கண்ட்ரோலை இழந்த டிப்பர் லாரி.. அப்படியே பாய்ந்து வந்து கார், பஸ் என வரிசையாக.. ஓசூரில் பகீர் விபத்து
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி ஓசூர் நெடுஞ்சாலையில் அதிவேகமாக வந்த டிப்பர் லாரி அங்கிருந்த வாகனங்களில் மோதி விபத்தில் சிக்கிய பகீர் சம்பவத்தின் வீடியோ இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது.
ஒவ்வொரு ஆண்டும் இந்தியாவில் சாலை விபத்துகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்தே வருகிறது. சாலை விபத்துகளால் உயிரிழப்போரின் எண்ணிக்கையும் கூட தொடர்ந்து அதிகரித்தே வருகிறது.
சாலைகளில் விதிகளைப் பின்பற்றி கவனமாக வாகனங்களை இயக்க மத்திய மாநில அரசுகள் தொடர்ந்து அறிவுறுத்தி வருகிறது. இருப்பினும், விபத்துகள் என்பது தொடர்ந்து அதிகரித்தே வருகிறது.

விபத்து
இந்தியாவில் கடந்த 2022ஆம் ஆண்டு மட்டும் 1.55 லட்சத்திற்கும் மேற்பட்டோர் சாலை விபத்துகளால் உயிரிழந்துள்ளனர். இதில் 50% மேற்பட்ட விபத்துகள் அனுமதிக்கப்பட்ட வேகத்தைக் காட்டிலும் வேகமாக வாகனங்களை இயக்குவதாலேயே ஏற்படுகிறது. வாகனங்களை அதீத வேகத்தில் இயக்கும் போது வாகனங்கள் ஓட்டுநர்கள் கட்டுப்பாட்டை இழக்கும் ஆபத்து இருக்கிறது. இதன் காரணமாகவே விபத்துகள் அதிகம் ஏற்படுகிறது.

அதீத வேகம்
இதனால் அதீத வேகத்தைத் தவிர்த்து மிதமான வேகத்தில் வாகனங்களை இயக்குமாறு போலீசார் தொடர்ந்து அறிவுறுத்தி வருகின்றனர். மேலும், விபத்து ஏற்பட்டோருக்கு முதலுதவி உள்ளிட்ட சிகிச்சைகள் கிடைப்பதிலும் தாமதம் ஏற்படுகிறது. அதுவும் உயிரிழப்புகள் அதிகரிக்க முக்கிய காரணமாகும். இப்படி உயிரிழப்புகளைத் தடுக்கவும் அரசு பல திட்டங்களைக் கொண்டு வந்துள்ளன. தமிழ்நாடு அரசு இதற்காகத் தான் நம்மைக் காக்கும் 48 திட்டத்தைக் கொண்டு வந்துள்ளது.

ஓசூர் சாலை விபத்து
இருந்த போதிலும், அதீத வேகத்தில் வாகனங்களை இயக்குவதால் வாகன விபத்துகள் தொடர்ந்து கொண்டே தான் இருக்கிறது. அப்படி ஏற்பட்ட ஒரு கொடூர விபத்து ஒன்றின் சிசிடிவி காட்சிகள் தான் இப்போது இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது. இந்த விபத்து கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் ஏற்பட்டுள்ளது. இந்த வீடியோ சாலையில் சென்று கொண்டிருந்த வாகனத்தில் இருந்து எடுக்கப்பட்டது போலத் தெரிகிறது.

என்ன நடந்தது
ஓசூர் தேசிய நெடுஞ்சாலையில் வேகமாகச் சென்று கொண்டிருந்த டிப்பர் லாரி ஒன்று கட்டுப்பாட்டை இழந்துள்ளது. இதனால் அது சாலைக்கு நடுவே இருந்த தடுப்புகள் மீது ஏறி அதை முறித்துக் கொண்டு சர்வீஸ் சாலைக்குள் புகுந்து, அங்கே சென்று கொண்டிருந்த காரின் பின்புறத்தில் லேசாக மோதியது. அதில் காரின் பின்புறம் சேதமடைந்த நிலையில், அதுவும் சாலை ஓரத்தில் சென்றது.

பகீர் வீடியோ
அதன் பின்னரும் டிப்பர் லாரி கட்டுப்பாட்டிற்கு வரவில்லை. மீண்டும் தடுப்புகளை உடைத்துக் கொண்டு வீடியோ எடுத்த வாகனத்தில் மோதுவது போல மிக அருகே வருகிறது. நல்வாய்ப்பாக அது இந்த வாகனத்தில் மோதவில்லை. அப்படி மோதியிருந்தால் இன்னுமே விபத்து மிக மோசமாக இருந்து இருக்கும். இது அத்தனையும் அந்த வீடியோவில் தெளிவாகப் பதிவாகியுள்ளது.

ஓட்டுநர் காயம்
நல்வாய்ப்பாக இந்த விபத்தில் உயிரிழப்புகள் எதுவும் ஏற்படவில்லை. டிப்பர் லாரியை இயக்கிய ஓட்டுநருக்குக் கால் முறிவு மட்டும் ஏற்பட்டுள்ளது.. அங்கிருந்தவர்கள் அளித்த தகவல் அடிப்படையில் ஓட்டுநரை மீட்டு அவர்கள் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்தில் சிக்கிய லாரியின் முன்பக்கம் அப்பளம் போல நொறுங்கியது. இதையடுத்து அதை கிரேன் மூலம் போக்குவரத்து போலீசார் அப்புறப்படுத்தினர். இதனிடையே இந்த விபத்தின் வீடியோ இணையத்தில் வெளியாகிப் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.












Click it and Unblock the Notifications