கச்சத்தீவு இந்தியாவுடன் இணையுமா? அதிமுக வழக்கில் உச்சநீதிமன்றத்தில் தெரிவிப்பீர்களா? இபிஎஸ் கேள்வி
கிருஷ்ணகிரி: கச்சத்தீவை இந்தியாவுடன் இணைக்க மத்திய அரசு தயாரா? அண்ணா திமுக உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில் மத்திய அரசு இதனை தெரிவிக்கவும் தயாரா? என பாஜகவுக்கு அதிமுக பொதுச்செயலாளரும் முன்னாள் முதல்வருமான எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பி உள்ளார்.
கச்சத்தீவு விவகாரத்தை திடீரென பாஜக எழுப்பியது. கச்சத்தீவை மத்திய அரசு, இலங்கைக்கு தாரை வார்த்ததற்கு அப்போது தமிழ்நாட்டில் ஆட்சியில் இருந்த திமுகவும் உடந்தை என்பது பாஜகவின் குற்றச்சாட்டு.

கச்சத்தீவு பிரச்சனைக்கு யார் காரணம் என்பது கடந்த 50 ஆண்டுகளாக தமிழ்நாட்டில் தொடர்ந்து விவாதிக்கப்பட்டு வருகிறது. கச்சத்தீவை பற்றி திடீரென பாஜக பேசியதற்கு தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் கடும் கண்டனமும் விளக்கமும் தந்து வருகின்றனர்.
தற்போது அதிமுகவும் இந்த வரிசையில் இணைந்து கொண்டுள்ளது. கிருஷ்ணகிரியில் தேர்தல் பிரசாரம் செய்த அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, கச்சத்தீவு குறித்து பேசியதாவது: 1974-ல் மத்தியில் காங்கிரஸ் ஆட்சி; தமிழ்நாட்டில் திமுக ஆட்சி. அப்போதுதான் கச்சத்தீவு, இலங்கைக்கு கொடுக்கப்பட்டது. கச்சத்தீவை இலங்கைக்கு கொடுத்தது காங்கிரஸும் திமுகவும்தான். 2008-ம் ஆண்டு கச்சத்தீவை மீட்க மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வழக்கு தொடர்ந்தார். உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட இந்த வழக்கில் தற்போது அதிமுகவின் அமைப்பு செயலாளர் மனுதாரராக இணைக்கப்பட்டுள்ளார். இந்த வழக்கையும் கூட ஆட்சியில் இருந்த காங்கிரஸும் திமுகவும் கண்டு கொள்ளவில்லை.
2014-ல் பாஜக ஆட்சிக்கு வந்த போது பிரதமர் மோடிக்கு கச்சத்தீவு மீட்பு குறித்து ஜெயலலிதா கடிதம் அனுப்பினார். மோடியை நேரிலும் சந்தித்து கூட கச்சத்தீவு மீட்புக்கு வலியுறுத்தினார். ஆனால் மத்திய அரசு கண்டுகொள்ளவே இல்லை. கடந்த 10 ஆண்டுகாலம் கச்சத்தீவு பற்றி கவலைப்படாத பாஜகவினர் இப்போது திடீரென அக்கறையோடு பேசுவது ஏன்?
கச்சத்தீவை இந்தியாவுடன் இணைத்துவிட மத்தியில் ஆளும் பாஜக அரசு தயாராக உள்ளதா? அதிமுக தொடர்ந்த வழக்கில் கச்சத்தீவை இந்தியா திரும்பப் பெறுவது தொடர்பாக மறுபரிசீலனை செய்ய தயார் என தெரிவிக்குமா மத்திய அரசு? இவ்வாறு எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பினார்.












Click it and Unblock the Notifications