அடடே பாருங்க! ரிஷி சுனக் ஒரு ரியல் இந்து.. கையில் இருந்ததை நோட் பண்ணீங்களா.. பாராட்டும் நெட்டிசன்கள்
லண்டன்: பிரிட்டன் பிரதமராக ரிஷி சுனக் பதவியேற்றுள்ள நிலையில், அவரது முதல் பேச்சில் ஒரு விஷயத்தைக் கவனத்து நெட்டிசன்கள் பகிர்ந்து வருகின்றனர்.
பிரிட்டன் பிரதமராக இருந்த லிஸ் டிரஸ் கடந்த சில நாட்களுக்கு முன்பு ராஜினாமா செய்தார். இதையடுத்து புதிய தலைவரைத் தேர்வு செய்ய ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சியில் தேர்தல் அறிவிக்கப்பட்டது
இதில் ரிஷி சுனக்கிற்கு மட்டுமே சுமார் 140 எம்பிக்களின் ஆதரவு கிடைத்தது. அவரைத் தவிர வேறு யாருக்கும் போதிய ஆதரவு கிடைக்கவில்லை என்பதால் ரிஷி சுனக் பிரதமராகத் தேர்வு செய்யப்பட்டார்.

ரிஷி சுனக்
அவரை இன்றைய தினம் மன்னர் சார்லஸ் அதிகாரப்பூர்வமாகப் பிரதமராக நியமித்தார். மிக விரைவில் அவரது அமைச்சர்கள் பதவியேற்றுக் கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. 42 வயதான ரிஷி சுனக், 200 ஆண்டு பிரிட்டன் வரலாற்றில் மிகக் குறைந்த வயதில் பிரதமரானவர் என்ற சிறப்பையும் பெற்றார். மேலும், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஒருவர் பிரிட்டன் பிரதமராவது இதுவே முதல்முறையாகும்.

முதல் பேச்சு
அதன் பின்னர் பிரதமரின் அதிகாரப்பூர்வ இல்லத்திற்கு முன் செய்தியாளர்களிடம் பேசிய அவர் பல முக்கிய கருத்துகளைத் தெரிவித்தார். சீரான ஸ்திரத்தன்மை கொண்ட பிரிட்டன் பொருளாதாரத்தை உருவாக்குவதே தனது நோக்கம் என்று குறிப்பிட்டு இருந்தார். முன்னாள் பிரதமர் லிஸ் டிரஸின் நோக்கம் சரி என்றாலும் அவர் திட்டத்தை அமல்படுத்துவதில் சில தவறுகளைச் செய்துவிட்டதாகக் கூறி இருந்தார்.

கவனித்த நெட்டிசன்கள்
இதனிடையே அவரது பேச்சைத் தாண்டி அவர் கையில் கட்டியிருந்த கயிறு தான் இப்போது நெட்டிசன்கள் மத்தியில் பேசுபொருளாகி உள்ளது. ரிஷி சுனக் தனது முதல் உரையின் போது கைகளில் இந்து மதத்தினர் பொதுவாகக் கட்டும் சிவப்பு கயிற்றை அணிந்து இருந்தார்.. இந்த சிவப்பு நிற கயிறு மிகவும் புனிதமானதாகக் கருதப்படுகிறது. பல தரப்பட்ட இந்துக்களும் மத நம்பிக்கையால் இதை கைகளில் அணிவார்கள். பொதுவாக அனைத்து பூஜைகளிலும் இது ஒரு அங்கமாக இருக்கும்.

கயிறு
புனிதமான இந்த கயிற்றைக் கட்டுவதன் மூலம் ஒருவருக்குக் கூடுதல் பலம் கிடைப்பதாக நம்பப்படுகிறது. எதிரிகளிடம் இருந்தும் இந்த கயிறு பாதுகாக்கும் என்று நம்பப்படுகிறது. இதைத் தான் நெட்டிசன்கள் பலரும் தங்கள் சமூக வலைத்தள பக்கத்தில் பகிர்ந்து வருகின்றனர். பிரிட்டன் பிரதமர் ஒருவரின் கைகளில் இந்து மதத்தின் பண்பாடு இருக்கிறது என்றும் கருத்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

இந்து
பிரிட்டன் பிரதமராக உள்ள ரிஷி சுனக் கடந்த காலங்களிலும் இதுபோன்ற செயல்களைச் செய்து உள்ளார். அவர் அங்குள்ள இஸ்கான் கோயிலுக்கு அடிக்கடி செல்வதை வாடிக்கையாகவே கொண்டு உள்ளார். அதேபோல கடந்த முறை பிரதமர் பதவிக்குப் போட்டியிடும் போது பசுவுக்குப் பூஜை செய்ததும் நினைவு கூரத்தக்கது. மேலும், இவர் எம்பியாக பதவியேற்ற போது பகவத்கீதை மேல்தான் பதவி பிரமாணம் எடுத்துக் கொண்டார்.

பிரதமர்
போரிஸ் ஜான்சன் பதவி விலகிய உடன் நடந்த தேர்தலிலேயே இவருக்குப் பிரதமராகும் வாய்ப்பு இருந்தது. இருப்பினும், கடைசி நேரத்தில் இவரது ஆதரவு சரிந்ததால், லிஸ் டிரஸ் பிரதமராகத் தேர்வு செய்யப்பட்டார். இருந்த போதிலும், இப்போது வெறும் சில வாரங்களில் ரிஷி சுனக் மீண்டும் பிரிட்டன் பிரதமராக பதவியேற்க உள்ளார்.












Click it and Unblock the Notifications