்கின்றேன் என்று பதிவிட்டிருந்தார்.
தவெக தலைவர் விஜய் தனி விமானத்தில் சென்னை வந்து இறங்கிய சில மணி நேரங்களிலேயே, முதல்வர் ஸ்டாலின் தனி விமானம் மூலமாக நள்ளிரவிலேயே திருச்சி வந்து, அங்கிருந்து கரூர் அரசு மருத்துவமனைக்கு வந்து பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் தெரிவித்தார். அதேபோல் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியும் பாதிக்கப்பட்டவர்களை சந்தித்து ஆறுதல் கூறினார்.
இதன்பின் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், அதிமுக நிகழ்ச்சிகளுக்கு கூட காவல்துறை முழுமையாக பாதுகாப்பு வழங்கியதில்லை. கூட்ட நெரிசல் ஏற்பட்டால், அதனை ஒழுங்குபடுத்தும் பணியில் காவல்துறை ஈடுபடவில்லை. ஆனால் ஆளுங்கட்சி நிகழ்ச்சி என்றால் ஆயிரக்கணக்கான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர்.
திமுக ஆட்சியில் எதிர்க்கட்சிகள் கூட்டங்களை நடத்துவது சிரமமாக உள்ளது. முழுமையாக பாதுகாப்பு வழங்கி இருந்தால், தள்ளுமுள்ளை கட்டுப்படுத்தி இந்த உயிரிழப்புகளை கட்டுப்படுத்தி இருக்கலாம். அதேபோல் விஜய்யையும் இதனை கவனித்திருக்க வேண்டும். ஏனென்றால் சொன்ன நேரத்திற்கு கூட்டத்தை நடத்தாமல், தாமதமாக வந்தா பிரச்சனைகள் ஏற்படும்.
இந்த நேரத்தில் யாரையும் குற்றம்சாட்ட விரும்பவில்லை என்றார். தொடர்ந்து விஜய் இன்னும் மருத்துவமனைக்கு வந்து பாதிக்கப்பட்டவர்களை சந்திக்கவில்லையே என்ற எழுப்பப்பட்ட கேள்விக்கு, நடந்திருப்பது மிக மிக துயர சம்பவம். இதில் யார் யார் என்னென்ன மன நிலையில் இருப்பார்கள் என்பது நமக்குத் தெரியாது. அரசியலை கடந்து எல்லோரும் சிந்திக்க வேண்டிய தருணம் இது என்று பதில் அளித்துள்ளார்.












Click it and Unblock the Notifications