வலிமையான பாஸ்போர்ட்.. டாப் இடத்தில் சிங்கப்பூர்.. படுமோசமான நிலையில் பாகிஸ்தான்! அப்போ இந்தியா எங்கே
லண்டன்: பிரிட்டனை சேர்ந்த ஹென்லி & பார்ட்னர்ஸ் நிறுவனம் உலகின் சக்திவாய்ந்த பாஸ்போர்ட் குறித்த தகவல்களை வெளியிட்டுள்ளது. இதில் இந்தியா உள்ளிட்ட நாடுகள் எந்த நிலையில் இருக்கிறது என்பது குறித்துப் பார்க்கலாம்.
நாம் எந்தவொரு நாட்டிற்குச் செல்லவும் நமக்கு பாஸ்போர்ட் தேவைப்படும். இது அந்த நபர் குறிப்பிட்ட நாட்டை சேர்ந்தவர் என்பதற்கான சான்றாகும். பொதுவாக விசா இல்லாமல் பல இடங்களுக்குச் செல்ல அனுமதிக்கும் பாஸ்போர்ட்டை தான் வலிமையான பாஸ்போர்ட் என்று குறிப்பிடுவார்கள்.

அப்படி ஹென்லி பாஸ்போர்ட் இன்டெக்ஸ் வெளியிட்டுள்ள ரேங்கிங்கில் சிங்கப்பூர் முதல் இடத்தில் இருக்கிறது. இதில் நமது அண்டை நாடான பாகிஸ்தான் தான் மிகவும் மோசமான ஒரு இடத்தில் இருக்கிறது.
இதற்கிடையே ஹென்லி பாஸ்போர்ட் இன்டெக்ஸ் உலகின் வலிமையான பாஸ்போர்ட் குறித்த தகவல்களை வெளியிட்டுள்ளது. இதுவரை இந்தப் பட்டியலில் ஜப்பான் முதல் இடத்தில் இருந்த நிலையில், இந்தாண்டு ஜப்பானை பின்னுக்குத் தள்ளி சிங்கப்பூர் முதல் இடத்தை பிடித்துள்ளது. சிங்கப்பூர் பாஸ்போர்ட்டை வைத்து உலகெங்கும் உள்ள 192 நாடுகளுக்கு விசா இல்லாமல் சென்று வர முடியும். அதேபோல இந்தியாவையும் இந்த ரேங்கில் கணிசமாக முன்னேறியிருக்கிறது.
இந்தியா எங்கே: கடந்தாண்டு இந்திய பாஸ்போர்ட் 85ஆவது இடத்தில் இருந்த நிலையில், இப்போது 5 இடம் முன்னேறி 80ஆவது இடத்தை பிடித்துள்ளது. இந்திய பாஸ்போர்ட்டை வைத்து 57 நாடுகளுக்கு விசா இல்லாமல் சென்று வர முடியும். இந்திய பாஸ்போர்ட் வைத்திருப்பவர்கள் இந்தோனேசியா, தாய்லாந்து மற்றும் ருவாண்டா போன்ற நாடுகளில் விசா இல்லாமல் அல்லது அங்குச் சென்று விசா எடுக்க முடியும்.
அதேநேரம் சீனா, ஜப்பான், ரஷ்யா, அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் என மொத்தம் 177 இடங்களுக்குச் செல்ல விசா தேவை. இந்த அதிக விசா தேவையின் காரணமாகவே இந்தியா இந்த ரேங்கில் பின்தங்கியிருக்கிறது.
சிங்கப்பூர்: லண்டனைச் சேர்ந்த ஹென்லி & பார்ட்னர்ஸ் வெளியிட்டுள்ள இந்த தரவரிசையின்படி, ஐந்து ஆண்டுகளுக்கு மேல் ஜப்பான் முதல் இடத்தில் இருந்தது. அங்கே விசா இல்லாமல் செல்லக் கூடிய இடங்களின் எண்ணிக்கை குறைந்த நிலையில், ஜப்பான் மூன்றாவது இடத்திற்குத் தள்ளப்பட்டுள்ளது. ஜப்பான் பாஸ்போர்ட் வைத்திருந்தால் 189 இடங்களுக்கு விசா இல்லாமல் செல்லாம்..
இந்தப் பட்டியலில் குட்டி நாடான சிங்கப்பூர் டாப் இடத்தை பிடித்துள்ளது. சிங்கப்பூர் பாஸ்போர்ட்டை வைத்திருந்தால் 193 இடங்களுக்கு விசா இல்லாமல் செல்லாம்.. சுமார் 10 ஆண்டுகளுக்கு முன்பு இந்தப் பட்டியலில் முதல் இடத்தில் இருந்த அமெரிக்கா இப்போது 8ஆவது இடத்திற்குச் சரிந்துள்ளது. அதேபோல ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்த போது கடந்த 2017இல் 2ஆவது இடத்தில் இருந்த பிரிட்டனும் 4ஆவது இடத்திற்குச் சரிந்துள்ளது.
வழக்கமாக இந்தப் பட்டியலில் ஆசியா நாடுகள் தான் ஆதிக்கம் செலுத்தும். ஆனால், ஐரோப்பா நாடுகள் இந்தப் பட்டியலில் மீண்டும் இப்போது ஒரு கம்பேக்கை கொடுத்து வருகிறது. ஜெர்மனி, இத்தாலி, ஸ்பெயின் நாடுகள் பல இடங்கள் முன்னேறி உள்ளது.
பாகிஸ்தான் மோசம்: இதில் நமது அண்டை நாடான பாகிஸ்தானில் நிலைமை தான் ரொம்பவோ மோசமாக இருக்கிறது. இந்தப் பட்டியலில் பாகிஸ்தான் 100ஆவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. பாக். கீழ் வெறும் 3 நாடுகள் மட்டுமே இருக்கிறது. பாக். பாஸ்போர்ட்டை வைத்திருப்போர் வெறும் 33 இடங்களுக்கு விசா இல்லாமல் சென்று வர முடியும்.












Click it and Unblock the Notifications