"ஹாய் விஜய் மாமா.. சீக்கிரம் வாங்க.." ரிஷி சுனக்கின் புதிய வீடியோவால் கலகல! யாருப்பா அந்த விஜய் மாமா
லண்டன்: பிரிட்டன் நாட்டின் பிரதமராகப் பதவியேற்றுள்ள இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ரிஷி சுனக்கின் வீடியோ ஒன்று இப்போது இணையத்தில் டிரெண்டிங்கில் உள்ளது.
இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ரிஷி சுனக் பிரிட்டன் நாட்டின் புதிய பிரதமராகத் தேர்வு செய்யப்பட்டு உள்ளார். வெறும் 42 வயதான ரிஷி சுனக், மிகக் குறைந்த வயதில் பிரதமர் பதவிக்கு வந்தவர் என்ற சிறப்பையும் பெற்றுள்ளார்.
அதேபோல இந்து ஒருவர் பிரிட்டன் பிரதமராக வருவதும் இதுவே முதல்முறை. இப்படிப் பல சாதனைகளைப் படைத்துள்ள ரிஷி சுனக் மீதான எதிர்பார்ப்பு அதிகமாகவே உள்ளது.

ரிஷி சுனக்
ரிஷி சுனக்கின் மனைவி அக்ஷதா மூர்த்தி இந்தியாவில் பிறந்தவர். இவர் இன்ஃபோசிஸ் இணை நிறுவனர் நாராயண மூர்த்தியின் மகள் ஆவர். அக்ஷதாவுக்கு இன்னும் கூட இன்ஃபோசிஸ் நிறுவனத்தில் ஒரு சதவீதத்திற்கும் குறைவான பங்குகள் உள்ளன. இன்ஃபோசிஸ் நிறுவனம் சிறப்பாகச் செயல்பட்டு வருவதால், கடந்த பல ஆண்டுகளாகவே அவருக்கு ஆண்டுக்கு 100 கோடி ரூபாய் வரை லாபம் கிடைக்கிறது.

பாசம்
இப்படி ரிஷி சுனக்கிற்கும் இந்தியாவுக்கும் இடையே இருக்கும் தொடர்பு என்பது மிகப் பெரியது. இந்தச் சூழலில் அவர் இந்தியாவில் உள்ள தனது உறவினருடன் பேசும் புதிய வீடியோ வெளியாகி சமூக வலைத்தளங்களில் டிரெண்டிங்கில் உள்ளது. இதைப் பிரபல சமையல்காரர் சஞ்சய் ரெய்னா தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து உள்ளார். அதில் ரிஷி சுனக் இந்தியாவில் வசிக்கும் தனது உறவினருடன் பாசமாகப் பேசுகிறார்.

விஜய் மாமா
அந்த வீடியோவில் முதலில் சஞ்சய் ரெய்னா இருக்கிறார். அவர் "மாமா, உங்களுக்கு ஹாய் சொல்ல யார் வந்துள்ளார் எனப் பாருங்கள்" என்கிறார். இதையடுத்து கேமராவில் தோன்றும் பிரிட்டன் பிரதமர், "விஜய் மாமா, ஹாய். நான் தான் ரிஷி, எப்படி இருக்கீங்க?" என்று ஆர்வமாக நலம் விசாரிக்கிறார். அத்துடன் நில்லாமல் வரும் நவ.10ஆம் தேதி அந்த விஜய் மாமாவை லண்டன் வரும்படியும் அவர் அழைக்கிறார்.

லண்டன் வாங்க
ரிஷி சுனக் மேலும், "இங்கு வந்து என்னைப் பார்ப்பீர்கள் என எனக்கு நம்பிக்கை இருக்கிறது. இங்கு வந்ததும் உங்கள் மருமகன் சஞ்சயிடம் சொல்லுங்கள். அவர் உங்களைப் பிரதமர் இல்லத்திற்கு அழைத்து வருவார். பார்த்து பத்திரமாக இருங்கள்" என்று அவர் கூறுகிறார். இந்த வீடியோவை பகிர்ந்துள்ள சஞ்சய் பிரிட்டனுக்கு வர இனி தனியாக விசா வாங்கத் தேவையில்லை என்று கிண்டலாகப் பதிவிட்டு உள்ளார்.

கருத்து
இந்த வீடியோ இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது. பலரும் ரிஷி சுனக்கின் இந்த எளிமையான குணத்தைப் பாராட்டி வருகின்றனர். பிரிட்டன் பிரதமரான பின்னரும் கூட எளிமை மாறாமல் இருப்பதாகவும் பதிவிட்டு வருகின்றனர். பிரிட்டனில் நடந்த ஒரு பார்ட்டியில் இந்த வீடியோ எடுக்கப்பட்டு இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

யார் அந்த விஜய் மாமா
அதேபோல ரிஷி சுனக் பிரிட்டனுக்கு அழைத்த அந்த விஜய் மாமா யார் என்பது குறித்தும் இணையத்தளத்தில் விவாதமே நடந்து வருகிறது. அந்த விஜய் மாமாவை எப்படியாவது பார்க்க வேண்டுமே என்றும் சிலர் பதிவிட்டு வருகின்றனர். விஜய் மாமா இந்தியாவில் வசிக்கும் ரிஷி சுனக்கின் உறவினராக இருக்கலாம் அல்லது சஞ்சயின் உறவினராக இருக்கலாம் என்று கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications