"உலக அரசியலில் எதிரொலிக்கும் ஆஷஸ் சர்ச்சை!" கடுப்பான ரிஷி சுனக்! ஆஸ்திரேலிய பிரதமர் நக்கல் பதில்
லண்டன்: ஆஷஸ் தொடரில் இரண்டாவது போட்டியில் ஆஸ்திரேலியா அணி வீரர்கள் நடந்து கொண்ட விவகாரம் சர்ச்சையான நிலையில், இது சர்வதேச அரசியலிலும் எதிரொலித்துள்ளது. இந்த விவகாரத்தில் இரு நாட்டுப் பிரதமர்களும் நேரடியாக விமர்சித்து கருத்து கூறியுள்ளனர்.
இங்கிலாந்திற்கும் ஆஸ்திரேலியாவுக்கும் இடையே நடக்கும் ஆஷஸ் தொடர் கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெறும் ஒரு தொடராகும். ஆஷஸ் தொடரில் இப்போது 2 போட்டிகள் முடிந்துள்ள நிலையில், இரண்டிலும் ஆஸ்திரேலிய அணியே வெற்றி பெற்றுள்ளது.

இரண்டாவது போட்டியில் பேர்ஸ்டோவ்வை ஆஸ்திரேலிய அணி அவுட் ஆக்கிய முறை சர்ச்சையானது. ஸ்பிரிட் ஆப் தி கேமிற்கு எதிராக இருப்பதாக இங்கிலாந்து தரப்பு கூறும் நிலையில், ஆஸ்திரிலேயா அவர்களுக்குப் பதிலடி கொடுத்துள்ளனர்.
சர்வதேச அரசியல்: இதற்கிடையே இது இப்போது சர்வதேச அரசியலிலும் எதிரொலிக்கிறது. இந்தச் சர்ச்சை குறித்து இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய பிரதமர்கள் மாறி மாறி விமர்சித்து வருகின்றனர். பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக் தரப்பு தான் முதலில் பேர்ஸ்டோவ் அவுட் ஆனது குறித்து ஆஸ்திரேலியாவை விமர்சிக்கும் வகையில் கருத்து கூறியிருந்தார். அதற்கு உடனடியாக ஆஸ்திரேலியா தரப்பும் நறுக் பதிலடியைக் கொடுத்துள்ளது.
இது குறித்து பிரிட்டன் பிரதமரின் செய்தித் தொடர்பாளர் கூறுகையில், "பேரஸ்டோவ் அவுட் ஆன விவகாரத்தில் இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் எதிர்ப்பு தெரிவித்திருந்த நிலையில், நமது பிரதமரும் அதற்கு உடன்படுகிறார், ஆஸ்திரேலியாவைப் போல என்ன செய்தாவது ஆட்டத்தை வெல்ல வேண்டும் என நாம் நினைப்பதில்லை" என்று அவர் தெரிவித்தார்.
பதிலடி: ஆஸ்திரேலிய பிரதமராக இருக்கும் அந்தோனி அல்பானீஸும் தீவிர கிரிக்கெட் ரசிகர் என்பதால் அவரும் இதில் நேரடியாகத் தலையிட்டு நறுக் பதிலடி கொடுத்துள்ளார். ஆஸ்திரேலியாவின் ஆண்கள் மற்றும் பெண்கள் கிரிக்கெட் அணிகள் குறித்துத் தான் பெருமை கொள்வதாகவும், இங்கிலாந்துக்கு எதிரான ஆஷஸ் போட்டிகளை வெற்றியுடன் தொடங்கியது தனக்கு மகிழ்ச்சி என்றும் அவர் குறிப்பிட்டார். இதுதான் பழைய ஆஸ்திரேலிய அணி, எப்போதும் வெற்றி தான் பெறுவோம் என்றும் அந்நாட்டின் பிரதமர் தெரிவித்தார்.
மறுபுறம் ரிஷி சுனக்கும் கூட தீவிர கிரிக்கெட் ரசிகர் தான். கடந்த சனிக்கிழமை இளவரசர் வில்லியமுடன் லார்ட்ஸ் பெவிலியனில் அவர் போட்டியைக் கண்டு ரசித்தார். இதில் பேர்ஸ்டோவ் அவுட் ஆன பிறகு மைதானத்தில் இருந்த சிலர் ஆஸ்திரேலியர்களை அவமதிக்கும் விதமாகச் செயல்பட்டனர். ஆஸ்திரிரேலிய வீரர்கள் விளையாடிய முறைக்கு அதிருப்தி தெரிவித்த அதே நேரத்தில் ரிஷி சுனக், அவர்கள் அவமதிக்கப்பட்டதற்கு கடும் கண்டனம் தெரிவித்தார்.
பழைய சம்பவம்: 1932-33 ஆஷஸ் போட்டியில் இங்கிலாந்து "பாடிலைன்" டிரிக்கை பயன்படுத்தியது. அதாவது பேட்ஸ்மேன்களின் உடலைக் குறிவைத்து பந்துகளை வேகமாக வீசி விக்கெட் எடுக்க முயன்றது. இது அப்போது பெரும் சர்ச்சையானது. இது இரு நாடுகளுக்கும் இடையே அரசியல் ரீதியாகவும் விரிசலை ஏற்படுத்தியது. இருப்பினும், இந்த பிரச்சினையை அரசியலாக மாற்ற ரிஷி சுனக் விரும்பவில்லையாம்.
இரு நாடுகளுக்கும் இடையே பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசிக்க வேண்டிய நிலையில், கிரிக்கெட் போட்டியால் இரு நாட்டிற்கும் இடையே சிக்கலை ஏற்படுத்த இரு பிரதமர்களும் விரும்பவில்லையாம்.
ஆஷஸ் தொடரில் அடுத்த 3ஆவது போட்டி லீட்ஸ் மைதானத்தில் வரும் வியாழக்கிழமை மோத உள்ளது. 5 போட்டிகளை கொண்ட ஆஷஸ் தொடரில் 2-0 என்று ஆஸ்திரேலியா முன்னிலையில் உள்ளதால் அவர்கள் அதிக நம்பிக்கையுடன் 3ஆவது போட்டியில் களமிறங்க உள்ளனர்.












Click it and Unblock the Notifications