இந்தியாவிலேயே முதன்முறை.. மெடாவெர்ஸ் தொழில்நுட்பத்தில் நடந்த திருமணம்! "உயிரோடுவந்த" மணமகள் தந்தை
கிருஷ்ணகிரி: இந்தியாவிலேயே முதன்முறையாக மெட்டாவெர்ஸ் திருமண வரவேற்பு கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நடைபெற்றது.
Recommended Video
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகிலுள்ள சிவலிங்கபுரம் கிராமத்தில், ஐஐடி உதவிப் பொறியாளர் தினேஷ் மற்றும் மென் பொறியாளர் ஜனக நந்தினி இருவருக்கும் நேற்று காலை திருமணம் நடந்தது.
அதையடுத்து, நேற்று மாலை 6.30 மணிக்கு தொழில்நுட்ப வசதியுடன் மெட்டாவெர்ஸ் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்கான அறிவிப்பை மணமகன் தினேஷ் கடந்த மாதம் ட்விட்டரில் வெளியிட்டதும், இந்தியா முழுவதும் இந்தத் திருமணம் குறித்துப் பேசத் தொடங்கினார்கள்.

மெட்டாவெர்ஸ்
திருமண வரவேற்புக்கு விருந்தினர்கள் தங்களின் வீடுகளில் இருந்து இவர்களின் நிகழ்வில் இணைய முடியும். நிகழ்வுக்கான ஹாரிபாட்டர் தீம் கோட்டை வடிவமைக்கப்பட்டிருந்தது. அதில், விருந்தினர்கள், மணமக்கள் வீட்டார், மணமக்கள் என ஒவ்வொருவருக்கும் பாரம்பரிய உடை, நவீன ஆடைகள் மெட்டாவெர்ஸில் தயார் செய்யப்பட்டது. நிகழ்வுக்கான அன்பளிப்பை கூகுள்பே போன்ற செயலிகள் மூலம் அனுப்பிவைக்கலாம்.

மணமகள் தந்தை
மணமகள் ஜனக நந்தினியின் தந்தை கடந்த சில மாதங்களுக்கு முன் இறந்துபோனார். இந்நிலையில், அவரது உருவத்தைக் கொண்டு அவதார் உருவாக்கப்பட்டு, இந்த மெட்டாவெர்ஸ் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் அவர் அனைவரையும் வரவேற்கும் விதமாக வடிவமைக்கப்பட்டிருந்தது. உயிரிழந்த ஒருவர் தத்ரூபமாக வந்ததைப் பார்த்து, மணமக்கள் வீட்டார் நெகிழ்ச்சியடைந்தனர்.

தொழில்நுட்பம்
பிளாக் செயின் (blockchain) விரிட்சுவல் ரியாலிட்டி (Virtual Reality) ஆகுமெண்டட் ரியாலிட்டி (Augmented Reality) போன்ற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தி இந்த மெட்டாவெர்ஸ் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. உலகின் எந்த பகுதியில் இருந்தாலும், இந்த திருமண வரவேற்பில் கலந்துகொள்ளும்படி மெட்டாவெர்ஸ் உருவாக்கப்பட்டிருந்தது. இதற்காக அவர்களுக்கு பிரத்யேகமாக ஐடி- பாஸ்வேர்ட் கொடுக்கப்பட்டது.

திருமணம்
இந்த நிகழ்விற்கான ஏற்பாட்டை க்வாக்டிக்ஸ் டெக் நிறுவனம் மேற்கொண்டார்கள். இதற்கு முன்பு கடந்த வருடத்தில் அமெரிக்காவில் இதே போல ட்ராஸி மற்றும் டேவ் இவர்களின் திருமணம் ஒரேசமயத்தில் நேரிலும் மெட்டாவெர்ஸிலும் நடைபெற்றது. ஊரடங்கு காலத்திற்கு பிறகு திருமண நடைமுறை பெருமளவிற்கு மாறி இருக்கும் நிலையில் மெட்டாவெர்ஸ் இதனை அடுத்த கட்டத்திற்கு அழைத்து செல்லவிருக்கிறது.

கிராமம்
நெட்வொர்க் இல்லாத மலை கிராமங்களில் இது போன்ற ஒரு நிகழ்ச்சி நடைபெற்று வருவது அனைவருக்கும் ஆச்சரியத்தையும் மகிழ்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. எங்கள் ஊரில் நெட்வொர்க் இல்லை, எங்களுக்கு ஜியோ உதவ வேண்டும் என கடந்த சில வாரங்களுக்கு முன் மணமகன் தினேஷ் ஜியோவிடம் உதவி கேட்டிருந்தார். மெட்டாவெர்ஸ் திருமண வரவேற்பை நடத்தி முடிப்பது பெரிய சவாலாக இருந்ததாக மணமக்கள் தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications