தமிழ்நாட்டின் வலிமையான தலித் தலைவர்.. ஆம்ஸ்ட்ராங் கொலை சம்பவத்திற்கு மாயாவதி கடும் கண்டனம்
லக்னோ: பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் மாயாவதி, ஆம்ஸ்ட்ராங் படுகொலை சம்பவத்திற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். வழக்கறிஞரான ஆம்ஸ்ட்ராங், தமிழகத்தில் தலித் மக்களுக்காக வலுவாக குரல் கொடுத்த தலைவர். ஆம்ஸ்ட்ராங்கை கொலை செய்த குற்றவாளிகளை தமிழக அரசு தண்டிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழக மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங். 52 வயதான இவர் சென்னை பெரம்பூரில் உள்ள தனது வீட்டின் அருகே, நண்பர்களுடன் பேசிக்கொண்டிருந்த போது, அங்கு வந்த 6 பேர் கொண்ட மர்ம கும்பல் திடீரென ஆம்ஸ்ட்ராங்கை அரிவாளால் வெட்டினர்.

இதையடுத்து ஆம்ஸ்ட்ராங்கை வெட்டிய கும்பல் கண் இமைக்கும் நேரத்தில் அங்கிருந்து தப்பி ஓடியது. இந்த தாக்குதலில் படுகாயமடைந்த ஆம்ஸ்ட்ராங்கை மீட்ட அக்கம் பக்கத்தினர், உடனடியாக காவல் துறைக்கு தகவல் கொடுத்துள்ளனர். சம்பவ இடத்துக்கு பெரம்பூர் மற்றும் செம்பியம் போலீசார் விரைந்து வந்தனர். ஆம்ஸ்ட்ராங்கை மீட்டு கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
ஆனால், சிகிச்சை பலனளிக்காமல் ஆம்ஸ்ட்ராங் உயிரிழந்தார். பிரபல அரசியல் கட்சியின் மாநில தலைவர் கொடூரமாக வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் சட்டம் ஒழுங்க்கு என ஒன்று இருக்கிறதா என எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன. இந்த நிலையில், பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் மாயாவதி, ஆம்ஸ்ட்ராங் படுகொலை சம்பவத்திற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
மாயாவதி தனது எக்ஸ் தளத்தில் கூறியிருப்பதாவது:- பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழக தலைவர் ஆம்ஸ்ட்ராங்க் தனது வீட்டின் அருகிலேயே கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் கடும் கண்டனத்திற்குரியது. வழக்கறிஞரான ஆம்ஸ்ட்ராங், தமிழகத்தில் தலித் மக்களுக்காக வலுவாக குரல் கொடுத்த தலைவர். ஆம்ஸ்ட்ராங்கை கொலை செய்த குற்றவாளிகளை தமிழக அரசு தண்டிக்க வேண்டும்" என்று பதிவிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications