ஐயோ வலி தாங்க முடியலையே.. 13 பற்களை தானே பிடுங்கிக் கொண்ட பெண்.. ஏன் என்னாச்சு?
லண்டன்: இங்கிலாந்தில் பல் ஈறு வலியால் துடித்த பெண் ஒருவர் செய்த காரியம் உள்ளூர் மக்களை ஆச்சரியப்பட வைத்துள்ளது.
இங்கிலாந்தை சேர்ந்தவர் டேனிலி வாட்ஸ் (42). இவருக்கு நீண்ட காலமாகவே பல் ஈறுகளில் வலி இருந்து வந்துள்ளது. உள்ளூரில் உள்ள பல் மருத்துவமனையும் 7 ஆண்டுகளுக்கு முன்னர் மூடப்பட்டு விட்டது. இதனால் அவரால் உடனடியாக சிகிச்சை மேற்கொள்ள முடியவில்லை.
மேலும் வெளியூர் சென்று சிகிச்சை பெறவும் இவருக்கு வசதியில்லை. இதனால் என்ன செய்வது தெரியாமல் தவித்து வந்தார் வாட்ஸ். இந்த நிலையில் கடந்த சில தினங்களாக பல் ஈறுகளில் கடுமையான வலி ஏற்பட்டது.

வலி நிவாரணம்
பல முறை வலி நிவாரண மாத்திரைகளை போட்டும் வாட்ஸுக்கு வலி தீரவில்லை. எப்படியும் மருத்துவமனைக்கு சென்றால் பற்களை பிடுங்கிவிடுவார்கள். அதை நாமே செய்துவிட்டால் தினந்தோறும் வலியிலிருந்தாவது விடுதலை பெறலாமே என எண்ணினார்.

பற்கள் அகற்றம்
இதையடுத்து தனது பற்களை தானே அகற்றியுள்ளார். ஏதோ ஒரு பல் என நீங்கள் நினைத்துக் கொள்ள போகிறீர்கள். அவர் மொத்தம் 13 பற்களை அகற்றிவிட்டார். அதில் முன் பகுதியில் உள்ள பற்களும் அடங்கும். இதுகுறித்து வாட்ஸ் கூறுகையில், நான் இப்படித்தான் தினந்தோறும் வாழ்ந்து வருகிறேன்.

வலி நிவாரணி எடுத்துக் கொள்வேன்
வலிநிவாரணியை எடுத்துக் கொள்வேன், என் பணியிடத்திற்கு செல்வேன். என் குழந்தைகளையும் கவனித்துக் கொள்வேன். இவற்றையெல்லாம் நான் எனது சிரிப்பை மூடிக் கொண்டு செய்கிறேன். எனக்கு தெரிந்தவர்கள் வந்தால் கூட அவர்களிடம் பேசுவதை தவிர்க்கிறேன், இன்னும் சொல்ல போனால் அவர்களிடம் பேசுவதையே வெறுக்கிறேன் என்றார்.

அரசியல்வாதி
இதையடுத்து அந்த பகுதியின் அரசியல்வாதி கேடி பார்க்கர் என்பவர் வாட்ஸின் வசதியின்மை குறித்த உண்மைத்தன்மையை அறிந்து வாட்ஸின் சிகிச்சைக்காக நிதி திரட்டினார். இதன் மூலம் 1200 அமெரிக்க டாலர்கள் சேர்ந்துள்ளன. இதை வைத்து வாட்ஸுக்கு சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டது.

14 பற்கள்
தற்போது வெறும் 14 பற்களை மட்டுமே கொண்டுள்ள வாட்ஸுக்கு மேலும் 8 பற்கள் அகற்றப்பட இருக்கிறது. மேலும் அவருக்கு எடுக்கப்பட்ட பற்களுக்கு செயற்கை பற்களும் பொருத்தப்படவுள்ளது. தனது மருத்துவ செலவுக்காக பலர் நன்கொடை அளித்துள்ளது குறித்து நெகிழ்ச்சியாக கூறியுள்ளார் வாட்ஸ்.

நன்கொடை
இதுகுறித்து அவர் வெளியிட்ட வீடியோவில் "எனக்கு பலர் நன்கொடை அளித்துள்ளார்கள். அவர்கள் யாரென்றே தெரியாது. இருப்பினும் என்னுடைய உடல்நலனில் அக்கறை எடுத்து எனக்காக உதவியிருக்கிறார்கள். இதனால் நான் அனைவருக்கும் நன்றி சொல்லிக் கொள்கிறேன் என்றார். இவருக்கு ஆகஸ்ட் மாதத்தில் செயற்கை பற்கள் பொருத்தப்படவுள்ளன.


Click it and Unblock the Notifications
