"யார் நீங்க.. என்ன இதெல்லாம்?" இங்கிலாந்தில் தசரா கொண்டாட்டத்தில் இந்தியர்கள் மீது தாக்குதல்
லண்டன்: இங்கிலாந்தில் தசரா கொண்டாட்டத்தின்போது, பிரிட்டிஷ் நாட்டை சேர்ந்த இரு இந்தியர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இனவெறி காரணமாகவே இருவர் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது. தாக்குதலில் இருவருக்கும் முகம் மற்றும் தலையில் காயம் ஏற்பட்டுள்ளது.
இந்துக்களின் மிக முக்கிய பண்டிகைகளில் ஒன்று தசரா.. தமிழகத்தில் தசரா கொண்டாட்டங்கள் பெரிதாக இருக்காது என்றாலும் நாட்டின் பிற பகுதிகளில் மிக கோலகலமாக தசரா பண்டிகை கொண்டாடப்படும். குறிப்பாக வடஇந்தியாவில் ராவணனை ராமர் கொன்ற நாளாக தசரா கொண்டாடப்படுகிறது.

தாக்குதல்
இந்தியர்கள் இப்போது பல்வேறு நாடுகளிலும் சென்று செட்டிலாகி வரும் சூழலில், வெளிநாடுகளிலும் தசரா கொண்டாட்டங்கள் நடந்து வருகிறது. அதன்படி அக்டோபர் 17ஆம் தேதி பிரிட்டன் நாட்டின் ஓசெட் டவுன் ஹாலில் தசரா கொண்டாட்டங்கள் நடைபெற்றது. அங்குள்ள தெலுங்கு இந்து சமூக அமைப்புகள் இணைந்து அங்கு தசரா கொண்டாட்ட நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தன. அதில் பிரிட்டன் நாட்டில் வசிக்கும் இந்திய வம்சாவளியினர் மற்றும் இந்தியர்கள் என பலரும் கலந்து கொண்டனர். அப்போது தான் இரு இந்தியர்கள் மீது அங்கு தாக்குதல் நடந்துள்ளது.
என்ன நடந்தது
அப்போது சுமார் 25 உள்ளூர் இளைஞர்கள் கொண்ட குழுவினர் மின்சார சைக்கிளில் அங்கு வந்துள்ளனர். அவர்கள் டவுன் ஹாலில் என்ன நிகழ்ச்சி நடக்கிறது, உள்ளே யார் இருக்கிறார்கள் என்று கேட்டுள்ளனர். அப்போது சிலர் நிகழ்ச்சி நடைபெறும் இடத்துக்குள் வலுக்கட்டாயமாக நுழைய முயன்றதாகவும், ஆனால் பாதுகாப்புப் பணியாளர்கள் அவர்களை அனுமதிக்கவில்லை என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. அப்போது தான் அங்கிருந்த இந்தியர்கள் மீது தாக்குதல் நடந்துள்ளது.
இந்த தாக்குதலில் காயமடைந்தவர்களில் ஒருவர் ஹைதராபாத்தை பூர்வீகமாக கொண்ட 51 வயது பிரிட்டிஷ் இந்தியர். அவர் இரவு சுமார் 9 மணியளவில் நிகழ்ச்சி நடைபெற்ற இடத்திலிருந்து கிளம்பி, தனது நண்பருடன் காரை நோக்கி நடந்து சென்றுள்ளார். அப்போது அவரை சூழ்ந்த 8 முதல் 10 இளைஞர்கள் கொண்ட கேங் இருவரையும் தாக்கியுள்ளனர். இதில் இருவரின் முகம் மற்றும் தலையில் காயம் ஏற்பட்டு ரத்தம் கொட்டியுள்ளது.
போலீஸ் விசாரணை
இது தொடர்பாக தகவல் கிடைத்தவுடன் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். இந்த தாக்குதல் இனவெறி காரணமாக நடத்தப்பட்டிருக்கலாம் என போலீசார் விசாரித்து வருகின்றனர். எனினும், தாக்குதலுக்கான காரணம் இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை. சம்பவம் தொடர்பாக இதுவரை யாரும் கைது செய்யப்படாத நிலையில், தாக்குதலில் ஈடுபட்டவர்களை அடையாளம் காணும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
இந்த சம்பவம் தொடர்பாகப் பேசிய உள்ளூர் போலீசார், "இந்த சம்பவம் இந்து சமூகத்தினருக்கு வேதனையை ஏற்படுத்தி இருக்கும் என்பதை நாங்கள் புரிந்துகொள்கிறோம். இந்த தாக்குதல்களை மிகவும் தீவிரமாக எடுத்து கொண்டுள்ளோம். இதற்கு காரணமானவர்களை கண்டறியும் பணிகள் நடந்து வருகிறது. அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுப்போம்" என்றார்.
அதிகரிக்கும் இனவெறி தாக்குதல்
கடந்த பல ஆண்டுகளாகவே அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கு செல்லும் இந்தியர்கள் எண்ணிக்கை சீராக அதிகரித்து வருகிறது. ஆனால், சமீபத்திய ஆண்டுகளில் இந்தியர்கள் மீதான இனவெறி தாக்குதல்கள் அதிகரித்து வருகிறது. இது தொடர்பாக உள்ளூர் போலீசார் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே வெளிநாட்டு வாழ் இந்தியர்களின் முக்கிய கோரிக்கையாக உள்ளது.




Click it and Unblock the Notifications
