கரூரில் கடும் கோபத்தில் இருந்த சரண்யா.. ஒரே அடியில் காலியான கணவன்.. என்ன நடந்தது?
கரூர்: கரூர் ராயனூர் தில்லைநகர் பகுதியை சேர்ந்த சந்திரசேகர் என்பவர் கூலி தொழிலாளியாவார். இவரது மனைவி சரண்யா.. இவர்களுக்கு திருமணம் ஆகி 4 வருடங்கள் ஆகிறது. சந்திரசேகருக்கு குடிப்பழக்கம் உள்ளதாக கூறப்படுகிறது. அடிக்கடி மது அருந்திவிட்டு வருவாராம். அப்படித்தான் நேற்று முன்தினம் குடிபோதையில் இருந்த சந்திரசேகர் மனைவியுடன் தகராறு செய்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த மனைவி, செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தமிழ்நாட்டில் மதுப்பழக்கத்தால் பாதிக்கப்படாத குடும்பங்களை ஒவ்வொரு ஊரிலும் விரல் விட்டு எண்ணிவிடலாம். தினமும் மது அருந்திவிட்டு வருவது பலருக்கும் தினசரி பழக்கமாகிவிட்டது. மது அருந்துவதால் உடல் நலன் பாதிக்கப்படுவதுடன், அவர்களின் பொருளாதாரமும் மோசமாக பாதிக்கப்படுகிறது. தினமும் 200 முதல் 500 வரை சராசரியாக சில ஏழைகள் குடிப்பதற்காக செலவு செய்வது நடக்கிறது. இதனால் அவர்கள் கூலி வேலை செய்து சம்பாதிக்கும் பணம் அதற்கே போய்விடுகிறது.

அவர்கள் குடிப்பதற்காக செலவு செய்துவிடுவதால், அவர்களின் குழந்தைகளின் எதிர்காலம் பாதிக்கப்படுகிறது.குடிப்பழக்கம் காரணமாக நிலையான வேலைக்கு செல்வது இல்லை. குடும்பத்திலும் மனைவியை சந்தேகப்பட்டு அடிப்பது, தகராறு செய்வது அடிக்கடி நடக்கிறது. குடிக்கார கணவன்களால் பாதிக்கப்படும் பெண்கள், ஆத்திரத்தில் கொலை செய்யும் அளவிற்கு போய்விடுகிறார்கள். பலர் இப்படி ஆத்திரத்தில் குடிக்கார கணவனின் டார்ச்சாரால் அவரை காலி செய்துவிட்டு சிறையில் இருக்கிறார்கள். அந்த வரிசையில் கரூர் சரண்யாவும் இணைந்துள்ளார்.
கரூர் ராயனூர் தில்லைநகர் பகுதியை சேர்ந்த 33 வயதாகும் சந்திரசேகர் என்பவர் கூலித்தொழிலாளியாவார். இவரது மனைவி சரண்யாவுக்கு 30 வயது ஆகிறது. இந்த தம்பதிக்கு திருமணமாகி 4 வருடங்கள் ஆகிறது. கடந்த ஓராண்டிற்கு முன்பு இவர்களின் மகன் உடல்நிலை சரியில்லாமல் உயிரிழந்துவிட்டார். இந்த தம்பதி மட்டும் வீட்டில் வசித்து வந்தனர். கடந்த ஏப்ரல் 13ம் தேதி இரவு சந்திரசேகர் குடிபோதையில் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் சந்திரசேகருக்கும், சரண்யாவுக்கும் இடையே தகராறு ஏற்பட்டு வாக்குவாதம் உண்டானதாக சொல்லப்படுகிறது.
இதனால் ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்த சரண்யா வீட்டில் கிடந்த கட்டையால் சந்திரசேகரின் பின்தலையில் ஓங்கி அடித்துவிட்டதாக கூறப்படுகிறது. இதில் சந்திரசேகர் பலத்த காயம் அடைந்து மயங்கி விழுந்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த சரண்யா, சந்திரசேகரை மீட்டு கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் அவர் திருமாநிலையூர் பகுதியில் உள்ள தனது தாய் வீட்டிற்கு சென்று விட்டார்.
இந்நிலையில் நேற்று காலை சந்திரசேகர் பேச்சு மூச்சு இல்லாமல் கிடந்தார். இதையடுத்து அவரை உறவினர்கள் மீட்டு மீண்டும் சிகிச்சைக்காக கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு சந்திரசேகரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இந்த கொலை குறித்த புகாரின்பேரில், போலீசார் வழக்குப்பதிந்து சரண்யாவை கைது செய்தனர். போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications