எல்லா கட்சிக்கும் போயிட்டார்.. இனி தேமுதிகவிற்கு வருவார்.. செந்தில்பாலாஜியை வம்பிழுத்த பிரேமலதா !
கரூர்: அமைச்சர் செந்தில்பாலாஜி எல்லா கட்சிக்கும் சென்றுவந்தவர் என்றும் அவர் விரைவில் தேமுதிகவுக்கு வந்தாலும் வருவார் எனவும் அக்கட்சியின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் பேசியிருக்கிறார்.
கரூரில் தேமுதிக வேட்பாளர்களை போட்டியிலிருந்து ஒதுங்குமாறு ஆளுங்கட்சியினர் மிரட்டியதாக குற்றஞ்சாட்டினார்.
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை ஒட்டி கரூர் மாவட்டத்தில் பரப்புரை செய்த அவர் இதனைக் கூறினார்.

கரூர் மாவட்டம்
கரூர் மாவட்டத்தில் புலியூர், உப்பிடமங்கலம், புஞ்சை தோட்டக்குறிச்சி, அரவக்குறிச்சி உள்ளிட்ட பேரூராட்சிகளில் தேமுதிக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து அக்கட்சியின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் பரப்புரை செய்தார். அப்போது அவர் பேசுகையில், தேமுதிகவை பொறுத்தவரை பொய் வாக்குறுதிகளை கொடுப்பதில்லை என்றும் மக்கள் மத்தியில் என்ன செய்வோமோ அதைத்தான் வாக்குறுதியாக கொடுப்போம் எனவும் கூறினார்.

குற்றச்சாட்டு
கரூரில் ஆளுங்கட்சிக்கு வேட்பாளர்கள் இருக்கிறார்களா இல்லையா என்று தெரியவில்லை என்றும் மற்றக் கட்சி வேட்பாளர்களை வாபஸ் வாங்கச் சொல்லி மிரட்டினார்கள் எனவும் குற்றஞ்சாட்டினார். தமிழகத்தில் எத்தனைக் கட்சி உள்ளது என கரூரில் உள்ள அமைச்சரை கேட்டால் சரியாக சொல்வார் என அமைச்சர் செந்தில்பாலாஜியை சூசகமாக சாடினார். அனைத்துக் கட்சிக்கும் சென்று வந்த செந்தில்பாலாஜி விரைவில் தேமுதிகவுக்கு வந்தாலும் வந்துவிடுவார் எனப் பேசினார்.

தேமுதிக ஓட்டுக்கள்
யாருடைய குறைகளையும் சுட்டிக்காட்டி தேமுதிகவுக்கு ஓட்டு வாங்கும் அவசியம் கிடையாது என்றும் ஆனால் நாட்டில் நடக்கும் அவலங்களை சொல்ல வேண்டியது தேமுதிகவினரின் கடமை எனவும் கூறினார். மக்களை முட்டாளாக நினைத்து அவர்களின் வாக்குகளை வாங்க வேண்டும் என்பதற்காக பொய்யான வாக்குறுதி தருபவர்களுக்கு இந்த தேர்தலில் சரியான பதிலடியை மக்கள் கொடுக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.

மக்களை ஏமாற்றி
ஆட்சி அதிகாரம், பணபலம், அதிகார பலம் இருக்கிறது என்பதற்காக மக்களை ஏமாற்றிவிடலாம் என கனவு காண்பவர்களுக்கு மக்கள் பாடம் புகட்ட வேண்டும் என்றும் தேமுதிகவுக்கு ஒரு வாய்ப்பு கொடுத்திருந்தால் தமிழகத்தின் தலை எழுத்தையே கேப்டன் மாற்றி இருப்பார் எனவும் ஆதங்கப்பட்டார். இன்னும் தங்களுக்கு அந்த வாய்ப்பு உள்ளதாகவும் எந்த நோக்கத்திற்காக கட்சி ஆரம்பிக்கப்பட்டதோ அந்த நோக்கத்தை தேமுதிக செய்து முடிக்கும் எனவும் பிரேமலதா விஜயகாந்த் பேசினார்.












Click it and Unblock the Notifications