ஆஹா.. ‛ஜெயிலர்’ படத்தை யோகி ஆதித்யநாத்துடன் சேர்ந்து பார்க்கும் நடிகர் ரஜினி! கிளம்பிய கேள்விகள்!
லக்னோ: நடிகர் ரஜினிகாந்த் உத்தர பிரதேச மாநிலம் லக்னோ சென்றுள்ள நிலையில் அங்கு அவர் அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத்தை சந்திக்க உள்ளதாகவும், அவருடன் சேர்ந்து ஜெயிலர் திரைப்படத்தை பார்க்க உள்ளதாகவும் பரபரப்பான தகவல் வெளியாகி உள்ளது. இதுதொடர்பான வீடியோ ஒன்று தற்போது வெளியாகி உள்ள நிலையில் பல கேள்விகள் கிளம்பி உள்ளன.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகி உள்ள திரைப்படம் ஜெயிலர். கடந்த 10ம் தேதி இந்த திரைப்படம் திரையரங்குகளில் வெளியானது. ஜெயிலர் படத்தை இயக்குனர் நெல்சன் திலீப் குமார் இயக்கி உள்ளார்.

இந்த படத்தில் நடிகர் ரஜினிகாந்துடன் நடிகை தமன்னா, மோகன்லால், சிவராஜ்குமார், ஜாக்கி ஷெராப் என இந்திய சினிமாவின் முன்னணி நடிகர்கள் நடித்துள்ளார்கள்.
படத்துக்கு அனிருத் இசையமைத்துள்ளார். படம் வெளியாவதற்கு முன்பே நடிகை தமன்னாவின் குத்தாட்டத்தில் வெளியான ‛காவலா' பாடம் இணையங்களை திணறடித்து பட்டித்தொட்டி எங்கும் பட்டையை கிளப்பியது. தற்போது ஜெயிலர் திரைப்படமும் திரையரங்குகள் நிரம்ப ஓடிக்கொண்டிருக்கிறது. ரஜினி ரசிகர்கள் படத்தை கொண்டாடி வருகின்றனர்.
இதற்கிடையே 'ஜெயிலர்' படத்தின் ரிலீசுக்கு முன்பே நடிகர் ரஜினிகாந்த் இமயமலைக்கு சென்றார். ரிஷிகேஷில் உள்ள தயானந்த சரஸ்வதி ஆசிரமத்திற்கு சென்று சாமியார்களை சந்தித்தார். அதோடு தயானந்த சரஸ்வதி சாமிகள் சிலைக்கு மாலை அணிவித்து பூஜை செய்ததோடு, பத்ரிநாத் கோவிலிலும் வழிபாடு செய்தார். அதன்பிறகு அவர் இமயமலை பயணத்தை முடித்து திரும்பினார்.
இந்த வேளையில் திடீரென்று அவர் ஜார்கண்ட் ஆளுநரான தமிழகத்தை சேர்ந்த சிபி ராதாகிருஷ்ணனை சந்தித்து பேசினார். மரியாதை நிமித்தமாக இந்த சந்திப்பு நடந்ததாக கூறினார். மேலும் ரஜினி காந்த் தொடர்ச்சியாக சுற்றுப்பயணத்தில் உள்ளார். இந்நிலையில் தான் இன்று அவர் திடீரென உத்தர பிரதேச மாநிலத்தின் தலைநகரான லக்னோவுக்கு சென்றார்.

அங்கு ரஜினிகாந்த் உத்தர பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத்தை சந்திக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகின. இதற்கிடையே நடிகர் ரஜினிகாந்திடம் லக்னோ வருகை பற்றி கேள்வி எழுப்பப்பட்டது. அப்போது அவர், முதல்வருடன் சேர்ந்து ஜெயிலர் திரைப்படத்தை பார்க்க உள்ளதாக தெரிவித்துவிட்டு சிரித்தபடி காரில் புறப்பட்டு சென்றார்.
இந்நிலையில் பத்திரிகையாளரிடம் நடிகர் ரஜினி பேசிய வீடியோ தற்போது இணையதளங்களில் வெளியாகி உள்ளது. இதற்கிடையே தான் நடிகர் ரஜினிகாந்த் எதற்காக யோகி ஆதித்யநாத்துடன் சேர்ந்து ஜெயிலர் திரைப்படம் பார்க்கிறார்? இந்த சந்திப்பு என்பது திரைப்படத்துக்கானதா? இல்லாவிட்டால் பின்னணியில் அரசியல் சார்ந்த விஷயங்கள் உள்ளதா? நடிகர் ரஜினிகாந்த் பாஜகவின் என்டிஏ கூட்டணியில் சேர்ந்து நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட உள்ளாரா? என சிலர் கேள்வி எழுப்பி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications