மாணவர்களுக்கு வயிற்றுவலி... சத்துணவில் பிளாஸ்டிக் அரிசி கலப்படம்..? முற்றுகையிட்ட மக்கள்..!
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் கெலமங்கலம் அருகே சத்துணவு கூடத்துக்கு வழங்கப்பட்ட அரிசியில் பிளாஸ்டிக் அரிசி கலப்படம் செய்யப்பட்டுள்ளதாக கூறி பொதுமக்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
Recommended Video
கிருஷ்ணகிரி மாவட்டம் தேனிகனிக்கோட்டை அருகே உள்ள கெலமங்கலம் ஒன்றியத்துக்குட்பட்ட ஜெ.காருப்பள்ளி கிராமத்தில், அரசு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி பல ஆண்டுகளாக இயங்கி வருகிறது. இந்தப் பள்ளிக்கு ஜெ.காருப்பள்ளி கிராமம் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து மாணவர்கள் படிக்கின்றனர்.

இந்நிலையில் அந்தப் பள்ளியில் வழங்கப்படும் சத்துணவை சாப்பிட்ட மாணவர்களுக்கு அவ்வப்போது வயிற்றுப்போக்கு மற்றும் வயிற்று வலி ஏற்பட்டிருக்கிறது. ஒரு நாள் இரண்டு நாள் என்றில்லாமல் தொடர்ந்து இதே போன்று தினமும் யாருக்காவது வயிற்று வலி வந்துகொண்டே இருந்திருக்கிறது.
பிள்ளைகள் தொடர்ந்து வயிற்றுப்போக்கு மற்றும் வயிற்று வலியால் அவதிப்பட்டதை தொடர்ந்து, இது குறித்து ஆலோசித்த கிராமமக்கள் சத்துணவு அரிசியின் மூலம் ஒரு வேளை இப்படி ஏற்பட்டிருக்கலாமோ என அஞ்சியுள்ளனர்.
இதையடுத்து சத்துணவு அரிசியை கழுவிப்பார்த்த போது அது பிளாஸ்டிக் போல் ஒட்டிக்கொண்டதாக தெரிவித்த கிராம மக்கள் நடுநிலைப் பள்ளியை ரவுண்டு கட்டினர். அங்கே பணிபுரிந்த சத்துணவு அமைப்பாளரிடம் இது குறித்து கேள்வி எழுப்பிய அவர்கள், இரண்டு மணி நேரமாக அங்கிருந்து நகரவில்லை. இதனால் கெலமங்கலம் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
இதனிடையே சத்துணவு கூடத்துக்கு வழங்கப்பட்ட அரிசி செறிவூட்டப்பட்ட அரிசி என்றும் இது எப்படி வழங்கப்பட்டது என தெரியாது எனவும் வட்டார வளர்ச்சி அலுவலர் தமிழரசன் கூறியிருக்கிறார். மேலும், அரசு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளிக்கு வழங்கப்பட்ட அரிசியை திரும்பப்பெற்றுக் கொண்டு மாற்று அரிசி வழங்குவதாகவும் கூறியிருக்கிறார்.
இதனிடையே இது குறித்து தகவல் அறிந்த மாவட்ட ஆட்சியர் ஜெயசந்திரபானு, பொது விநியோகத்திற்காக கொண்டு வரப்பட்ட 58 டன் அரிசி மூட்டைகளை பொது விநியோகத்துக்கு வழங்க கூடாது என்று நிறுத்தி வைக்க உத்தரவிட்டுள்ளார். மேலும், பொதுமக்கள் குற்றச்சாட்டின் அடிப்படையில் அரிசியினை ஆய்வு செய்யவும் அவர் உத்தரவிடுவார் என தெரிகிறது.












Click it and Unblock the Notifications