‛அமேதியில் ராகுல் - ரேபரேலியில் பிரியங்காவா?’.. கார்கே கூறிய வார்த்தை! முடிவெடுக்க திணறும் காங்கிரஸ்
லக்னோ: உத்தர பிரதேச மாநிலத்தில் நேரு குடும்பத்தின் பாரம்பரிய தொகுதிகளான அமேதி மற்றும் ரேபரேலியில் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தியை களமிறக்க காங்கிரஸ் நிர்வாகிகள் கூறி வரும் நிலையில் மேலிடம் முடிவெடுக்க முடியாமல் திணறி வருகிறது. இந்நிலையில் தான் நேற்று காங்கிரஸ் தேர்தல் கமிட்டி கூட்டத்துக்கு பிறகு மல்லிகார்ஜுன கார்கே முக்கிய தகவலை தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் அதிக லோக்சபா தொகுதிகளை கொண்ட மாநிலம் உத்தர பிரதேசம். இங்கு மொத்தம் 80 லோக்சபா தொகுதிகள் உள்ளன. கடந்த 2019 தேர்தலில் பாஜக 62 இடங்களில் வென்றது. மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சி 10 இடங்களிலும், அகிலேஷ் யாதவின் சமாஜ்வாதி 5 இடங்களிலும் வென்றது.

மேலும் ஏடிஎஸ் கட்சி 2 தொகுதிகளில் வெற்றி பெற்றது. காங்கிரஸ் கட்சி பரிதாப நிலைக்கு சென்றது. காங்கிரஸ் கட்சிக்கு ஒரு எம்பி மட்டுமே கிடைத்தார். அதுவும் சோனியா காந்தி மட்டும் தான். அவர் ரேபரேலி தொகுதியில் வென்றார். மற்றபடி ராகுல் காந்தி அமேதி தொகுதியில் மத்திய அமைச்சர் ஸ்மிரிதி இரானியிடம் தோற்றார்.
இந்நிலையில் தான் வரும் லோக்சபா தேர்தலில் காங்கிரஸ் சார்பில் அமேதி மற்றும் ரேபரேலி தொகுதிக்கு இன்னும் வேட்பாளர்கள் அறிவிக்கப்படவில்லை. சோனியா காந்தி ராஜ்யசபா எம்பியான நிலையில் அங்கு மகள் பிரியங்கா காந்தி போட்டியிடலாம் என கூறப்படுகிறது. அதேபோல் மீண்டும் ராகுல் காந்தி 2வது தொகுதியாக அமேதியில் போட்டியிடலாம் என சொல்லப்படுகிறது.
உத்தர பிரதேசத்தை பொறுத்தவரை அமேதி மற்றும் ரேபரேலி நேரு குடும்பத்தின் பாரம்பரிய தொகுதிகளாக உள்ளது. இந்த 2 தொகுதிகளுக்கும் மே 20ம் தேதி (5ம் கட்ட லோக்சபா தேர்தல்) தேர்தல் நடைபெற உள்ள நிலையில் இன்னும் காங்கிரஸ் வேட்பாளர்களை அறிவிக்கவில்லை. இதற்கிடையே தான் நேற்று டெல்லியில் காங்கிரஸ் கட்சியின் தேர்தல் கமிட்டி குழு கூட்டம் நடந்தது.
இந்த கூட்டத்தில் அமேதி, ரேபரேலி தொகுதி தொடர்பாக விவாதிக்கப்பட்டது. அப்போது உத்தர பிரதேச மாநிலத்தை சேர்ந்த நிர்வாகிகள் அமேதி மற்றும் ரேபரேலி தொகுதியில் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தியை வேட்பாளராக அறிவிக்க வேண்டும் என கூறினர். ஆனால் காங்கிரஸ் மேலிடம் பாசிட்டிவான அதுபற்றி இறுதி முடிவு எதையும் எடுக்கவில்லை. அதாவது இந்த 2 தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை அறிவிக்க முடியாமல் காங்கிரஸ் தயக்கம் காட்டுவது என்பது தோல்வி பயத்தை காட்டுவதாக அரசியல் நோக்கர்கள் தெரிவித்துள்ளனர்.
இதற்கிடையே தான் நேற்றைய மீட்டிங் முடிந்த பிறகு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவிடம், ‛‛அமேதி மற்றும் ரேபரேலியில் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி வேட்பாளர்களாக அறிவிக்கப்படுவார்களா?'' என்ற கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு கார்கே, ‛இன்னும் சில நாட்கள் காத்திருங்கள். வேட்பாளர்களை கூறுகிறோம்'' என பதிலளித்தார்.
இதற்கிடையே தான் அமேதி மற்றும் ரேபரேலியில் வேட்பாளர் தேர்வில் இறுதி முடிவு என்பது மல்லிகார்ஜுன கார்கேவின் கையில் காங்கிரஸ் தலைவர்கள் ஒப்படைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதனால் இந்த தொகுதிகளில் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி போட்யிடுவார்களா? இல்லையா? என்பதை அறிய நாம் இன்னும் சில நாட்கள் காத்திருக்க வேண்டியது அவசியமாகும்.












Click it and Unblock the Notifications