சல்மான் கான் போதைப்பொருள் பயன்படுத்துவார்.. நடிகைகளை பற்றி.. பாபா ராம்தேவ் கருத்தால் சலசலப்பு
லக்னோ: உத்தர பிரதேசத்தில் நிகழ்ச்சியில் 'சல்மான் கான் போதைப்பொருள் பயன்படுத்துவார் என்றும் நடிகைகளை பற்றி கடவுளுக்கு மட்டுமே தெரியும் என்றும்' பாபா ராம் தேவ் பேசியிருப்பது தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
அவ்வப்போது சர்ச்சைக்குரிய வகையில் பேசி பரபரப்பை ஏற்படுத்துபவர் பாபா ராம்தேவ். இவர் உத்தர பிரதேசத்தின் மொரோதாபாத் நகரில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார்.
இந்த நிகழ்ச்சியில் போதைப்பொருளுக்கு எதிரான இயக்கத்தை பாபா ராம்தேவ் தொடங்கி வைத்தார். தொடர்ந்து பாபா ராம் தேவ் பல்வேறு விஷயங்கள் குறித்து பேசினார்.

சல்மான் கான் குறித்து..
அப்போது பாலிவுட் திரையுலகம் பற்றி பேசியதுதான் தற்போது சர்ச்சைக்கு வித்திட்டுள்ளது. பாபா ராம்தேவ் கூறுகையில், ''சல்மான் கான் போதைப்பொருள் எடுத்துக்கொள்வார். அமீர் கான் பற்றி எனக்கு எதுவும் தெரியாது. போதைப்பொருள் பயன்படுத்தும் போது ஷாருக்கானின் மகன் பிடிப்பட்டு சிறையில் இருந்தார். நடிகைகளை பொருத்தவரை கடவுள் மட்டுமே அவர்களை பற்றி அறிவார். சினிமாத்துறையில் போதைப்பொருள் நிறைந்து காணப்படுகிறது.

சர்ச்சையை ஏற்படுத்திய பேச்சு
அரசியலிலும் கூட போதைப்பொருள்கள் உள்ளன. தேர்தலின் போது மதுபானம் விநியோகிக்கப்படுகிறது. போதைப் பழக்கத்தில் இருந்து இந்தியா விடுபட வேண்டும் என்று நாம் தீர்மானம் எடுத்துக் கொள்ள வேண்டும். இதற்காகத் தான் நாம் இரு இயக்கத்தை தொடங்குகிறோம்'' என்று பேசினார். பாலிவுட் திரை பிரபலங்கள் குறித்த பாபா ராம்தேவின் கருத்து சர்ச்சையை கிளப்பியுள்ளது. பாபா ராம்தேவின் இத்தகைய பேச்சு சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.

போதைப்பொருள் பேச்சுக்கள்
பிரபல நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புட் கடந்த 2020 ஆம் ஆண்டு தற்கொலை செய்துகொண்டார். அவரது மரணத்திற்கு பிறகு பாலிவுட் திரையுலகில் போதைப்பொருள் பயன்படுத்துவது தொடர்பான பேச்சுக்கள் முன்பை விட அதிகரித்துள்ளது. அதேபோல், கடந்த ஆண்டு ஷாருக்கான் மகன் ஆர்யன் கான் சொகுசு கப்பலில் நடைபெற்ற பார்ட்டி ஒன்றில் போதைப்பொருள் வைத்திருந்ததாக பிடிபட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பிறகு இந்த வழக்கில் இருந்து ஆர்யன் கான் விடுவிக்கபட்டது குறிப்பிடத்தக்கது.

உச்ச நீதிமன்றம் எச்சரிக்கை
பாபா ராம்தேவ் கடந்த ஆண்டு அலோபதி மருத்துவம் குறித்து பேசி சர்ச்சையை ஏற்படுத்தியது நினைவிருக்கலாம். கொரோனா பரவல் உச்சத்தில் இருந்த போது பாபா ராம் தேவ், அலோபதி மருத்துவத்திற்கு எதிரான கருத்துக்களை பேசியிருந்தார். பாபா ராம் தேவின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்த அகில இந்திய மருத்துவர்கள் சங்கம், உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கின் போது அலோபதி மருத்துவம் குறித்து ராம்தேவ் அவதூறு பரப்பக் கூடாது என்று உச்ச நீதிமன்றம் கடும் எச்சரிக்கை விடுத்தது.












Click it and Unblock the Notifications