மக்களை சந்தித்தால்.. பிச்சை எனும் வார்த்தை நினைவுக்கே வராது! நிர்மலா சீதாராமனுக்கு ஸ்டாலின் பதிலடி
கிருஷ்ணகிரி: மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தேர்தலில் போட்டியிடவில்லை என்று கூறியிருந்த நிலையில், அவர் மக்களை நேரில் சந்தித்தால் பிச்சை என்கிற வார்த்தை அவர் நினைவுக்கு வராது என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.
கடந்த 2019ம் ஆண்டை போலவே இந்த ஆண்டும் நாடு முழுவதும் 7 கட்டங்களாக லோக்சபா தேர்தல் நடைபெறுகிறது. தமிழகத்தை பொறுத்த அளவில் வரும் ஏப்ரல் 19ம் தேதி ஒரே கட்டமாக 39+1 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெறுகிறது. எனவே அரசயில் கட்சிகள் தேர்தல் பரப்புரையில் தீவிரமாக இறங்கியுள்ளன. தமிழ்நாட்டில் பாஜக 19 இடங்களிலும், பாமக 10, தமாகா 3, அமமுக 2, ஓபிஎஸ், தேவநாதன், ஜான்பாண்டியன், பாரிவேந்தர், ஏ.சி.சண்முகம் ஆகியோர் தலா ஒரு இடங்களிலும் போட்டியிடுகின்றனர்.

முன்னதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தென் சென்னையில் போட்டியிடுவார் என்று சொல்லப்பட்டது. ஆனால், தமிழிசை சௌந்தரரராஜன் வேட்பாளராக களமிறக்கப்பட்டிருக்கிறார். இது குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, "தேர்தலில் போட்டியிடும் அளவுக்கு என்னிடம் பணம் இல்லை" என நிர்மலா சீதாராமன் கூறியிருந்தார்.
அதாவது, "தேர்தலில் போட்டியிடுவது குறித்து பரிசீலிக்குமாறு எங்களது கட்சி சார்பில் என்னிடம் தெரிவிக்கப்பட்டது. நானும் அது குறித்து 10 நாட்கள் வரை யோசித்துப் பார்த்தேன். பின்னர் போட்டியிட விரும்பவில்லை என எனது முடிவை தெரிவித்தேன். தமிழகம் அல்லது ஆந்திராவில் இருந்து போட்டியிட எனக்கு பரிந்துரை வந்தது. பாஜக தலைவர் ஜெ.பி.நட்டா இதனை முன்மொழிந்தார். இருந்தும் நான் போட்டியிடவில்லை என கூறினேன்.
மேலும், என்னிடம் தேர்தலில் போட்டியிடும் அளவுக்கான பணம் இல்லை. அதோடு தமிழகம் அல்லது ஆந்திராவில் போட்டியிட்டால் மதம், சாதி போன்றவை வெற்றிக்கான காரணிகளில் பிரதானமானதாக பார்க்கப்படும். அதனால் நான் தேர்தலில் போட்டியிடவில்லை. எனது முடிவை கட்சியும் ஏற்றுக் கொண்டுள்ளது" என்று கூறியிருந்தார்.
இருப்பினும், சில நாட்களுக்கு முன்னர் இவர் கூறிய சில கருத்துக்களால் பொதுமக்கள் மத்தியில் இவருக்கு அதிருப்தி நிலவுவதாகவும் எனவேதான் அவர் போட்டியிடவில்லை என்றும் அரசியல் விமர்சகர்கள் கூறியிருந்தனர். அதாவது, சில நாட்களுக்கு முன்னர் "எப்போதும் இன்னொருவர் போட்ட யாசகத்தில் நாம் வாழத் தேவையில்லை.. வெள்ளமா இந்தா ஆயிரம் ரூபாய் எடுத்துக்கோ.. வீடு இடிந்து விழுந்துபோச்சா இந்த 500 ரூபாய் எடுத்துக்கோ.. என்று மக்களை டீல் செய்கின்றன" என்று கூறியிருந்தார்.
இது பெரும் விமர்சனங்களை கிளப்பியிருந்தது. இந்நிலையில், இன்று கிருஷ்ணகிரியில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் "தேர்தலில் ஏன் போட்டியிடவில்லை" என நிர்மலா சீதாராமனிடம் கேள்வி எழுப்பியுள்ளார்.
அவர் பேசியதாவது, "நிர்மலா சீதாராமன் தேர்தலில் போட்டியிடாதது ஏன்? அவர் மக்களை நேரில் சந்தித்தால் 'யாசகம்' என்கிற வார்த்தை அவர் நினைவுக்கு வராது. தேர்தலில் போட்டியிட்டால் மக்கள் பாடம் புகட்டுவார்கள் என நினைத்து நிர்மலா சீதாராமன் தப்பிவிட்டார்.
தேர்தலில் போட்டியிட பணம் இல்லை என்கிறாரே! இவருக்கு தேர்தல் பத்திர நிதியை பாஜக தர மாட்டேன் என்று சொல்லிவிட்டதா? தேர்தல் பத்திரம் மூலம் மத்திய அரசு ரூ.12,000 கோடி வசூலித்தது என்ன ஆனது?" என்று கேள்வி எழுப்பியுள்ளார்












Click it and Unblock the Notifications