என்ன அநியாயம் இது? கொந்தளித்த ஜோதிமணி.. எதுவும் சொல்லாத செந்தில் பாலாஜி.. மீட்டிங்கில் நடந்தது என்ன?
கரூர்: நேற்று நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக திமுக நடத்திய கூட்டத்தில் கலந்து கொண்ட காங்கிரஸ் எம்பி ஜோதிமணி மிகவும் கோபமாக கூட்டத்தை விட்டு.வெளியேறினார். இந்த கூட்டத்தில் என்ன நடந்தது.. ஏன் மோதல் வெடித்தது என்பது உள்ளிட்ட விவரங்கள் வெளியாகி உள்ளது.
Recommended Video
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் இந்த முறை அதிமுக, பாஜக தனித்து போட்டியிட உள்ளன. அதே சமயம் திமுக கூட்டணியில் எந்த விரிசலும் ஏற்படவில்லை. ஆனால் காங்கிரஸ் உள்ளிட்ட சில கட்சிகள் சில மாவட்டங்களில் தங்களுக்கு கேட்ட இடங்கள் கிடைக்கவில்லை என்ற அதிருப்தியில் உள்ளது.
திமுக அதிக இடங்களை எடுத்துக்கொண்டதாக காங்கிரஸ் உள்ளிட்ட சில கட்சிகள் அதிருப்தியில் உள்ளன. இந்த நிலையில்தான் நேற்று கரூர் திமுக அலுவலகத்தில் நடந்த கூட்டணி இடப்பங்கீடு கூட்டத்தில் மோதல் வெடித்தது.

கூட்டம்
கரூரில் இருக்கும் திமுக அலுவலகத்தில் இது கூட்டம் நடந்தது. ஏற்கனவே செய்யப்பட்டு இருந்த கூட்டணி ஒதுக்கீடு தொடர்பான ஒப்பந்தத்தில் இறுதி முடிவு எடுப்பதற்காக இந்த கூட்டம் நடத்தப்பட்டது. இதில் காங்கிரஸ் கட்சி கேட்ட இடங்களை திமுக ஒதுக்கவில்லை என்பதுதான் குற்றச்சாட்டு. காங்கிரஸ் கட்சி முக்கியமாக கேட்ட சில இடங்களை திமுக தனக்கு என்று எடுத்துக்கொண்டதாக காங்கிரஸ் நிர்வாகிகள் புகார் வைத்துள்ளனர். இதுதான் நேற்று ஜோதிமணி கொதித்து எழ காரணம்.

திமுக எம்எல்ஏ
மாவட்ட செயலாளர் என்ற முறையில் திமுக எம்எல்ஏ செந்தில் பாலாஜிதான் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்து போட வேண்டும். இதனால் அவரும் கூட்டத்தில் இடம்பெற்று இருந்தார். இந்த நிலையில்தான் கூட்டத்திற்கு வந்த ஜோதிமணி, காங்கிரசுக்கு கூடுதல் இடங்களை ஒதுக்க வேண்டும் என்று கேட்டு இருக்கிறார். இப்போது கொடுக்கப்பட்ட இடங்கள் போதாது.. கூடுதல் இடங்களை கொடுக்க வேண்டும் என்று கூறி இருக்கிறார். ஆனால் அவரின் கோரிக்கையை ஏற்காமல் இட பங்கீடு ஒப்பந்தத்தை இறுதி செய்யும் முனைப்பில் செந்தில் பாலாஜி இருந்ததாக கூறப்படுகிறது.

கோபம்
மீண்டும் மீண்டும் ஜோதிமணி கோரிக்கை வைத்தும் அவரின் குரலுக்கு முக்கியத்துவம் தரப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் கோபம் அடைந்த ஜோதிமணி அங்கேயே திமுக நிர்வாகிகளை கை காட்டி கோபமாக திட்டி இருக்கிறார். செந்தில் பாலாஜி இருந்த திசையை கைகாட்டி ஜோதிமணி கோபமாக பேசியதாக கூறப்படுகிறது. அதிலும் ஜோதிமணி சில கடுமையான வார்த்தைகளை பயன்படுத்தியதாக கூட்டத்தில் இருந்தவர்கள் தெரிவித்துள்ளனர்.

சின்னசாமி
காங்கிரஸ் தலைவர் சின்னசாமிதான் ஜோதிமணியுடன் உடன் இருந்தது. இங்கு நடப்பது அநியாயம்.. கூட்டணி கட்சிகளின் குரலை கேட்கவில்லை என்றால் பின் ஏன் மீட்டிங்.. நீங்களே கையெழுத்து போட எங்களை ஏன் கூப்பிட்டீர்கள் என்று ஜோதிமணி மீட்டிங்கிற்கு உள்ளே கோபமாக கேட்டு உள்ளார். இதன்பின்தான் வெளியே கோபமாக திட்டிக்கொண்டே வந்தவர்.. இங்கே என்ன விருந்தா நடக்கிறது என்று கோபமாக பேசிவிட்டு சென்றார். உடன் இருந்த காங்கிரஸ் தலைவர் சின்னசாமி.. எம்பி இப்படி ரோட்டில் நின்று பேச வேண்டாம் என்று கூறி அவரை அழைத்து சென்றார்.

செந்தில் பாலாஜி
இந்த சம்பவங்கள் நடந்த போது ஜோதிமணி பேசியதற்கு செந்தில் பாலாஜி எதிர்வினை எதையும் காட்டவில்லை. அவர் அமைதியாக இருந்தார் என்று கூறப்படுகிறது. ஏதாவது பேச போய் அது தவறுதலாக முடிந்துவிடும் என்று அவர் அமைதியாக இருந்ததாக கூறப்படுகிறது. ஆனால் மற்ற திமுக நிர்வாகிகள் கூட்டத்தில் இருந்து ஜோதிமணி வெளியேற வேண்டும்.. கூட்டத்தை அவர் அவமதித்துவிட்டார்.. அவரை வெளியேற்றுங்கள் என்று கோபம் அடைந்ததாக கூறப்படுகிறது.

மோதல்
ஜோதிமணிக்காக கடந்த லோக்சபா தேர்தலில் கடுமையாக தேர்தல் பணிகளை செய்தவர் செந்தில் பாலாஜி. அதன்பின் சட்டசபை தேர்தலிலும் ஜோதிமணி செந்தில் பாலாஜிக்காக தேர்தல் பணிகளை மேற்கொண்டார். இவர்கள் இடையே கட்சி கடந்த நட்பு இருந்தது. ஆனால் செந்தில் பாலாஜி அமைச்சர் ஆன பின் சில கோரிக்கைகளில் ஜோதிமணி - செந்தில் பாலாஜி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதுவே தற்போது இரு தரப்பு மோதலுக்கும் காரணமாக அமைந்துள்ளது என்கிறார்கள்.












Click it and Unblock the Notifications