தென்பெண்ணை ஆற்றில் வெள்ளம்.. கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருவண்ணாமலைக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
கிருஷ்ணகிரி: பெங்களூர், பெங்களூர் புறநகர் பகுதிகளில் நேற்று கனமழை வெளுத்து வாங்கியது. இதன் காரணமாக கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அருகே உள்ள கெலவரப்பள்ளி அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. அணை வேகமாக நிரம்பி வரும் நிலையில், தென்பெண்ணை ஆற்றில் சுமார் 4000 அடி தண்ணீர் திறந்து விடப்பட்டது. தற்போது தென்பெண்ணை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. தொடர் மழை காரணமாக ஓசூர் பகுதியில் உள்ள பல்வேறு முக்கிய ஏரிகள் நிரம்பியுள்ளன. குறிப்பாக ஓசூர் நகரின் மையப்பகுதியில் உள்ள தர்கா அருகே சந்திராம்பிகை ஏரி மற்றும் சாந்தபுரம் ஏரி முழு கொள்ளளவை எட்டி நிரம்பி உள்ளன.

கனமழைக்கு சாந்தபுரம் ஏரி நிரம்பியதால், அங்கிருந்து அதிகளவு தண்ணீர் வெளியேறி சாலை வழியாக பாய்ந்து வருகிறது. இதன் காரணமாக சாந்தபுரம், பெத்த எலசகிரி, நல்லூர் அக்ரஹாரம் மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் சிரமங்களை சந்தித்து வருகின்றனர். வாகன ஓட்டிகள் சுமார் 4 கி.மீ தூரம் சுற்றி சென்று வருகின்றனர். ஒவ்வொரு ஆண்டும் மழைக்காலங்களிலும் சாந்தபுரம் ஏரி நிரம்பும் போதும், அதிகளவு தண்ணீர் இந்த சாலை வழியாக செல்கிறது. இதனால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகி வருகிறாரகள்.
இதேபோல ஓசூர் சந்திராம்பிகை ஏரி நிரம்பியதால் தண்ணீர் வெளியேறி மாருதி நகர், அண்ணாமலை நகர், கிருஷ்ணா நகர், கே.சி.சி. நகர் உள்ளிட்ட பல்வேறு குடியிருப்பு வழியாக செல்வது வாடிக்கையாக உள்ளது. இது ஒருபுறம் எனில் கர்நாடகாவின் பெங்களூர், பெங்களூர் புறநகர் பகுதிகளில் நேற்று கனமழை வெளுத்து வாங்கியது. இதன் காரணமாக பல வீடுகளில் தண்ணீர் புகுந்ததால் மக்கள் அவதி அடைந்தனர்.
பெங்களூர் நகரில் இருந்து வெளியேறி வெள்ளம் ஓசூர் கெலவரப்பள்ளி அணைக்குதான் வந்த வண்ணம் உள்ளது. அணை வேகமாக நிரம்பி வரும் நிலையில், தென்பெண்ணை ஆற்றில் சுமார் 4000 அடி தண்ணீர் திறந்து விடப்பட்டது. தற்போது தென்பெண்ணை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால், கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருவண்ணாமலை ஆகிய 3 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. தென்பெண்ணை ஆற்றங்கரையோர மக்கள் ஆற்றில் இறங்கவோ, குளிக்கவோ வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டு உள்ளது.












Click it and Unblock the Notifications