லோன் கேட்டு, பத்திரத்துடன் கிளம்பி போன திண்டுக்கல் பெண்.. 1.50 கோடி வங்கி கடன்? ஆடிப்போன திண்டுக்கல்
கிருஷ்ணகிரி: திண்டுக்கல்லில் வங்கிக்கடன் வாங்கி தருவதாக சொல்லி, கிருஷ்ணகிரி பெண்ணிடம் மோசடி செய்திருக்கிறது ஒரு கும்பல்.. அந்த பெண்ணின் வீட்டுப்பத்திரத்தை வைத்து, 1.50 கோடிக்கு மோசடி செய்தவர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.
கிருஷ்ணகிரி, மேல்சோமார்பேட்டையை சேர்ந்தவர் ராஜேஸ்வரி .. 42 வயதாகிறது.. இவருக்கு சொந்தமான இடத்தில், வீடு, கடைகள் கட்டி வாடகைக்கு விட்டுள்ளார். தன்னுடைய கடன் பிரச்சனைக்காக, வீட்டை விற்க முடிவு செய்துள்ளார்..

இந்த விஷயம் ரமேஷ்குமார் என்பவருக்கு தெரியவந்தது.. கிருஷ்ணகிரி அடுத்த கட்டிகானப்பள்ளியை சேர்ந்த அரசு துவக்கப்பள்ளி தலைமை ஆசிரியராக பணியாற்றி வருகிறார் ரமேஷ்குமார்.. இவர் தன்னுடைய நண்பர்கள் சேலத்தை சேர்ந்த மோகன், சிவசக்தி ஆகியோரை அழைத்து கொண்டுவந்து, ராஜேஸ்வரியை சந்தித்து பேசியிருக்கிறார்.
கடன்தொகை: வீட்டை விற்க வேண்டாம், வங்கியில் நாங்கள் கடன் பெற்று தருகிறோம் என்று சொல்லி நம்பிக்கை தந்துள்ளனர்.. அத்துடன், திண்டுக்கல்லை சேர்ந்த மணிவண்ணன், அவரது மைத்துனர் சிவராஜ் இருவரையும் ராஜேஸ்வரிக்கு அறிமுகப்படுத்தி வைத்துள்ளனர்.
உடனே அவர்களும் ராஜேஸ்வரியின் வீட்டை பார்வையிட்டு, "உங்கள் பெயரில் வங்கியில் கடன் அதிகளவு வாங்க முடியாது... தேவைப்பட்டால், திண்டுக்கலில் தனியார் நிறுவனங்கள் நடத்தி வரும் சிவராஜ் பெயரில், 3 கோடி ரூபாய் வரை கடன் வாங்கலாம். அவரது கம்பெனி பெயரில், வீட்டை அடமானம் வைத்து, பத்திரப்பதிவு செய்யலாம். அதை திண்டுக்கல் வங்கியில் வைத்து, கடன் பெறலாம்" என்று ஐடியா தந்துள்ளனர்.
அடமானம்: இதைக்கேட்ட ராஜேஸ்வரியும், கூட்டுறவு சொசைட்டியில் அடமானம் வைத்திருந்த வீட்டு பத்திரத்தை, 10 லட்சம் ரூபாய் கொடுத்து மீட்டு கொண்டுவந்து தந்தார். பிறகு, ராஜேஸ்வரியின் வீட்டை, சிவராஜின் கம்பெனியில் அடமானம் வைப்பது போல, போலியாக பத்திரம் தயார் செய்யப்பட்டு, கடந்த 2022 ஜனவரி 3ல் பத்திரப்பதிவு செய்திருக்கிறார்கள்.
அத்துடன், திண்டுக்கல்லில் ஒரு தனியார் வங்கியில் ராஜேஸ்வரியிடம், சிவராஜ், மணிவண்ணன், சிவசக்தி, மோகன், ரமேஷ்குமார் ஆகியோர் அனைவரும் சேர்ந்து கையெழுத்தும் வாங்கியிருக்கிறார்கள். 1.50 கோடி ரூபாய் வங்கியில் கடன் கிடைத்துவிட்டது, அது நாளைக்கே உங்கள் அக்கவுண்ட்டிற்கு வந்துவிடும் என்று ராஜேஸ்வரியிடம் அனைவரும் சொல்லியிருக்கிறார்கள். ஆனால், மறுநாள், ராஜேஸ்வரி வங்கி கணக்கிற்கு எந்த பணமும் வரவில்லை...
அதிர்ச்சி: தான் கொடுத்த பணத்தை, சிவராஜ் கம்பெனி அபகரித்து கொண்டதும், தன்னுடைய பணத்தை அத்தனை பேரும் பங்கிட்டு கொண்டு, ஏமாற்றி கையெழுத்து வாங்கியதும் தெரிந்து அதிர்ந்து போனார்.. இதையடுத்து, உடனடியாக கிருஷ்ணகிரி மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் தந்தார்.. இந்த புகாரின்பேரில் மணிவண்ணன் என்பவரை கைது செய்துள்ள போலீசார், மோசடியில் சம்பந்தப்பட்ட மற்றவர்களையும் தீவிரமாக தேடி கொண்டிருக்கிறார்கள்.












Click it and Unblock the Notifications