லண்டன் செல்லும் விஜய்! ₹1.02 லட்சம் கோடி முதலீடு.. முதல் வெளிநாட்டு பயண பின்னணி என்ன? இதுதான் பிளான்
லண்டன்: முதலீடுகளை ஈர்க்க லண்டன் செல்கிறார் விஜய்.. தமிழகத்தில் இருந்து வெளிநாடுகளுக்கு தொழில் முதலீடுகளை ஈர்க்கும் நோக்கத்தில் முதலமைச்சர் விஜய் லண்டன் செல்ல உள்ளார். வருகிற 10-ந்தேதி முதல் 16-ந்தேதி வரை விஜய் லண்டனில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கிறார். இந்த பயணத்தின்போது அவர் மேற்கொள்ளவிருக்கிற திட்டங்கள் பற்றின தகவல்கள் வெளிவந்தவாறே உள்ளன.
லண்டன் செல்ல உள்ள விஜய், பல்வேறு நாடுகளைச் சேர்ந்த முன்னணி நிறுவனங்களின் தொழிலதிபர்கள் மற்றும் முதலீட்டாளர்களை சந்திக்க உள்ளார். தமிழ்நாட்டில் தொழில் தொடங்குவதற்கான வாய்ப்புகள் குறித்து அவர்களிடம் எடுத்துரைத்து, புதிய முதலீடுகளை ஈர்க்கும் நடவடிக்கைகளில் அவர் ஈடுபட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

விஜய்யின் லண்டன் பயணம்
அத்துடன், விஜய்யின் லண்டன் பயணத்துடன் நடிகர் அஜித்தின் கார் பந்தயமும் இணைந்துள்ளது. லண்டனில் வருகிற 11 மற்றும் 12-ந்தேதிகளில் Michelin Le Mans கார் பந்தயம் நடைபெற உள்ளது. இதில் நடிகர் அஜித்குமார் பங்கேற்கும் அணி போட்டியிடுகிறது. இதனால் விஜய் லண்டனில் இருக்கும்போது அஜித்தை சந்திக்க வாய்ப்பு உள்ளதாகவும், அவர் பங்கேற்கும் கார் பந்தயத்தை நேரில் பார்க்க வாய்ப்பு இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
சினிமாவில் விஜய் மற்றும் அஜித் இருவரும் நீண்ட காலமாக ரசிகர்களால் போட்டியாளர்களாக பார்க்கப்பட்டு வந்தாலும், இருவருக்கும் இடையே தனிப்பட்ட முறையில் நல்ல நட்பு இருந்து வருகிறது.. பல்வேறு சந்தர்ப்பங்களில் அஜித், விஜய்க்கு வாழ்த்தும் தெரிவித்துள்ளார்.
முதலமைச்சர் விஜய்
குறிப்பாக, சமீபத்தில் தமிழக சட்டசபையில் விஜய் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். தமிழ்நாட்டில் இளைஞர்களுக்கு மோட்டார் பந்தயத்தின் மீதான ஆர்வத்தை ஊக்குவிக்கும் வகையில், புதிய மோட்டார் ஸ்போர்ட்ஸ் நகரம் அமைக்கப்படும் என்று அவர் அறிவித்தார். சர்வதேச தரத்திலான பந்தயத் தடம் மற்றும் பயிற்சி மையங்கள் அமைக்கப்பட்டு, தேசிய மற்றும் சர்வதேச அளவில் மோட்டார் ஸ்போர்ட்ஸ் வீரர்களை உருவாக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
இந்த அறிவிப்புக்கு அஜித்குமார் நன்றி தெரிவித்திருந்தார். தமிழ்நாடு அரசு மேற்கொள்ளும் இந்த முயற்சியை பாராட்டிய அவர், மோட்டார் ஸ்போர்ட்ஸ் சிட்டி அமைக்கப்படுவது தனக்கு மகிழ்ச்சி அளிப்பதாக தெரிவித்திருந்தார். மேலும், முதலமைச்சர் விஜய்யின் முயற்சிகள் வெற்றி பெற வாழ்த்தும் கூறியிருந்தார்.
விஜய்-அஜித் சந்திப்பு ?
இந்த பின்னணியில்தான் இப்போது விஜய்-அஜித் சந்திப்பு குறித்த எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. அதிலும் குறிப்பாக அஜித் பங்கேற்கும் கார் பந்தயத்தை விஜய் நேரில் பார்ப்பாரா என்பது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
இதற்கிடையே, லண்டன் செல்வதற்கு முன்பாக துபாயில் விஜய் அஜித்தை சந்திக்க வாய்ப்புள்ளதாகவும் ஒரு தகவல் வெளியாகியுள்ளது. செப்டம்பர் 11-ந்தேதி துபாயில் இருவரும் சந்திக்கலாம் என்றும், அதன்பிறகு விஜய் லண்டன் செல்லலாம் என்றும் அந்த தகவல் தெரிவிக்கிறது. ஆனால் இந்த துபாய் சந்திப்பு அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்படவில்லை.
ஆனால், முதல்வர் விஜய்யின் இந்த லண்டன் பயணம் அவரது முதல் அதிகாரப்பூர்வ வெளிநாட்டு பயணமாகும். சென்னையில் இருந்து Emirates விமானம் மூலம் துபாய் வழியாக லண்டன் செல்லும் விஜய், அங்கு ஐரோப்பிய நாடுகளைச் சேர்ந்த தொழிலதிபர்கள் மற்றும் முதலீட்டாளர்களை சந்தித்து தமிழ்நாட்டில் தொழில் தொடங்கவும், முதலீடு செய்யவும் அழைப்பு விடுக்க உள்ளார்.
₹1.02 லட்சம் கோடி முதலீடு
விஜய் செல்வதற்கு முன்பாக தமிழக தொழில்துறை மற்றும் நிதித்துறை உயர் அதிகாரிகள் கொண்ட குழுவும் லண்டன் சென்று முதலீட்டாளர் சந்திப்புகளுக்கான ஏற்பாடுகளை மேற்கொள்ள உள்ளது. மேலும், சமீபத்தில் நடைபெற்ற Vettri Tamil Nadu Investment Conclave 2026-ல் 104 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மூலம் ரூ.1,02,514 கோடி முதலீட்டு உறுதிமொழிகள் பெறப்பட்டுள்ள நிலையில், அதன் தொடர்ச்சியாகவே இந்த லண்டன் பயணம் பார்க்கப்படுகிறது.
ஒருபுறம் முதலீட்டாளர்களை சந்திப்பதற்கான விஜய்யின் லண்டன் பயணம், மறுபுறம் அஜித்தின் கார் ரேஸ் என இருவரையும் இணைக்கும் சூழல் உருவாகியுள்ளது. எனவே, விஜய் லண்டனில் அஜித்தை சந்திப்பாரா? அஜித்தின் கார் பந்தயத்தை நேரில் பார்ப்பாரா? என்பதுதான் தற்போது ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.


Click it and Unblock the Notifications
