தமிழ்நாட்டை அதிர வைத்த ஆணவ கொலை! காதல் திருமணம் செய்தவரை வெட்டிக்கொன்ற மாமனார்.. கிருஷ்ணகிரியில்!
காதல் திருமணத்தை பெண் வீட்டார் ஏற்றுக்கொள்ளாமல் இருந்து வந்ததால் ஆத்திரத்தில் ஓடஓட விரட்டி வெட்டி கொலை செய்தனர்.
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் கேஆர்பி டேம் ரோட்டில் பட்டப்பகலில் இன்று இளைஞர் ஒருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளார். ஒரு மாதத்துக்கு முன்பு பெண் வீட்டார் எதிர்ப்பை மீறி காதல் திருமணம் செய்த இவர் இன்று தனது மனைவியின் தந்தை உள்பட சிலரால் வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளார். ஆணவக்கொலை என கூறப்படும் இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம் கிட்டம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் ஜெகன் (வயது 28). இவர் டைல்ஸ் ஒட்டும் பணி செய்து வந்தார். அவதானப்பட்டி அருகே உள்ள முழுக்கான் கொட்டாய் பகுதியை சேர்ந்தவர் சரண்யா. இவர்கள் 2 பேரும் ஒரே சமுதாயத்தை சேர்ந்தவர்கள் என கூறப்படுகிறது.
இந்நிலையில் ஜெகன்-சரண்யா ஆகியோர் காதலித்தனர். இவர்களின் காதலுக்கு சரண்யாவின் குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இருவரும் திருமணம் செய்ய எதிர்ப்பும் கிளம்பியது. காதலை கைவிடும்படி ஜெகனுக்கு, சரண்யாவின் தந்தை சங்கர் எச்சரிக்கை கொடுத்துள்ளார்.

காதல் திருமணம்
இந்நிலையில் தான் எதிர்ப்பை மீறி ஜெகன் கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு ஜெகன்-சரண்யா ஜோடி காதல் திருமணம் செய்தது. கோவிலில் வைத்து சரண்யாவை, ஜெகன் கரம் பிடித்தார். இதையடுத்து இருவரும் தனியாக வசித்து வந்தனர். மேலும் ஜெகன் மீது சரண்யாவின் தந்தை சங்கருக்கு கோபம் இருந்து வந்துள்ளதாக கூறப்படுகிறது.

வெட்டிக்கொலை
இந்நிலையில் தான் இன்று ஜெகன் தனது மோட்டார் சைக்கிளிலில் கிருஷ்ணகிரி கேஆர்பி டேம் அருகே சென்று கொண்டிருந்தார். அப்போது சரண்யாவின் தந்தை சங்கர் உள்பட சிலர் அவரை வழிமறித்து தாக்கினர். இதனால் ஜெகன் தப்பிக்கும் வகையில் ஓடினார். அவரை விரட்டி சென்ற கும்பல் நடுரோட்டில் வைத்து வெட்டிவிட்டு அங்கிருந்து சென்றது. இதில் பலத்த காயமடைந்த ஜெகன் துடிதுடித்து அங்கேயே இறந்தார்.

மறியல் போராட்டம்
இதுபற்றி அறிந்த ஜெகனின் உறவினர்கள் அங்கு வந்து கதறி அழுதனர். காதல் திருமணம் செய்தது பிடிக்காமல் ஜெகனை ஆணவக்கொலை செய்ததாக குற்றம்சாட்டினர். மேலும் ஜெகனின் உடலை எடுக்க விடாமல் அவர்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர். இதனால் கிருஷ்ணகிரி-தர்மபுரி நெடுஞ்சாலையில் 2 மணிநேரம் வரை போக்குவரத்து பாதிக்கப்பட்டது. கொலை செய்த ஜெகனின் மாமனார் மற்றும் உறவினர்களை போலீசார் உடனடியாக கைது செய்ய வேண்டும் என கூறினர்.

போலீஸ் விசாரணை
இதையடுத்து போலீசார் நீண்டநேரம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதன்பிறகு உறவினர்கள் கலைந்தனர். இதையடுத்து ஜெகனின் உடல் கிருஷ்ணகிரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. இதுபற்றிய புகாரின் பேரில் காவேரிப்பட்டணம் போலீசார் வழக்குப்பதிவு செய்து கொலையாளிகளை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் கிருஷ்ணகிரியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.












Click it and Unblock the Notifications