ஓசூரில் ரியல் எஸ்டேட் அதிபரை பேசியே மயக்கி அழகிய ஸ்வேதா! கிருஷ்ணகிரியில் ஷேர் ஆன லொகேஷன்! ரூ.5 கோடி?
கிருஷ்ணகிரி: நிலம் வாங்குவது போல நடித்து, கிருஷ்ணகிரி மாவட்டத்தின் பிரபல ரியல் எஸ்டேட் அதிபரை கடத்தி, அவரிடமிருந்து 5 கோடி ரூபாய் பறிக்க முயன்ற அதிர்ச்சி சம்பவம் ஓசூரில் அரங்கேறியிருக்கிறது.. சினிமா பாணியில், கடத்தப்பட்டவர் கடைசி நேரத்தில் செய்த காரியத்தால், போலீசார் மின்னல் வேகத்தில் செயல்பட்டு ரியல் எஸ்டேட் அதிபரை பத்திரமாக மீட்டனர்.. என்ன நடந்தது கிருஷ்ணகிரியில்? யாரிந்த ஸ்வேதா?
கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி பகுதியைச் சேர்ந்தவர் சீதாராமன்.. இவருக்கு 34 வயதாகிறது.. இவர் திமுக உறுப்பினராக இருப்பதோடு, ரியல் எஸ்டேட் தொழிலிலும் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்.

இவரிடம் அதிக பணப்புழக்கம் இருப்பதை மோப்பம் பிடித்த மர்ம கும்பல் ஒன்று, இவரை கடத்தி பணம் பறிக்க திட்டமிட்டது.. அதற்காக நாளையும் குறித்தது.
ஓசூர் ரியல் எஸ்டேட்
அதன்படி, கடந்த வெள்ளிக்கிழமை இரவு சுமார் 7 மணியளவில், அக்கும்பலை சேர்ந்த ஒரு பெண், சீதாராமனுக்கு போன் செய்து பேசியிருக்கிறார்.. அதில், "வீட்டு மனை வாங்க வேண்டும், நிலம் தொடர்பாகப் பேச வேண்டும்" என்று பேசியுள்ளார்... இதனை நம்பிய சீதாராமன், உடனடியாக தன்னுடைய காரில் சூளகிரியிலிருந்து ஓசூர் அருகே உள்ள பத்தளப்பள்ளிக்குப் புறப்பட்டுள்ளார்.
பத்தளப்பள்ளிக்கு வந்த சீதாராமனிடம், அந்த பெண், தன்னுடைய வீடு பக்கத்தில்தான் உள்ளதாகவும், வீட்டிற்கு போய் விரிவாக பேசலாம் என்றும் சொல்லி அழைத்துச் சென்றுள்ளார்...
ஸ்வேதா - ரூ.5 கோடி
அதன்படியே வீட்டுக்கு சென்றால், அங்கே 7 பேர் கொண்ட மர்மக் கும்பல் இருந்துள்ளனர். அவர்கள் சீதாராமனை ஒரு ரூமில் கட்டி வைத்து, அடித்து உதைத்துள்ளனர்... 5 கோடி ரூபாய் பணம் கேட்டும் மிரட்டியுள்ளனர்.
இரவு முதல் அதிகாலை வரை சீதாராமனை அந்த கும்பல் மிரட்டி தாக்கியிருக்கிறது.. பிறகு செல்போனை தந்து, "உன் நண்பர்களிடம் பேசி பணத்தை கொண்டு வரச்சொல் " என்று சொல்லி உள்ளனர்.
ஷேர் ஆன லொகேஷன்
உடனே பயத்தில் நடுங்கியது போல் நடித்த சீதாராமன், செல்போனை வாங்கியதும் தன்னுடைய நண்பர் லட்சுமிபதிக்கு போன் செய்துள்ளார். அப்போது கடத்தல் கும்பலுக்குத் தெரியாமல், தான் இருக்கும் இடத்தின் லொகேஷனை (Location Share) ஷேர் செய்துவிட்டார்.
உடனே நண்பர் லட்சுமிபதியும், அந்த லொகேஷனை சீதாராமனின் குடும்பத்தினருக்கு அனுப்பி விஷயத்தை சொல்லி உள்ளார். இதைக்கேட்டு அதிர்ச்சியடைநத் குடும்பத்தினர், மாவட்ட எஸ்பி தங்கதுரைக்கு தகவல் அளித்தனர். பிறகு எஸ்பியின் உத்தரவின் பேரில், ஓசூர் உட்கோட்ட போலீசார் உடனடியாக உஷார்படுத்தப்பட்டனர்.
கிருஷ்ணகிரியில் சுற்றி வளைப்பு!
போலீசார் தேடுவதை அறிந்த கடத்தல் கும்பல், சீதாராமனை அவரது காரிலேயே வைத்து வேறு பகுதிக்குக் கடத்திச் செல்ல முயன்றனர். எனினும் கடத்தல் கும்பல் காரில் தப்பிச் செல்வதை கண்டறிந்த போலீசார், பின்னாடியே விரட்டிக் கொண்டு சென்றனர்.. சினிமா பாணியில் இந்த சேஸிங் நடந்துள்ளது.. இறுதியில் நாலாபுறமும் சுழன்று வந்து காரை மடக்கி பிடித்துவிடட்னர்..
காரில் இருந்த சங்கர் (38), சுரேஷ் (40), அஜய் (19), கோகுலகண்ணன் (23) ஆகிய நான்கு பேரையும் மடக்கிப் பிடித்ததுடன், சீதாராமனையும் பத்திரமாக மீட்டனர். கடத்தலுக்குப் பயன்படுத்திய 2 கத்திகளையும் பறிமுதல் செய்தனர்.
கைதான 4 பேரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுச் சிறையில் அடைக்கப்பட்டனர். மேலும், இந்த வழக்கில் தொடர்புடைய மோகன், நாகராஜ், மற்றொரு மோகன், ஸ்வேதா என்ற பெண் உட்பட 4 பேரை போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications