உச்சமான இந்தியா-கனடா மோதல்.. ஜஸ்டின் ட்ரூடோவிடம் பேசிய ரிஷி சுனக்.. பிரிட்டன் நிலைப்பாடு இதுதான்
லண்டன்: கனடாவில் காலிஸ்தான் புலிப்படை தலைவர் ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொல்லப்பட்ட சம்பவத்தில் இந்தியா-கனடா உறவு கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறது. இந்நிலையில் இந்த விவகாரத்தில் பிரிட்டன் தன்னுடைய நிலைப்பாட்டை மீண்டும் உறுதி செய்திருக்கிறது.
கொலை: கடந்த ஜூன் மாதம் 8ம் தேதியன்று கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணம், சர்ரே நகரில் உள்ள குருத்வாரா வளாகத்தில் சீக்கிய தலைவரான ஹர்தீப் சிங் நிஜ்ஜார் சுட்டு படுகொலை செய்யப்பட்டார். இவர் மீது இந்தியாவில் ஏராளமான வழக்குகள் நிலுவையில் இருக்கின்றன. இவர் காலிஸ்தான் விடுதலைக்கு செயல்பட்டதாகவும், காலிஸ்தான் புலிகள் படைக்கு ஆட்சேர்ப்பு மற்றும் பயிற்சி வழங்கியதாகவும் இந்திய உளவுத்துறை ஏற்கெனவே குற்றம்சாட்டியிருந்தது.

இந்தியாவின் வலியுறுத்தல்: இது தவிர கடந்த 2007ம் ஆண்டு பஞ்சாப் மாநிலத்தின் லூதியானா நகரில் குண்டு வெடிப்பு சம்பவம் ஒன்று நடந்தது. இதில் 6 பேர் கொல்லப்பட்டனர். இந்த சம்பவத்தில் நிஜ்ஜார் முக்கிய குற்றவாளியாக அறிவிக்கப்பட்டு தேடப்பட்டு வந்தார். இவர் கனடா குடியுரிமை பெற்று அங்க வாழ்ந்து வந்ததால் இந்தியா வசம் ஒப்படைக்கப்பட வேண்டும் என்று பஞ்சாப் காவல்துறை கனடாவுக்கு கோரிக்கை வைத்தது. ஆனால் கனடா அதை ஏற்க மறுத்துவிட்டது. மேலும், கனடாவிலிருந்து இந்தியாவுக்கு எதிராக செயல்படும் பயங்கரவாத குழுக்களுக்கு ஆதரவாக செயல்படும் பிரிவினைவாத குழுக்களுக்கு எதிரான உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்தியா தொடர்ந்து வலியுறுத்தி வந்தது. இந்த சூழலில்தான் அவர் கனடாவில் சுட்டு படுகொலை செய்யப்பட்டார்.
ஆதாரம்: இது குறித்து விசாரணையில் இறங்கிய கனடா உளவுத்துறை, இந்த கொலையில் இந்தியா சம்பந்தப்பட்டிருப்பதாக குற்றம்சாட்டியது. இதனை அந்நாட்டின் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ வெளிப்படையாக கூறி விமர்சித்துள்ளார். இந்த கொலைக்கு பின்னால் இந்தியாவின் நடவடிக்கைகள் இருப்பதற்கான உறுதியான காரணங்கள் இருக்கின்றன என்றும், இது தொடர்பான இந்தியாவின் பாதுகாப்பு ஆலோசகரிடம் கலந்துரையாடியுள்ளதாகவும் கூறியுள்ளார். சமீபத்தில் ஜி20 மாநாட்டில் இந்தியாவுக்கு வந்த ஜஸ்டின் ட்ரூடோ, இந்த கொலைக்கான ஆதாரங்களை பிரதமரிடம் கொடுத்ததாகவும் கூறியுள்ளார்.
மோதல்: ஆனால் இது தொடர்பாக இந்திய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காத நிலையில், கனடா அரசு இந்திய நாட்டின் தூதரக அதிகாரி ஒருவரை கனடாவிலிருந்து வெளியேற்றி உத்தரவிட்டது. அதேபோல இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக இந்தியாவில் இருக்கும் கனடா நாட்டின் தூதரக அதிகாரி ஒருவரை மத்திய அரசு வெளியேற்ற உத்தரவிட்டது. இது இரு நாடுகளுக்கும் இடையான நல்லுறவை கடுமையாக பாதித்தது. இதனையடுத்து இந்தியாவில் பணியாற்றும் கனடா அரசின் தூதரக அதிகாரிகளில் 41 பேரை வெளியேற்ற வேண்டும் என்று இந்தியா தரப்பில் வலியுறுத்தப்பட்டதாக செய்திகள் வெளியாகின.
நிலைப்பாடு: இது இரு நாடுகளுக்கும் இடையே இருந்த மோதல் போக்கை மேலும் உச்சத்திற்கு கொண்டு சென்றது. இப்படி இருக்கையில்தான் இந்த விவகாரம் தொடர்பாக பிரிட்டன் தனது நிலைப்பாட்டை தெளிவுபடுத்தியுள்ளது. அதாவது "இராஜதந்திர உறவுகளுக்கான வியன்னா மாநாட்டின் கொள்கைகளை அனைத்து நாடுகளும் கடைப்பிடிக்க வேண்டும். அனைத்து நாடுகளும் இறையாண்மை மற்றும் சட்டத்தின் ஆட்சியை மதிக்க வேண்டும்" என்று பிரிட்டன் நாட்டின் அரசு செய்தி தொடர்பாளர் தனது அறிக்கையில் கூறியுள்ளார். முன்னதாக பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக், கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவுடன் பேசியிருந்தார். கனடா இந்தியா மீது குற்றம் சாட்டிய பின்னர் அந்நாட்டிற்கு ஆதரவாக பிரிட்டன், அமெரிக்கா போன்ற நாடுகள் முன்வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications