மனித உடலை உள்ளே இருந்து உயிருடன் தின்றுவிடும் பூஞ்சை! மூச்சு விட்டாலே கூட நுழைந்துவிடும்! வார்னிங்
லண்டன்: பிரிட்டன் நாட்டை சேர்ந்த ஆய்வாளர்கள் மனிதர்களே அப்படியே உயிருடன் உள்ளே இருந்து சாப்பிடும் அரிய வகை பூஞ்சை குறித்து சில பகீர் கண்டுபிடிப்புகளை வெளியிட்டுள்ளனர். இந்த வகை பூஞ்சைகள் இப்போது பூமியின் பல்வேறு பகுதிகளிலும் பரவ ஆரம்பித்துள்ளதாகவும் இவை பேரழிவு ஏற்படுத்தவும் வாய்ப்பு இருப்பதாக எச்சரித்துள்ளனர்.
பங்கஸ் எனப்படும் பூஞ்சைகள் பூமியில் எல்லா இடங்களிலும் காணப்படுகின்றன. அவை மண், உரம் மற்றும் நீர் எனக் கிட்டத்தட்ட எல்லா சூழல்களிலும் வளர்கின்றன. அவ்வளவு ஏன் நாம் விரும்பி சாப்பிடும் உணவுகளில் ஒன்றான காளான்கள் கூட ஒரு வகை பூஞ்சைகள் தான். இவை சுற்றுச்சூழல் அமைப்புகளிலும் முக்கிய பங்கு வகிக்கின்றன.

பூஞ்சை தொற்று
அதேநேரம் சில வகை பூஞ்சைகள் மனிதர்களுக்குப் பேரழிவைத் தரக்கூடியதாகவும் இருக்கிறது. இருப்பினும், வைரஸ்கள் மற்றும் பாக்டீரியாக்களை ஆய்வு செய்யும் அளவுக்குப் பூஞ்சைகளை ஆய்வு செய்வதில்லை. சொல்லப்போனால் ஒவ்வொரு ஆண்டும் பூஞ்சை பாதிப்புகள் காரணமாக உலகெங்கும் 25 லட்சம் பேர் வரை உயிரிழக்கிறார்கள். பூஞ்சை தொற்று குறித்த துல்லியமான டேட்டா இல்லாததால் இதன் எண்ணிக்கை மேலும் அதிகமாகவே இருக்கும் என அஞ்சப்படுகிறது
இதற்கிடையே பூஞ்சை குறித்து நடத்தப்பட்ட ஆய்வில், மனிதர்களை மெல்லக் கொல்லும் ஆண்டுக்குப் பல லட்சம் மரணங்களுக்குக் காரணமாக இருக்கும் ஒரு வகை பூஞ்சைகள் இப்போது பூமியின் பல்வேறு இடங்களிலும் பரவும் ஆபத்து இருப்பதாக ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர். பிரிட்டனில் உள்ள மான்செஸ்டர் பல்கலைக்கழக ஆய்வாளர்களே இந்த ஆய்வை நடத்தியுள்ளனர்.
உயிருடன் தின்றுவிடும்
அதில் நுரையீரலைப் பாதிக்கும் உயிருக்கு ஆபத்தான ஆஸ்பெர்கிலஸ் நோயை ஏற்படுத்தும் ஆஸ்பெர்கிலஸ் என்ற பூஞ்சையின் ஆபத்து குறித்து எச்சரித்துள்ளனர். இந்த வகை பூஞ்சைகள் மனிதர்களை உள்ளே இருந்து அப்படியே தின்றுவிடுமாம். அந்தளவுக்கு மிகக் கொடூரமான பாதிப்பை ஏற்படுத்தும் இந்த பூஞ்சை புவி வெப்ப மயமாதல் காரணமாக இப்போது பூமியின் பல்வேறு பகுதிகளுக்கும் பரவும் ஆபத்து இருப்பதாக ஆய்வாளர்கள் எச்சரிக்கிறார்கள்.
சில ஆஸ்பெர்கிலஸ் இனங்கள் வட அமெரிக்கா, ஐரோப்பா, சீனா மற்றும் ரஷ்யா நாடுகளுக்கும் பரவலாம் என எச்சரித்துள்ளனர். இப்போது இந்த நாடுகளில் இந்த கொடிய பூஞ்சை வகைகள் இல்லை. ஆனால், வரும் காலத்தில் புவி வெப்ப மயமாதல் காரணமாக இந்த நாடுகளும் பூஞ்சை தொற்றால் பாதிக்கும் ஆபத்து இருக்கிறது. இதனால் மிகப் பெரிய பேரழிவு கூட ஏற்படலாம் என ஆய்வாளர்கள் எச்சரிக்கிறார்கள்.
ஆஸ்பெர்ஜிலஸ் பூஞ்சைகள்
ஆஸ்பெர்ஜிலஸ் பூஞ்சைகள் உலகம் முழுவதும் உள்ள நிலத்தில் சிறிய இழைகளைப் போல வளரும். அவை காற்றில் பரவும் சிறிய வித்துகளை அதிக அளவில் வெளியிடுகின்றன. இவற்றை நாம் மூச்சுவிடும்போது உள்ளே இழுக்கும் வாய்ப்புகள் அதிகம். ஆனால், நமது உடலில் உள்ள நோய் எதிர்ப்பு மண்டலத்திற்கு இது குறித்துத் தெரியும் என்பதால் உடனடியாக இந்த பூஞ்சை வித்துகளை அழித்துவிடும்.
யாருக்குச் சிக்கல்?
ஆனால், இணை நோய் உள்ளவர்கள், நுரையீரல் பாதிப்பு கொண்டவர்கள், ஆஸ்துமா, கேன்சர் பாதிப்பு கொண்டவர்கள், உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்தவர்கள் ஆகியோருக்கு இது பேராபத்தாக மாறும். அவர்களின் நோய் எதிர்ப்பு மண்டலம் இந்த பூஞ்சையின் வித்துகளை அழிக்காது. இதனால் அவை மெல்ல உடலைச் சாப்பிட ஆரம்பித்துவிடும். சரியான நேரத்தில் உரியச் சிகிச்சை எடுக்கவில்லை என்றால் இதில் பாதிக்கப்படுவோர் 20-40% வரை உயிரிழக்கும் ஆபத்தும் இருப்பதாக எச்சரிக்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications