கம்யூனிஸ்ட்டுகளின் கடைசி கோட்டை? ‘ தலை தப்புமா ‘தளி’? வெற்றி யாருக்கு?
கிருஷ்ணகிரி: பாஜக, "ரத்தக் கறை படியாத ஒரு சட்டமன்ற உறுப்பினர் தேவை" என்று கோணத்தில் பிரச்சாரத்தை முன்வைக்கிறது. டிவிகே வேட்பாளரோ, "உங்களுக்கு வேலை வேண்டுமா? வழக்குகள் வேண்டுமா?" என சிபிஐ கட்சி வேட்பாளர் மீது விமர்சனங்களை வைத்து வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறது.
"ஒண்ணே ஒண்ணு, கண்ணே கண்ணு" என்று கிராமப்புறங்களில் ஒரு பழமொழி உண்டு. சிறப்பான சம்பவத்தை எடுத்துச் சொல்வதற்காகத் தாய்க் கிழவிகள் இதைப் பயன்படுத்துவார்கள். இந்தப் பழமொழிக்குச் சரியான உதாரணம் தளி சட்டமன்றத் தொகுதி. 1952 ஆம் ஆண்டு நடைபெற்ற நாட்டின் முதல் பொதுத் தேர்தலில் அதிக அளவில் மெட்ராஸ் சட்டசபையில் சட்டமன்ற உறுப்பினர்களைக் கொண்டிருந்த கம்யூனிஸ்ட் கட்சி இன்று சிறுத்துப் போய் சின்னதாக ஆகிவிட்டது.

சிபிஐ, சிபிஐ(எம்) ஆகிய இரண்டு கட்சிகளுக்கு தலா 5 தொகுதிகளை வழங்குவதற்கே திமுக அவ்வளவு தயங்கியது. ஏனெனில் இன்றைக்குத் தேர்தல் வெற்றி என்பது கொள்கைகளால் முடிவு செய்யப்படுவதில்லை. பல கோடிகளால் முடிவு செய்யப்படுகிறது. மக்களின் கவனத்தைப் பெற சமூக ஊடகங்களின் மூலம் செய்யப்படும் பிரச்சாரத்திற்கே தண்ணீர் போல் பணத்தைக் கொட்டுகின்றன ஆளும் கட்சிகள். அல்லது அடுத்து ஆளத் துடிக்கும் கட்சிகள். இதற்கு விதிவிலக்கு கம்யூனிஸ்ட்டுகள்.
அதே பழைய பாணியிலான தேர்தல் அரசியலைவிட்டு அவர்களால் வர முடியவில்லை. காரணம், அந்தக் கட்சிக்குத் தேர்தல் நிதி அளிப்பவர்கள் சொற்பமானவர்கள். ஆயிரக் கணக்கில் நிதி கிடைத்தாலே அது அபூர்வம். இந்தக் குதிரைப் பந்தயத்தில் கம்யூனிஸ்ட்டுகளுக்கு இன்னும் நம்பிக்கை அளிக்கும் தொகுதி தளி. அது கம்யூனிஸ்ட்டுகளின் கோட்டையாகக் கருதப்படுகிறது.
தமிழ்நாட்டில் வரும் ஏப்ரல் 23 ஆம் தேதி ஒரே கட்டமாகச் சட்டமன்றத்திற்குத் தேர்தல் நடைபெறுகிறது. வழக்கம் போல் திமுக கூட்டணியில் தளி சட்டமன்றத் தொகுதி சிபிஐ கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இத்தொகுதியில் 2011 மற்றும் 2021 ஆகிய இரண்டு முறை நடந்த சட்டமன்றத் தேர்தலிலும் ராமச்சந்திரன் தான் வெற்றி பெற்றார்.
அது மட்டுமல்லாமல் இவர் 2006இல் சுயேச்சையாகவே நின்றும் வெற்றிபெற்றவர். 2021இல் 1,20,641 வாக்குகளைப் பெற்றார். இந்தளவுக்குத் தளியில் தனிப்பட்ட செல்வாக்கு கொண்ட வேட்பாளர் இவர். இவரை எதிர்த்து நின்ற பாஜக வேட்பாளர் 64,415 வாக்குகளைப் பெற்றார். மேலும் தமிழ்நாட்டில் கம்யூனிஸ்ட்டுகளுக்கு என்று தனிக் களம் மட்டுமல்ல, சிகப்பு கம்பளம் விரித்து வரவேற்கும் தொகுதி தளி.
அங்கே மொத்தம் 2,35,984 வாக்காளர்கள் இருக்கிறார்கள். தமிழ்நாட்டில் இந்த முறை வாக்களிக்கப் போகும் இளம் தலைமுறையினர் அதிகம். தளி தொகுதியில் 18 வயது முதல் 29 வயது வரை உள்ள வாக்காளர்கள் சுமார் 26 ஆயிரம் பேருக்கும் மேலானவர்கள். அவர்கள் வெற்றியைத் தீர்மானிக்கும் சக்தியாக இருப்பார்கள்.
இந்த முறை மறுபடியும் பாஜக வேட்பாளராக நாகேஷ் குமார் களம் கண்டுள்ளார். அவருக்கும் இங்கே போதுமான செல்வாக்கு உள்ளது. கடந்த தேர்தலின் போதே ராமச்சந்திரன் மீது சில குற்றச்சம்பங்களில் தொடர்புள்ளதாகப் புகார்கள் எழுந்தன. அதைச் சமாளித்தே அவர் வென்றார்.
அப்போது இருமுறைப் போட்டியே நிலவியது. இந்தத் தேர்தலில் தவெக வேட்பாளர் சுரேஷ், இளம் தலைமுறை வாக்காளர்களைக் குறிவைத்துத் தேர்தல் பணியைச் செய்துவருகிறார்.
ஆகவே, சிபிஐ, பாஜக ஆகிய இரண்டு அரசியல் சக்திகளை மீறி மூன்றாவதாக தவெக ஓட்டுகளைப் பிரிக்கிறது. அதனால், யாருடைய வெற்றி வாய்ப்பு பாதிக்கப்படும் என்பது கேள்விக் குறியாகியுள்ளது. வாக்களிப்புக்கு இன்னும் ஒரு வாரமே உள்ள நிலையில் களம் கடைசிக் கட்டத்தில் எக்குத் தப்பாக மாறும் என்றும் நம்பப்படுகிறது. மூன்று முறைக்கு மேல் வெற்றி கண்டவர் ராமச்சந்திரன்.
தேர்தல் வியூகங்களை எதிர்கொண்டு செயல்படுவதில் அனுபவம் மிக்கவர். தவெகவுக்கு அந்தப் பக்கம் இன்னும் பாடம் படிக்கவில்லை. களத்தில் பல சொதப்பல்கள் உள்ளன. எம்.எல் இயக்கத்தில் மிகத் தீவிரமாக இயங்கிவந்த பாஸ்கரன் கொலை வழக்கில் குற்றச்சாட்டுக்கு உள்ளானவர்களில் ராமச்சந்திரனும் ஒருவர். பாஜக வேட்பாளர் மருத்துவர் என்ற அடையாளத்துடன் மீண்டும் மோதுகிறார்.
மத்தியில் ஆளும் கட்சி செல்வாக்கு உள்ளதால், பிரச்சாரம் அனல் பறக்கிறது. ராமச்சந்திரனுக்குப் பழங்குடி மக்கள் மத்தியில் பரவலான ஆதரவு நிலவுகிறது. தேன்கனிக்கோட்டை என்பது கம்யூனிஸ்ட்டுகளின் கோட்டையாகவே உள்ளது. 2021இல் 56 ஆயிரம் வாக்குகளில் பாஜக வேட்பாளரை வீழ்த்தினார் ராமச்சந்திரன். சுமார் 62% வாக்கு வித்தியாசத்தில் வெற்றிக்கனியைப் பறித்தார்.
ராமச்சந்திரனுக்குத் தொகுதியில் செல்வாக்கு உள்ளது என்பதை மறுக்க முடியாது. அவர் வாக்கு வாங்கும்போது மட்டும் மக்களைச் சந்திப்பவர் அல்ல. குடிநீர் பிரச்சினை முதல் சாலை வசதிகள் வரை எந்தப் பிரச்சினைக்காகவும் அவர் மக்களுடன் நிற்கிறார். தேடிச் சென்று பார்க்கத் தேவையில்லை. அவரே தேடிப் போய் மக்களைக் கவனிக்கிறார். அது பலமாகப் பார்க்கப்படுகிறது.
ஆனால், பாஜக, "ரத்தக் கறை படியாத ஒரு சட்டமன்ற உறுப்பினர் தேவையா" என்ற கோணத்தில் பிரச்சாரத்தை முன்வைக்கிறது. தவெக வேட்பாளரோ, "உங்களுக்கு வேலை வேண்டுமா? வழக்குகள் வேண்டுமா?" என சிபிஐ கட்சி வேட்பாளர் மீது விமர்சனங்களை வைத்து வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறது.
தவெக துண்டுப் பிரசுரங்கள் இந்த வாசகத்துடன் வாக்காளர்களிடம் விநியோகிக்கப்பட்டு வருகின்றன. மும்முனைப் போட்டி அல்லாமல் நாதகவும் களத்தில் உள்ளது. ஆனால், தன் மீதான கொலைப்பழியிலிருந்து நீதிமன்றம் விடுவித்த பின்னர், அவதூறு பரப்புவது நியாயமல்ல என்றும் பொய் வழக்குகளைப் போட்டு என்னை முடக்கப்பார்த்தார்கள். அது அரசியல் சதி" என்றும் விளக்கம் அளித்து வருகிறார் ராமச்சந்திரன்.
இவர் மீதான குற்றச்சாட்டு புதியதல்ல. அவர் 2013லேயே எதிர்கொண்ட புகார்தான். அதை மீறியே அவர் கடந்த முறை 1 லட்சத்திற்கும் மேலான வாக்குகளைப் பெற்றார். எனவே இந்தக் குற்றச்சாட்டு முன்பே எடுபடவில்லை என்பதையும் நாம் கவனிக்க வேண்டி உள்ளது. ஆனால், கடந்த முறை 62% வாக்கு வித்தியாசத்தில் வெற்றி முடிவானது, இந்த முறை 36% பெற்றாலே அது திமுக கூட்டணியை வெற்றியடையச் செய்துவிடும்.
-கடற்கரய்












Click it and Unblock the Notifications