ஓசூரில் திடீரென மயங்கி விழுந்த 13 வடமாநில தொழிலாளர்கள்.. மருத்துவமனையில் அனுமதி.. என்ன நடந்தது?
கிருஷ்ணகிரி: ஓசூரில் அருகே தின்னூர் பகுதியில் பல்லி விழுந்த உணவை சாப்பிட்ட வட மாநில தொழிலாளர்கள் 13 பேர் வாந்தி, மயக்கம் ஏற்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விவகாரம் தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே தின்னூர் பகுதியை அடுத்த அம்மன் நகரில் நவீன் என்பவருக்கு சொந்தமான மாட்டுத் தீவன தொழிற்சாலை உள்ளது. இந்த தொழிற்சாலையில் வட மாநிலத்தைச் சேர்ந்தவர்களும் பணியாற்றி வருகின்றனர். இங்கு பணியாற்றிவோர் அவர்களாகவே உணவு சமைத்து சாப்பிடுவது வழக்கம்.

அந்த வகையில் இன்று காலை உணவாக சாதம், சாம்பார், சப்பாத்தி ஆகியவற்றை சமைத்து சாப்பிட்டுள்ளனர். திடீரென உணவை சாப்பிட்ட வடமாநிலத்தைச் சேர்ந்த 13 தொழிலாளர்களுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டது. இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த மக்கள், உடனடியாக அனைவரையும் ஓசூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.
அங்கு அனைவருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுதொடர்பாக விசாரித்த போது வடமாநில தொழிலாளர்கள் சாப்பிட்ட உணவில் பல்லி விழுந்திருப்பது தெரிய வந்துள்ளது. இதன் மூலமாக பல்லி விழுந்த உணவை சாப்பிட்டதன் காரணமாகவே வடமாநில தொழிலாளர்களுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டிருப்பதாக பார்க்கப்படுகிறது.
இதுகுறித்து தகவல் அறிந்த ஓசூர் மத்திகிரி போலீசார் சம்பவ இடத்திற்கு நேரடியாக சென்று விசாரணை நடத்தினர். இந்த விவகாரம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் வடமாநில தொழிலாளர்கள் சமைக்கும் போது கூடுதல் கவனத்துடன் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.


Click it and Unblock the Notifications
