புகழ் இருக்குது பெயர் இருக்குது! பாமக துண்டுடன் பள்ளியில் நடனம்! என்ன நடக்குது பள்ளி கல்வி துறையில்?
கிருஷ்ணகிரி: என்னதான் நடக்கிறது பள்ளிக் கல்வித் துறையில் என்பது போல் தான் இருக்கிறது சமீபகாலமாக நடந்து வரும் நிகழ்வுகள். அப்படி ஒரு அதிர்ச்சி சம்பவம் தான் கிருஷ்ணகிரியில் அரங்கேறி இருக்கிறது. பள்ளி ஆண்டு விழா நிகழ்ச்சியில் பாமக துண்டை கழுத்தில் போட்டுக் கொண்டு சாதி பாடலுக்கு நடனமாடி இருக்கிறார்கள் மாணவர்கள். இதை அடுத்து பெற்றோர்கள் ஆசிரியர்களுடன் வாக்குவாதத்திலும் ஈடுபட்டுள்ளனர்.
தமிழ்நாடு அரசின் பள்ளிக் கல்வித் துறை தொடர்ந்து சர்ச்சைகளில் சிக்குவது வாடிக்கையாகி வருகிறது. புத்தகத் திருவிழாவில் சாமி பாடலுக்கு மாணவிகளை நடனமாட வைத்தது, சென்னையில் ஒரு பள்ளியில் பாவ புண்ணியம் பற்றி பேசி சர்ச்சைகளில் சிக்கிய மகா விஷ்ணு விவகாரம், பள்ளியில் விநாயகர் சதுர்த்தி விழா என பல சர்ச்சைகளில் சிக்கி வருகிறது.

மேலும் பள்ளிகளில் கொலை, கொள்ளை சம்பவம், போதை பொருள் விற்பனை, ஆசிரியர்கள் மீது தாக்குதல் என மாணவர்கள் அத்துமீறி வருகின்றனர். நடவடிக்கை எடுக்க வேண்டிய அதிகாரிகளோ புலம்பி தவிக்கின்றனர்.
தொடர்ந்து பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மீதும் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தற்போது மீண்டும் ஒரு சர்ச்சை ஏற்பட்டுள்ளது. கிருஷ்ணகிரியில் கட்சிக் கொடியுடன் சாதி பாடலுக்கு நடனமாடி இருப்பது பலத்த அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம் சோப்பனூர் கிராமத்தில் அரசு பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. அதில் அப்பகுதியைச் சேர்ந்த ஏராளமான மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர்.
இந்த நிலையில் நேற்று பள்ளியின் ஆண்டு விழா நடைபெற்றிருக்கிறது. விளையாட்டுப் போட்டிகள், கவிதை, போட்டி, கட்டுரை போட்டி என பல போட்டிகள் நடைபெற்ற நிலையில் மாலையில் கலை நிகழ்ச்சிகள் நடந்துள்ளது. தொடர்ந்து தங்களது திறமைகளை மாணவர்கள் வெளிப்படுத்தி உள்ளனர். அப்போது மாணவர்கள் திடீரென கழுத்தில் பாமக துண்டை போட்டுக்கொண்டு மறுமலர்ச்சி படத்தில் இடம்பெற்ற புகழ் இருக்குது பெயர் இருக்குது ராசி படையாட்சி தான் என்ற பாடலுக்கு நடனமாடி இருக்கின்றனர்.
அது மட்டுமல்லாமல் நடனம் ஆடும் போது வன்னியர் சங்கத்தின் முன்னாள் தலைவரும் மறைந்த எம்எல்ஏவும் ஆன காடுவெட்டி குரு, சந்தன கடத்தல் வீரப்பன் ஆகியோர் படம் பொறித்த டீசர்ட்களையும் அணிந்தபடி நடனமாடி இருக்கின்றனர். இதனால் அங்கிருந்த பிற மாணவர்களும் பெற்றோர்களும் கடும் அதிர்ச்சி அடைந்தனர். தொடர்ந்து பள்ளி நிர்வாகத்துடன் அவர்கள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர் .தொடர்ந்து பாடல் உடனடியாக நிறுத்தப்பட்டு மாணவர்கள் நடனமாட அனுமதிக்கப்படவில்லை.
இதை அடுத்து குறிப்பிட்ட சமூகத்தினர் ஏன் நடனம் ஆடக்கூடாது என வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இரு தரப்பினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. மேலும் அரசு பள்ளியில் சாதி ரீதியான பாடலுக்கு நடனமாடியதோடு பாமக துண்டை கழுத்தில் அணிந்து கொண்டு ஆடியது அதிர்ச்சி அளிப்பதாக கூறிய பெற்றோர் இது தொடர்பாக பள்ளியின் தலைமை ஆசிரியர் மற்றும் சம்பந்தப்பட்ட ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறி இருக்கின்றனர்.
இந்த நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் கூறியுள்ளனர். தற்போது மாணவர்கள் ஆடும் வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பகிரப்பட்டு வருகிறது. பள்ளி ஆண்டு விழாவில் நடனம் ஆடினால் அதற்கு முன்னதாகவே பயிற்சியில் ஈடுபட்டு இருப்பார்கள். அப்படி மாணவர்கள் சாதி பாடலுக்கு நடனம் ஆடுவது தெரிந்தும் அதை எப்படி அனுமதித்தார்கள்? அப்போது இல்லை என்றாலும், நிகழ்ச்சி நடக்கும் போது மாணவர்கள் ஆடியது எப்படி அனுமதித்தனர் என கேள்வி எழுப்புகின்றனர் பெற்றோர்.












Click it and Unblock the Notifications